Monday, December 28, 2009

இராமன் அவதார புருடன் தானா?


இராமன் மானுடனா அல்லது அவதார புருடனா? இது எல்லோருக்கும் எழும் ஐயம். ஒரு அவதாரபுருடன் என்றால் ஏன் அவன் சீதையைத் தொலைத்ததற்கு (கவனிக்க- தொலைத்ததற்கு) அவ்வாறு கலங்க வேண்டும்? மனம் மயங்கி வசனங்கள் பேச வேண்டும்? மாயையால் தாக்குண்டானோ? அங்ஙனமாயின் அவன் எவ்வாறு அவதார புருடனாக முடியும்? சாதாரண மானுடனாகத் தானே இருக்க முடியும்?


இது கம்பராமயணத்தைப் படிக்கும் போது பல இடங்களில் தோன்றும் ஐயம்.


அவதார புருடன்

சரி உண்மையிலேயே இராமன் அவதார புருடன் தானா அல்லது மானுடனா? கம்பர் என்னதான் சொல்லியிருக்கிறார்?

கம்பர் காலத்தில் சைவ வைஷ்ணவச் சண்டைகள் அதிகம். மகாவிஷ்ணு பிறந்து பிறந்து இறந்து கொண்டே யிருப்பதால், அவர் கடவுளல்லர் என்பது சைவர்கள் கருத்தாக இருந்தது. கிணற்றிலே விழுந்த குழந்தையை எடுப்பதற்காகத் தானும் அக்கிணற்றிலே குதித்து மூழ்கும் தாயைப் போல, கடவுளும் மனிதர்களைக் கரையேற்றும் பொருட்டுக் கீழே இறங்குகிறார். ஆகவே மக்கள் நலம் காக்க பல்வேறு அவதாரங்கள் எடுக்கும் மகாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பது வைஷ்ணவர்கள் கருத்து.

இராமன் கடவுளா, மனிதனா என்பதற்கு ஒரு அற்புதமான ஒரு தீர்ப்பைச் சொல்கிறார் கம்பர்.

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னேர்
ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே


கம்பர்

இராமன் அவதரித்தால், அது விஷ்ணுவுக்குப் பெருமையாகாது; வேறு வேறு தேவர்களுக்கும் பெருமை தராது. இராமன் மனிதனாகப் பிறந்ததால் தெய்வப் பிறப்பு முதலியவற்றையெல்லாம் இம் மனிதப்பிறப்பு வென்று விட்டது என்கிறார் கம்பர். இராமன் மனிதனாகப் பிறந்ததால் மனித குலத்திற்கு பெருமை உண்டாயிற்று என்பது கருத்து. அதாவது மனிதனாகப் பிறந்த இராமன் தெய்வங்களுக்கெல்லாம் மேலானவன் என்பது அவர் சொல்லாமல் சொல்லும் கருத்து. எல்லா தெய்வங்களுக்கும், எல்லா தேவர்களுக்கும், எல்லா அவதாரங்களுக்கும் மேலானவன் ராமன் என்கிறார் கம்பர். உண்மைதான் இல்லையா?




Friday, December 18, 2009

கவிதை-2


இரை கவ்வும் நண்டைப் போல
ஏதோ ஓர் அவஸ்தை
என் கவிதையைக் கவ்வி இருக்கிறது

முதல் இரவுப் பெண்ணின்
முதல் சுக வேதனை போல்

விட்டு... விட்டு...
விட்டு... விட்டு...

மெல்லவும் முடியாமல்...
விழுங்கவும் முடியாமல்...

பிரசவிக்கும் முன்னேயே
பிறழ்ந்து விட்ட கவிதையினை
நாய் தன் குட்டியை உண்ணுவது போல்
விழுங்கிக் கொண்டிருக்கிறேன்
எனக்குள்ளாகவே!

Friday, December 11, 2009

கவிதை

தேடல்...

விசில் ஊதிக் கொண்டே
செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் குடும்பத்தின் பசி…

காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..

பாலியல் பெண்
அறிவாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
வயதானவனா
என்று..

விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்ந்து கொண்டிருகிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாய்.




Saturday, November 28, 2009

வலி

சிறுகதை

(லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியானது)

அவசரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த விஸ்வநாதன் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டார். வாசலில் மாலையும் கழுத்துமாய் ராதா, கூடவே சிரித்த முகத்தோடு கோட்-சூட் அணிந்து ஒருவன். பட்டுப் புடவையும், நகையும் மினுமினுக்க ‘அப்பா’ என்றாள் ராதா சற்றே தயக்கத்துடன்.

‘ஜானகி, ஜானகி’ விஸ்வநாதன் உள் நோக்கி உரத்த குரலெடுத்துக் கத்தவும், என்னவோ, ஏதோவென்று பயந்து நடுங்கிக் கொண்டே ஓடி வந்தாள் ஜானகி - விஸ்வநாதனின் மனைவி.

‘இங்க பார், இந்த அநியாயத்தைப் பார்! கடவுளே, இதைப் பார்க்கிறதுக்கா எனக்கு இந்தக் கண்ணையும், பாழாப்போன உயிரையும் கொடுத்திருக்க, அய்யோ, பகவானே, பகவானே! இப்படி மோசம் பண்ணிட்டாளே, பாதகி, நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாளே! சுயநலம் பிடிச்ச மூதேவி, துரோகி, சனியன், பீடை...’ பெருங்குரலெடுத்துக் கத்தினார் விஸ்வநாதன்.

‘அம்மா, ராதா, இது என்னம்மா கோலம், அய்யோ இப்படி மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, வயித்துல நெருப்பள்ளிக் கொட்டிட்டியே! அடிப்பாவி, இனி நான் என்ன பண்ணுவேன். அக்கம்பக்கத்துல எப்படி முழிப்பேன். சின்னவளை எப்படிக் கரையேத்துவேன்.... அய்யோ, அய்யோ, எனக்கு தாங்க முடியலையே!’ – அப்படியே வாசலில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் ஜானகி.

****************

விஸ்வநாதன் – ஜானகி தம்பதியினரின் மூத்த மகள் ராதா. அழகும் அறிவும் நிறைந்தவள். பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்தவுடன் அவளுக்கு கால் சென்டரில் வேலை கிடைத்தது. கை நிறையச் சம்பளம். சனி, ஞாயிறு லீவ், வீக் எண்ட் பார்ட்டி, அடிக்கடி டூர் என்று வாழ்க்கை ஜாலியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ரகுவைச் சந்திக்கும் வரை.

ரகு அதே கம்பெனியில் சீனியர் புரொக்ராமிங் மானேஜர். 28 வயது தான். ஆனால் அதற்குள் அந்த தலைமைப் பதவியை அடைந்து விட்டான். இன்னும் மேலே உயர வாய்ப்பு இருக்கிறது. நல்ல பேச்சுத் திறமை. எதிராளிகளைப் பார்வையிலேயே எடைபோடும் திறன் என்று எல்லாமே அவனது ப்ளஸ் பாயிண்ட்கள். புராஜெக்ட் விஷயமாக அடிக்கடி ரகுவோடு டிஸ்கஷன், மீட்டிங் என்று தொடர்புகள் அதிகரிக்க, ஒருநாள் ராதா வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டாள், ‘ ’ரகு உங்களைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், உங்களுக்குச் சம்மதமா?’

ரகுவுக்கும் ஆசைதான். அவனும் ராதா மாதிரி புத்திசாலியான, அழகான பெண்ணைத் தான் தேடிக் கொண்டிருந்தான். ஆனால், தன் அம்மா சம்மதிப்பாளா என்று ஒரு சந்தேகம் அவனுக்கு இருந்தது. அதனால் பதில் ஏதும் சொல்லாமல் வெறும் புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.

‘என்ன பதிலே காணும், ஒருவேளை என்னைப் புடிக்கலையோ? என்று ஆழம் பார்த்தாள் ராதா.

‘ஓ, காட். நான் அப்படி சொல்லவே இல்லையே!’ பதட்டமாக மறுத்தான் ரகு.

‘பின்ன...’ என்றாள் பொய்க் கோபத்துடன் ராதா.

‘உங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிப்போய் எங்க அம்மாவை அறிமுகப்படுத்தறேன். மாமியாருக்கும், மருமகளுக்கும் பிடிச்சுப் போச்சுன்னா எனக்கு ஒண்ணும் அப்ஜெக்‌ஷன் இல்ல’ என்றான்.

‘ ஓ, சரிதான். நீங்க சரியான அம்மா கோண்டுவா. நான் என்னவோ உங்களை பெரிய வீர, தீரமான ஆண்பிள்ளைன்னு இல்ல நினைச்சேன்!’

‘ அடடா, என்ன ஒரு பொஸஸிவ்னெஸ். நான் அம்மா கோண்டும் இல்ல, ஆயா கோண்டும் இல்ல. முதல்ல எங்க வீட்டுக்கு வாங்க. அங்க உள்ள மனுஷங்கள உங்களுக்குப் பிடிச்சிருந்தா உடனே டும் டும் தான். ஆமா, உங்க வீட்டுல ஒண்ணும் பிரச்சனை இருக்காதே!’ என்றான் ரகு.

‘இருக்காதுன்னு தான் நினைக்குறேன்’ என்றாள் ராதா.

‘ ஒருவேளை அவங்க ஒத்துக்கலைன்னா?’

‘அதை அப்போதைக்குப் பாத்துக்கலாம்’ சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் ராதா.

***************

ஒரு நாள் ரகுவின் வீட்டிற்குச் சென்றாள் ராதா. ரகுவின் தாய் மாலதி சற்று கர்வியாகத் தான் காணப்பட்டாள். ஆனால் பழகிய சில நிமிடங்களில் அந்நியோன்யமாகி விட்டாள். அரசு அலுவலகத்தில் சூப்ரிண்டெண்ட் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவள். அதனால் இயல்பாகவே அவளிடம் அந்த கம்பீரமும் கர்வமும் இருந்தது. ரகுவிற்கு அப்பா இல்லை. அவர் ரயில்வேயில் டாக்டராக இருந்தவர். திடீரென்று மாரடைப்பில் காலமாகி விட்டார். அப்போது ரகுவுக்கு 17 வயது. +2 முடித்திருந்தான். அதன் பிறகு அவன் சித்தப்பா டேவிட் தான் அவனைப் படிக்க வைத்து ஆளாக்கினார். ரகுவின் அப்பா தாமஸிற்கு கேரளாவில் மிகப் பெரிய வீடு இருந்தது. எல்லாவற்றையும் விற்று விட்டு சென்னைக்கு வந்து செட்டிலாகி விட்டார்கள்.

 ‘என்னம்மா, என் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா, சும்மா சங்கோஜப்படாம சொல்லு’ என்றாள் மாலதி.

 ‘ம்’ என்றாள் ராதா சந்தோஷத்துடன். ஆனால் உள்ளுக்குள் ஒரு குழப்பம். ‘ரகுவின் அப்பா பெயர் தாமஸ் என்றால்.... இவர்கள் கலப்பு மணத் தம்பதியினரோ... அப்படியென்றால் வீட்டில் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவே மாட்டார்களே!...’ மனம் குழம்பியது அவளுக்கு.

 ‘அட, என்னம்மா யோசனை, எங்களதும் காதல் கல்யாணம்தான். நான் ஹிந்து. அவர் கிறிஸ்துவர். இரண்டு பேர் குடும்பத்துலயும் ஒரே எதிர்ப்புதான். ஆனால் நாங்க மதத்தைக் காதலிக்கல. மனசைத்தான் காதலிச்சோம். அவங்க அவங்க கொள்கைப்படிதான் கடைசி வரைக்கும் வாழ்ந்தோம். அது மட்டுமில்ல. அவர் கடைசி வரைக்கும் ஒரு கிறித்துவனாத் தான் வாழ்ந்தார். நான் இன்னிக்கு வரைக்கும் ஒரு இந்துவாகத் தான் இருக்கேன். இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் மா. கடவுள் ஒருத்தர் தான். ஆனா அவர் ரூபங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் வேற வேற. ஆனா, இதெல்லாம் சரியா புரிஞ்சுக்காம இன்னைக்கு ஒருத்தருக்கொருத்தர் வெட்டு குத்துன்னுட்டு அலையுறது ரொம்ப வருத்தமா இருக்கு. சரிம்மா, உங்க வீட்டுல ஒண்ணும் பிரச்சன வராது இல்ல’ என்றாள் மாலதி.

 ‘வரும்னுதாம்மா நினைக்குறேன். அப்படி வந்ததுன்னா என்ன பண்றதுன்னு தான் புரியல... என்றாள் ராதா.

 ‘எலாம் நல்லதே நடக்கும் ராதா, கவலைப்படாதே!’ என்று ஆறுதல் கூறினாள் மாலதி.

‘சரி ராதா இன்னொரு முக்கியமான வி.ஐ.பிய உனக்கு அறிமுகப்படுத்தவே இல்லையே, வா உள்ளே! என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.

 மாலதி வீடு திரும்பும் போது அவளுக்குள் சந்தோஷம், கவலை, கோபம் என்று எல்லா உணர்வும் கலந்திருந்தது.

 *********************************

திடீரென்று ஒருநாள் விஸ்வநாதன், ஜானகி, தங்கை ரஞ்சனி என்று எல்லோரும் இருக்கும் போது விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டாள் ராதா. வீடே போர்க்களம் ஆகி விட்டது. விஸ்வநாதன் தன் பெண் கால்செண்டரில் வேலை பார்ப்பதை உறவினர்கள், நண்பர்கள் என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லி, மாப்பிள்ளை பார்க்கவும் சொல்லியிருந்தார். ராதா திடீரென்று இப்படி காதல் விவகாரத்தைச் சொல்லவும் அவருக்கு ஒரேயடியாக அதிர்ச்சியாகி விட்டது. ஒரேயடியாகக் கத்த ஆரம்பித்தார். வழக்கமான குலம், கோத்திரம், ஜாதி என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ராதா கேட்பதாக இல்லை. அவள் மிக உறுதியாக இருந்தாள். பண்ணிக் கொண்டால் ரகுவைத் தான் பண்ணிக் கொள்வது... இல்லாவிட்டால்... எல்லாவற்றையும் உதறி விட்டு பேசாமல் சமூக சேவை செய்யப் போய் விடுவது என்பது அவள் எண்ணமாக இருந்தது.

ராதாவிற்கு மன உறுதி மிக அதிகம். காரணம், அவள் சிறுவயது முதலே விஸ்வநாதனின் அம்மா பார்வதியிடம் கிராமத்தில் வளர்ந்தவள். பார்வதியிடம் இருந்த அந்த வைராக்கியம் ராதாவிடமும் இருந்தது.

என்ன சொல்லியும் ராதா கேட்பதாக இல்லை என்பதால், ‘ நீ இப்படி கண்டவனையும் இழுத்துண்டு வந்தேன்னா, என் பொணத்தைத் தான் பாக்க முடியும்’ திட்டவட்டமாகச் சொல்லி விட்டு ஆபிஸிற்குப் போய் விட்டார் விஸ்வநாதன்.

அதுமுதல் வீட்டில் ராதாவுடன் யாரும் பேசுவதில்லை. ராதாவும் அவர்களிடம் அதிகம் பேச முற்படவில்லை. சிறுவயது முதலே ராதா பாட்டியிடம் வளர்ந்ததாலோ என்னவோ அப்பா, அம்மா, தங்கை என்று அவளுக்கு அதிக ஒட்டுதல் ஏற்படவில்லை. பாட்டிதான் உயிர். பாட்டிதான் எல்லாம் அவளுக்கு. ஆனால் பாட்டி... பாட்டி... பாட்டியை நினைத்தபோது கண் கலங்கியது ராதாவிற்கு.

 ராதா வழக்கம் போல் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். ஆபிஸ் கேண்டினிலேயே மூன்று வேளை உணவையும் முடித்துக் கொண்டு தான் வீட்டிற்கு வருவாள். அதனால் வீட்டில் அவளுக்கு தேவைகள் என்று அதிகம் இருக்கவில்லை. ரஞ்சனி மட்டும் அவ்வப்போது ஏதாவது பேசுவாள். ஜானகி சாடை, மாடையாக ஏதாவது சொல்லுவாள். அவ்வளவுதான். ஒரு மாதம் ஆகிவிட்டது. ரகுவின் பேச்சையே யாரும் எடுக்கவில்லை.

*********************************

ராதா அவனை மறந்து விட்டாள். வயசுக் கோளாறு. நாளானால் சரியாகிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜானகிக்கும் விஸ்வநாதனிற்கும் பேரிடியாய் மாலையும் கழுத்துமாய் வந்து நின்றாள் ராதா.

*********************************

திகைத்துப் போய் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள் ராதா,

’அப்பா, அம்மா... நீங்க ஆரத்தி எடுக்க வேண்டாம், வான்னு கூப்பிட வேண்டாம். அது உங்களுக்கு அசிங்கமாவும், அவமானமாவும் இருக்கலாம். ஆனா, என் புருஷனை இப்படி நிக்க வச்சுப் பேசறது எனக்கு அசிங்கம், அதுனால அட்லீஸ்ட் அந்த வராந்தாவுலயாவது வந்து உட்கார்ந்துக்கறேன். எனக்கு உங்க கூட நிறையப் பேசணும்.’ சொல்லிவிட்டு கணவனுடன் வாசல் வராந்தா பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

 ”அப்பா, வயசான காலத்துல நான் உங்க பேச்சை எல்லாம் மீறி இப்படி செஞ்சது தப்புதான். ஒத்துக்கறேன். ஆனா, யோசிச்சுப் பாருங்கப்பா. வாழ்க்கைல நீங்க செஞ்சதெல்லாம் நியாயம் தானா... என்னை சுயநலம் பிடிச்சவன்னு சொன்னீங்க. சரிதான்... ஆனா, நீங்க மட்டும் சுயநலமே இல்லாதவங்களாப்பா.... சொல்லுங்கப்பா... சொல்லுங்க.... உங்க அம்மா எங்க... என்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த என் பாட்டி எங்க... சொல்லுங்கப்பா... சொல்லுங்க...”

 ‘அம்மா ராதா... அது வந்து....’

 ‘ ஏம்பா மென்னு முழுங்குறீங்க... தயங்காம உண்மையச் சொல்லுங்க... எங்க அவங்க...’

விஸ்வநாதன் சற்று நேரம் பதில் சொல்ல முடியாமல் நின்றார்.

 ’இப்படி பேசாம நின்னிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? சொல்லுங்கப்பா.. உங்க அம்மா எங்கேன்னு சொல்லுங்க ‘

சற்று தயங்கிய விஸ்வநாதன், ‘என்னத்த சொல்றது... அவ எங்கயோ காணாமப் போயிட்டா. புத்தி ஸ்வாதீனம் இல்லாமப் போனதால எங்க போனா, எப்படிப் போனான்னு தெரியல. நானும் எல்லா இடமும் தேடிப் பார்த்தேன் அவ போன இடம் எதுன்னு தெரியல. கண்டுபிடிக்க முடியல. அதுனால பேசாம இருந்திட்டேன். இது உனக்குத் தெரிஞ்ச விஷயம் தானே! அதுக்கு என்ன இப்போ?’ என்றார்.

 ”இல்லப்பா... நீங்க பொய் சொல்றீங்க. நானும் அப்படித்தான் இது நாள் வரைக்கும், நம்பிட்டிருந்தேன், உண்மை தெரியற வரை.”

 ‘ உண்மையா.. என்ன உண்மை? நீ என்ன சொல்றன்னே எனக்கு ஒண்ணும் புரியல.

 உங்க பாட்டி காணாமப் போனதுக்கும் நீ இவரை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?!’ என்றாள் ஜானகி.

 ‘சம்பந்தம் இருக்கும்மா... சம்பந்தம் இருக்கு... பாட்டி காணாமப் போகல. காணாமப் போக வச்சிருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்’

 ‘எ... எ... என்ன சொல்ற நீ’ என்றார் வாய் குழறியவாறு விஸ்வநாதன்.

ஜானகியோ திகைத்துப் போய் ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஆமாம்பா, திடீர்னு என்னோட அத்தை, அதான் உங்க அக்கா, கனிஷ்கா ஏர்லைன் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. அது தெரிஞ்சதும் பாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. அங்கயும் இங்கயும் ஓடறதும் எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் என் பொண்ணு, என் பொண்ணுன்னு கட்டிப் பிடிச்சுக்கறதும் அவங்க வழக்கமாப் போச்சு. எந்த டாக்டர்கிட்ட காண்பிச்சும் சரியாகல. நான் ஸ்கூல் லீவ்ல சேலம் ஹாஸ்டல்லேர்ந்து இங்க வர்றப்போவும் பாத்திருக்கேன். என்னையும் அப்படித்தான் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. பொண்ணு பொண்ணுன்னு கொஞ்சினாங்க. அவங்களுக்காக ரொம்ப பரிதாபப்பட்டிருக்கேன். அவங்களுக்கு சீக்கிரம் சரியாகனும் கடவுள்ட்ட வேண்டிக்கிட்டிருக்கேன்.

 ஆனா, திடீர்னு ஒருநாள் நீங்க போன் பண்ணீங்க. பாட்டி எங்கேயோ காணாமப் போயிட்டான்னீங்க. பேப்பர்ல, டி.வில விளம்பரம் பண்ணியிருக்காதகவும், போலீஸ்ல சொல்லியிருக்கறதாகவும் சொன்னீங்க. நானும் நம்பினேன். அப்புறம் பாட்டி எங்கேயோ போயிட்டா... கிடைக்கவே இல்லைன்னுட்டீங்க. அப்பவும் நான் நம்பினேன். ஆனா, அப்பா, இப்பத்தான் தெரியுது நீங்க எப்பேர்ப்பட்ட ஏமாற்றுக்காரர்னு. இப்படி நீங்க பொய் சொல்லுவீங்கன்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கல.’

 ‘அப்பா, நீங்க என்னை துரோகம் பண்ணிட்டேன்னு சொல்றீங்க... ஆனா நீங்கதான்பா துரோகம் பண்ணியிருக்கீங்க. அம்மா, நீ சொல்ற என்ன சுயநலவாதின்னு. ஆனா, நீதாம்மா உண்மையிலேயே சுயநலவாதி.” சொல்லிவிட்டுக் கதறினாள் ராதா.

 ஜானகியும் விஸ்வநாதனும் பிரமை பிடித்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.

 ’அப்பா... என்ன ஒரு கல் நெஞ்சம் இருந்திருந்தா பெத்த அம்மாவை யாருக்கும் தெரியாம கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய், பத்மநாப சுவாமி கோயில் வாசல்ல விட்டுட்டு வந்திருப்பீங்க.

அம்மா... என்ன ஒரு சுயநலம் இருந்தா பெத்த தாய்க்குச் சமமான மாமியாரை, அதுவும் மனநிலை சரியில்லாதவளை அந்த மாதிரி கோயில் வாசல்ல அநாதையா விட்டுட்டு வர்றதுக்கு சம்மதிச்சிருப்பே. சொல்லும்மா... சொல்லு... யார் சுயநலவாதி? சொல்லுங்கப்பா யார் துரோகி?’ - பட படவெனப் பொரிந்தாள் ராதா.

‘ அம்மா ராதா.. அது வந்து... அது வந்து...’ திக்கினார் விஸ்வநாதன்.

 ‘ உங்க அப்பா தான்...’ என்று இழுத்தாள் ஜானகி.

‘போதும்.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக்கறது. மொத்தத்துல ரெண்டு பேரும் சேர்ந்துதான் பண்ணியிருக்கீங்க... நீங்க பண்ணினது பெரிய பாவம். நல்ல வேளையா ரகு வீட்டுக்குப் போனேனோ எனக்கு உண்மை தெரிஞ்சது... ரகு அம்மா மட்டும் இல்லன்னா என் பாட்டி நிலைம என்ன ஆயிருக்கும்..’ என்று கண் கலங்கினாள் ராதா.

 ‘ அம்மா... அம்மா... இப்போ எங்க இருக்காங்க... நீ பார்த்தியா அவங்கள?’ கண்ணீர் மல்கக் கேட்டார் விஸ்வநாதன்.

 ‘பார்த்தேன். பார்த்தேன். பாட்டிய ரகு வீட்டுல தான் பார்த்தேன். ஆமா, ரகுவோட அம்மா, அப்பா கேரளாவைச் சேர்ந்தவங்க. ரகு அம்மா எதேச்சையா பத்மநாப சுவாமி கோயில் போயிருக்கறப்போ நம்ப பாட்டியப் பார்த்திருக்காங்க. ஒருவேளை சாப்பாடுக்காக அங்க இங்கயும் அலையறதையும், எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் கட்டிப்பிடிக்க போறதையும், அதுனால அவங்க பாட்டியை அடிச்சுத் துரத்தறதையும் பார்க்க அவங்களுக்கு சகிக்கல. உடனே அவங்களுக்கு அவங்க அம்மாவோட ஞாபகம் வந்திருச்சி. அவங்களுக்கும் சித்த பிரமை வந்துதான் காலம் ஆனாங்களாம். அதுனால நம்ம பாட்டிய தன்னோட வீட்டுக்குக் கூட்டி வந்து, ரகுவோட அப்பா டாக்டர்ங்கறதுனால வீட்டுல வச்சே சிகிச்சை பண்ணியிருக்காங்க. அவங்களும் ஓரளவுக்கு குணமாகியிட்டு வர்றப்போ ரகுவோட அப்பா காலமாயிட்டார். அப்புறம் எல்லோரும் மெட்ராஸுக்கே வந்துட்டாங்க. பாட்டியையும் கூடவே கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. ரகுவோட வீட்ல தான் பாட்டி இருக்காங்க’ என்றாள் ராதா விசும்பலுடன்.

 ‘ அய்யோ... அய்யோ... உண்மைதான்மா... நாங்க சுயநலத்தினாலயும், போலி அந்தஸ்து கௌரவத்துனாலயும் பெரிய தப்பு பண்ணிட்டோம். என்னை மன்னிச்சிடும்மா, மன்னிச்சிடு. சார்.. ரகு சார்... மன்னிக்கணும் மாப்பிள சார்... எங்கள மன்னிச்சிடுங்கோ. இத்தனை வருஷம் எங்க அம்மாவைக் கண்ணும் கருத்துமா பாத்துண்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ். நாங்க உடனே அவளப் பாக்கணும்... அவ கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணும். ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாவம் போகுமா. பெத்த தாயைப் பிச்சை எடுக்க வச்சுட்டேனே.. அய்யோ.. அய்யோ. அரற்றினார் விஸ்வநாதன்.

‘மன்னிச்சிடுங்கோ.. மன்னிச்சிடுங்கோ. தெரியமப் பண்ணிட்டோம்’ அரற்றினாள் ஜானகி. எல்லோரும் காரில் ஏறிக் கொள்ள கார் ரகுவின் வீடு நோக்கி விரைந்தது.

**********

 ரகுவின் அம்மா மாலதி எல்லோரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். ஜானகியும் விஸ்வநாதனும் துடித்துக் கொண்டிருந்தனர் விசாலத்தைப் பார்க்க. உள்ளறையில் பஜ கோவிந்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. சுவரில் சாய்ந்து கண் மூடி பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி.

பேச்சுக்குரல் கேட்கவும் கண் விழித்தாள். ‘வாப்பா ரகு... வாம்மா மாலா... யார் இவாள்லாம்’ என்றாள்.

‘ அம்மா... அம்மா என்னைத் தெரியலையாம்மா... நான் தான் உன் புள்ள விஸ்வநாதன். இது உன் மருமக ஜானகி. இதோ மூத்தவ ராதா. இளையவ சீதா. ராதாவத் தான் நம்ம ரகுவுக்குக் கொடுத்திருக்கு. இப்ப தான் கல்யாணம் ஆச்சூ. உங் கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கோம். அம்மா, பழசைல்லாம் மறந்திடும்மா.. எங்களை மன்னிச்சிடும்மா.. வாம்மா நம்ம வீட்டுக்குப் போவோம்’ என்றார் விஸ்வநாதன் குரல் தழு தழுக்க ஜானகியின் காலில் விழுந்தவாறே!.

 ‘ எல்லாரும் அமோகமா ஷேமமா இருங்கோ... ஆமா, நீங்க யாரு...?’ என்றாள் ஜானகி, விஸ்வநாதனைப் பார்த்து.

 ‘ அய்யோ அம்மா, எங்கள சுத்தமா மறந்து போயிட்டியா... நான் தான் உன் பிள்ள விஸ்வநாதன். உன்னை வீட்ல வச்சிக்கத் துப்பில்லாம, அந்தஸ்து, கௌரவம்னு பார்த்து கண்காணாம கோயில்ல போய் விட்டுட்டு வந்தவன். இதோ, இவ ஜானகி. உன் மருமகள். உன்னைக் காப்பாத்தத் துப்பில்லாம நான் செய்த தப்புக்கு உறுதுணையா இருந்தவ... இப்பவாச்சு எங்களை அடையாளம் தெரியுதா?’ என்றார் விஸ்வநாதன் சோகமாய்.

 ‘ நன்னா இருக்கு போங்கோ. என் பிள்ளை, மருமகள், மகள்னு எல்லோரும் கனிஷ்கா பிளைட் விபத்துல எப்பவோ செத்துப் போயிட்டா... இதோ.. இந்த மாலாவும் ரகுவும்தான் எங்கேயோ பார்த்து என்னைக் கூட்டிண்டு வந்து பொண்ணாவும் புள்ளையாவும் இருந்து கவனிச்சிண்டிருக்கா... நீங்களாவது... என் பிள்ளையாவது... சுத்த பேத்தல். போய் ஆக வேண்டிய கல்யாண வேலையக் கவனிங்கோ. நான் ஸ்லோகம் சொல்லணும்’ சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டாள் ஜானகி.

 ராதா கண்ணீருடன் விசும்பிக் கொண்டிருக்க விஸ்வநாதனும் ஜானகியும் பிரமை பிடித்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.

*************************************

Thursday, October 1, 2009

முதன் முதலாய்...


முதல் தமிழ் இதழ்                                   மாசத்தினச் சரிதை


முதல் தமிழ் வார இதழ்                       தினவர்த்தமானி


முதல் நாத்திக இதழ்                             தத்துவ விசாரணி


முதல் அரசியல் இதழ்                         சுதேசமித்திரன்


முதல் அறிவியல் இதழ்                    தமிழர் நேசன்


முதல் ஆன்மிக இதழ்                         சைவ உதய போதினி (1882)


தமிழ் நாட்டின் முதல் வார இதழ்
 (ஆங்கிலம்)                                                 மெட்ராஸ் கூரியர் (1785)


தமிழின் முதல்
வாரம் இருமுறை இதழ்                      ஜூனியர் விகடன்


தமிழின் முதல் ஜனரஞ்சக இதழ்           ஆனந்த போதினி


தமிழ் இலக்கிய இதழ்களின்
முன்னோடி                                                         மணிக்கொடி


முதல் தமிழ் நாவல்                                     பிரதாப முதலியார் சரித்திரம்


தமிழகத்தின் முதல் கார்ட்டூனிஸ்ட்      பாரதியார்


சென்னைப் பல்கலையின்
முதல் பட்டதாரி                                             சி.வை.தாமோதரம்பிள்ளை


‘செம்மொழி' என தமிழை                            பரிதிமாற் கலைஞர் (எ)
முதன் முதலில் கூறியவர்                      வி.கோ சூரிய நாராயண சாஸ்திரியார்


பாரத் ரத்னா விருது பெற்ற
முதல் தமிழ் இசைக் கலைஞர்             எம்.எஸ். சுப்புலட்சுமி


‘பாரத்' விருது பெற்ற
முதல் நடிகர்                                                    உத்தம்குமார்


பாரத் ரத்னா விருது பெற்ற
முதல் தமிழ் நடிகர்                                      எம். ஜி. இராமச்சந்திரன்


தமிழ்நாட்டின் முதல்
 A.C. தியேட்டர்                                                மினர்வா


தமிழின் முதல்
குழந்தை நட்சத்திரம்                                 பேபி சரோஜா


தமிழின் முதல்
கலர் திரைப்படம்                                         அலிபாபாவும் நாற்பது திருடர்களும்


தமிழின் முதல்
ஸ்டீரியோபோனிக் திரைப்படம்                               ப்ரியா


தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம்                 ராஜராஜசோழன்


தமிழ்நாட்டின் மிகப்பெரிய தியேட்டர்                  தங்கம் தியேட்டர் (மதுரை)


தமிழின் முதல் டி.டி.எஸ். படம்                              குருதிப்புனல்


தமிழின் முதன்முதல்
இரட்டைவேடப் படம்                                                உத்தமபுத்திரன் (பியூ.சின்னப்பா)



Monday, September 14, 2009

கொஞ்சும் தமிழ் கொஞ்சம்...

கொஞ்சும் தமிழின் சிறப்பைப் பற்றி  கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?


தமிழ்க்கடவுள்                                             முருகன்




தமிழ்க் குழந்தை                                       திருஞானசம்பந்தர்



தமிழ் மூதாட்டி                                          ஒளவை



தமிழ்த்தாத்தா                                              உ.வே.சாமிநாதய்யர்



தனித்தமிழ்த் தந்தை                                மறைமலையடிகள்



தமிழ்நாடகத்தந்தை                                 சங்கரதாச சுவாமிகள்



தமிழ் உரைநடைத்தந்தை                    வீரமாமுனிவர்



தமிழ்க் கடல்                                             ராய.சொக்கலிங்கனார்



தமிழ்நாட்டு மாப்பசான்                       புதுமைப்பித்தன்



தமிழ்நாட்டு வால்டர் ஸ்காட்         கல்கி



தமிழ்ச் சிறுகதைத் திருமூலர்       மௌனி



தமிழ் அகராதியின் தந்தை              வீரமாமுனிவர்



தமிழ் வரலாற்று நாவல்களின்
 தந்தை                                                      கல்கி



தமிழ் நாடகத்
தலைமை ஆசிரியர்                         பம்மல் சம்பந்த முதலியார்



தமிழ் இலக்கணத் தந்தை             தொல்காப்பியர்



தமிழ்நாட்டு காந்தி                          அறிஞர்அண்ணா



தமிழ்க்கவிச் சக்கரவர்த்தி           கம்பன்



தமிழ்க்கவியரசர்                             திருத்தக்கத்தேவர்



தமிழகத்தின் முதல்
அரசவைக் கவிஞர்                     நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை



தமிழ் பேனா மன்னர்                 டி.ஸ். சொக்கலிங்கம்



தமிழ்நாட்டு பெர்னாட்ஷா       அறிஞர்அண்ணா



தமிழ்ச் சிறுகதைத் தந்தை     வ.வே.சு. அய்யர்



தமிழ் புதுக்கவிதையின்
முன்னோடி                                    மகாகவி பாரதியார்



தமிழ் இலக்கிய
 விமர்சனத் தந்தை                   வ.வே.சு. அய்யர்



தமிழ்ச்சிறுகதை மன்னர்       புதுமைப்பித்தன்

Monday, August 31, 2009

ஜே.கே சில குறிப்புகள்

தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக் கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர். பாரதி, புதுமைப்பித்தன் இவர்களின் வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனைக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமைந்தவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை.



ஜெயகாந்தன் காலம் என்று தனித்து குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவரது படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆணித்தரமாக தனது இருப்பைப் பறைசாற்றின. 1934-ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் ஜே.கே என தமிழ் வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஜெயகாந்தன். 76 வயதான ஜே.கே, தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்த ஓர் சாதனையாளர் என்றால் அது மிகையில்லை.



 
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெயகாந்தன், ஐந்தாம் வகுப்பு வரையே கல்வி பயின்றார். வீட்டுச்சூழல் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு இவரது மாமா உறுதுணையாக இருந்தார். விழுப்புரத்தில் தன் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். மாமா கம்யூனிசக் கொள்கைகளில் மிக்க ஆர்வமுடையவர். அவர் மூலம் ஜே.கேவுக்கு பாரதியும், கம்யூனிச சித்தாந்தங்களும் அறிமுகமானது. அதன் பின் அவரது வாழ்கைப் பயணம் புதிய பாதையில் அடிபோடத் தொடங்கியது.



 
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலகத்தில் - அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகளை விற்றும் கழித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டது. ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணி புரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது. சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது.



 
ஜெயகாந்தன் பாரம்பரிய எழுத்தாளர் பரம்பரையில் இருந்து வந்தவர் அல்ல. திட்டமிட்டு இலக்கிய உலகில் புகுந்து சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டவரும் அல்ல. அவரது வாழ்க்கை அனுபவங்களே அவரது படைப்பாக்கமாகப் பரிணமித்தது. அவரது இலக்கிய வாழ்க்கை 1950-களில் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன் போன்ற பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் துவங்கின.



 
கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஜெயகாந்தன் பற்றுக் கொண்டிருந்தார் என்றாலும் உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், சி.பி.ஐ-யிலிருந்து அவர் விலகினார். பின்னர் காமராஜருடைய தொண்டராக மாறினார்.



 
மளிகைக் கடைப் பையன், மருத்துவரின் உதவியாள், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரையில் சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரனிடம் உதவியாளனாக இருந்தது,.... ஃபுரூஃப் ரீடர், பத்திரிகை உதவி ஆசிரியர்... என்று அவரது வாழ்க்கையின் பல வேறுபட்ட அனுபவக் குவியல்கள் எழுத்துக்களாக முகிழ்த்தது. அது சிறுகதை, நாவல், நாடகம், உரைநடை, கட்டுரை, பத்தி எழுத்து, சினிமா என வளர்ந்தது. புதுமைப்பித்தனின் வீச்சும், பாரதியின் புரட்சியும் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் தெரிந்தது. அவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இலக்கிய இதழ்களில் மட்டுமல்லாது வெகுஜன இதழ்களிலும் அவரது எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்டன. அதனால் அவை தமது தகுதியை உயர்த்திக் கொண்டன.



இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயகாந்தன் போற்றப்பட்டார். அதன் பின் திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்று அவரது வாழ்க்கை முற்றிலும் புதிய தளத்தில் அமைந்தது. “பாதை தெரிகிறது பார்” - இப்படத்தின் பாடலாசிரியராக சினிமா உலகினுள் காலடி எடுத்து வைத்தார். புதுமைப்பித்தனுக்கு பின்பு நவீன தமிழ் இலக்கிய போக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஜெயகாந்தன், தமிழ் சினிமா உலகிலும் திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது நாவலான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" போன்றவை திரைப்பபடமாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் உன்னைப் போல் ஒருவன் நாவலுக்கு திரைப்பட வடிவம் கொடுத்து 3 வாரங்களில் படத்தை இயக்கி வெளியிட்டது மிகப் பெரிய சாதனையாக அக்காலத்தில் கருதப்பட்டது. அதற்கு தேசிய விருதும் கிடைத்தது.




தமிழ்ப் படங்களையே பார்த்தறியாத “கர்மவீரர் காமராஜா;” மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தார் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் அழைப்பைத் தட்டிக்கழிக்காத காமராஜரும் இப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினார். காமராஜருடன் இருந்து இப் படத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் (ஏ.வி.எம்) ஜெயகாந்தனிடம், “இப்படத்தை தேசியவிருதுக்கு வேண்டுமென்றால் அனுப்புங்கள், கதையை எனக்குத் தாருங்கள். வர்த்தக ரீதியில் லாபம் கிட்டக் கூடியவிதமாக இதனை நான் எடுக்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார். ஆனால் ஜெயகாந்தன் அதற்கு மறுத்துவிட்டார்.



 
சாதாரண மனிதர்களின் உலகம் முதல் அறிவுஜீவித்தன வாழ்வின் அழுத்தங்கள் வரை, சமுதாய முரண்பாடுகள், சிக்கல்கள் போராட்டங்கள், நகர்ப்புற தொழிலாளர் வர்க்கம், விழிப்புற்ற பெண்கள், தனிமனித பலம், பலவீனம், ஆன்மீக விசாரணைகள் என ஜெயகாந்தனின் கதைகள் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டதாக அமைந்தன. அதனாலேயே அவை வெளிவந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஜெயகாந்தனின் படைப்புலகம் வாழ்க்கை மீதான நேசிப்பையும் மனித நேயத்தையும் உளமாரப் பேசுபவையாக உள்ளன.



 
எந்தவொரு எழுத்தாளர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு உண்டு. ஜெயகாந்தன் தனது நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் பெரிதும் சிறப்புடையன. அவரது முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது 'முன்னுரை இலக்கியம்' எனும் ஓர் தனித்த இலக்கிய வகைமையை நம்மால் அடையாளம் காண முடியும்.



 
பிரபல 'ஆனந்த விகடன்' வார இதழ் ஜெயகாந்தனின் சிறுகதைகளைக் கேட்டு வாங்கி முத்திரைக் கதைகளாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. தொடர்ந்து பல புகழ்பெற்ற சிறுகதைகளை விகடனில் எழுதினார் ஜெயகாந்தன். அவற்றுள் ஒன்று தான் 'அக்கினிப் பிரவேசம்' என்னும் சிறுகதை. இது ஆனந்தவிகடனில் வெளியாகி சர்ச்சைகளையும், விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது.



 
ஜெயகாந்தனுடைய படைப்புக்கள் ருஷ்ய, பிரெஞ்சு, செக் ஆங்கில, ஜெர்மனி, உக்ரேனிய மொழிகளிலும், இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். விருதுகளால் தனது படைப்பிற்கும் தனது படைப்புகளால் விருதுக்கும் பெருமை ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை. சாகித்திய அகாதமி விருது, சோவியத் நாட்டின் நேரு விருது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, கலைஞர் விருது, ஞானபீட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்ப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.



 
”எழுத்து எனது ஜீவன் - ஜீவனம் அல்ல” என்று மார் தட்டிச் சொன்ன ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே!. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றால் அஃது மிகையில்லை.

Friday, August 28, 2009

மியூசிக் தெரபி - இசைச் சிகிச்சை

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன். இசை கேட்டு, உலக உயிர்கள் மட்டுமல்ல, இறைவனே மயங்கியதாகக் கூறப்படுவது அதன் பெருமையை விளக்குவதாகும். வெறும் பக்தி வெளிப்பாட்டிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே இசை என்பதில்லை. அதன் மூலம் நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதே அதன் சிறப்பான முக்கியத்துவம்.


தற்போது மாற்றுச் சிகிச்சை முறை என்பது எல்லா இடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. உண்மையில் மாற்றுச் சிகிச்சை முறை என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? பயன்கள் என்ன? என்பது பற்றி பலர் முறையாக அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.


தற்போதுள்ள ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக உள்ள இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், யோகா தெரபி போன்றவையே மாற்று மருத்துவச் சிகிச்சை முறை என அழைக்கப்படுகின்றது. இதில் ‘மியூசிக் தெரபி' எனப்படும் இசை வழியான சிகிச்சை முறையும் ஒன்றாகும். இவற்றின் முக்கிய பயன்கள் என்னவென்றால் பின்விளைவுகள் ஏதும்  ஏற்படாது என்பது தான்.


 
இசைவழி சிகிச்சைமுறை
பல்வேறு விதமான நோயுற்ற மனிதர்களுக்கு, அவர்கள் தம் நோயின் தன்மைக்கேற்றவாறு குறிப்பிட்டவகை இசைக் கோர்வைகளைப் பயன் படுத்தி நோயினைத் தீர்க்க முனைவதே மியூசிக் தெரபி எனப்படும் இசைவழிச் சிகிச்சை முறையாகும்.


குறிப்பிட்ட வகை இசையின் மூலம், பிறழ்வான நடத்தையுடையோர், மாறுபட்ட குணாதிசியங்களை உடைய மனிதர்கள், சிலவகை மன நோயால் பாதிக்கப்பட்டோர், உடல்நலக் குறைபாடு உடையவர்கள் எனப் பலருக்கும் குறிப்பிடத் தகுந்த விதத்தில் முன்னேறம் அடைவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


புகழ்பெற்ற பலமருத்துவமனைகளிலும் மாற்றுச் சிகிச்சை முறையாக இசை பயன்படுத்தப்படுகின்றது. சான்றாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இசைவழி சிகிச்சைக்கு எனத் தனியாக ஒரு பிரிவு செயல்படுவதைக் கூறலாம்.


பல்வேறு ராகங்கள் பல்வேறு நோய்களின் கடுமையைக் குறைப்பதுடன், அவை குணமாவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்படுள்ளது. மேலும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக, மாணவர்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி நன்கு படிக்க, பல்வேறு பிரச்னையான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் (STRESS) குறைய, கோபம் போன்ற குணங்கள் மறைய என இசை பல விதங்களில் துணைபுரிகின்றது.


நடைமுறை வாழ்வில் இசை மூலம் அமைதி பெறுதல்.
பல்வேறு பிரச்னைகளும் போராட்டங்களும் கொண்ட நெருக்கடியான கால கட்டத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு தன்னுடைய மன அழுத்ததைக் குறைக்க கோவில் போன்றவற்றிற்குச் சென்று ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபடவோ, வீட்டிலே அமர்ந்து தியானம் செய்யவோ முடிவதில்லை.


மனம் அடங்கினால் தானே தியானம் செய்ய முடியும்? மனதை அடக்க என்ன செய்வது?. அதற்குத் தான் இசை பயன்படுகின்றது.

இசை மூலம் ஒருவன் மன அழுத்ததைக் குறைப்பதுடன், அமைதியையும், மன நிம்மதியையும் பெறலாம். அதற்கான இசைக்கோர்வைகள் அடங்கியவை ஒலிநாடாக்களாகவும் (ஆடியோ கேசட்) குறுந்தகடுகளாகவும் (சி.டி) கடைகளில் கிடைக்கின்றன.


இல்லத்திலேயே தனியான, வெளிநபர் தொந்தரவில்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கும் நபர், தன்னுடைய டேப்ரெக்காடரிலோ, மியூசிக் சிஸ்டத்திலோ இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும். பின்னர் தரையிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொண்டு உடலைத் தளர்ச்சியாக வைத்துக் கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி இசையினைக் கேட்க முற்படவேண்டும்.


தன்னுடைய அனைத்துப் பிரச்னைகளையும் மறந்து, தன்னையும் இசையையும் தவிர வேறு எந்த நினைப்பும் இல்லாதவாறு மனதை ஒருமுகப்படுத்தி இசையில் ஆழும் பொழுது மனம் அளவற்ற நிம்மதி அடைவதுடன், புதியதொரு உற்சாகமும் அடைகின்றது. இது சிறப்புடன் செயலாற்ற ஊக்கப்படுத்துவதுடன், தன்னம்பிக்கையோடு எதையும் எதிர் கொள்ளவும் தூண்டுகின்றது.



எனவே வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி மன நிம்மதியற்றுத் தவிப்போர் வீட்டிலிருந்தவாறே இச்சிகிச்சை முறையைப் பின்பற்றலாம். இது அதிக செலவில்லாததும், பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததுமான முறை.


மியூசிக் தெரபி குறித்த பல ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள் சென்னை கிரி டிரேடிங் ஏஜென்சியிலும், (MUSIC THERAPY- Dr.P.Bharathy) லாண்ட்மார்க்கிலும் கிடைக்கின்றன. அப்பல்லோ மருத்துவமனையும் (‘Music for Pregnancy and babies', ‘Music for Sleep and Relaxation') என்ற ஒலிநாடாக்களையும் அது போன்று பல குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளது. மற்றும் TIMES MUSIC வெளியிட்டுள்ள Shravanam போன்ற பல ஒலிநாடாக்களும், இளையராஜாவின் ‘How to name it?, Nothing but wind போன்ற ஒலிநாடாக்களும், திருமதி ரேவதி கிருஷ்ணா, வீணை எஸ். காயத்ரியின் வீணை இசைக் குறிப்புகளும் மனதை அமைதிப்படுத்த வல்லவையே!

மன நலம் காப்போம்! குண நலம் பெறுவோம்!

Wednesday, August 26, 2009

பிரியவாதினி - நிறைவுப்பகுதி

மறுநாள் காலை, மதங்க தேவர் விடுதியில் அனுஷ்டானங்களை முடித்து விட்டு தியானத்தில் இருந்த போது அரசாங்க அதிகாரி ஒருவர் வந்து அடிபணிந்து பல்லவச் சக்கரவர்த்தி ‘ காலை பத்து நாழிகைக்கு மேல் அங்கு வந்து ஆச்சார்யரை வணங்க விரும்புவதாக' தெரிவித்துக் கொண்டார்.

'அப்போது பிரியவாதினியைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் உதவியை நாடலாமா?' என்று கூட முனிவருக்குத் தோன்றிற்று.


‘ஒருக்கால் இவள் ஸ்ரீபுரம் தனியாகப் போயிருப்பாளா?' அவருக்கும் பலவித மனக்கவலைகள் அலைமோதிக் கொண்டிருந்தன.


பத்துநாழிகைக்கு மேல் சக்கரவர்த்தி பரிவாரங்களுடன் விடுதிக்கு வருகை தந்தார்.


சக்கரவர்த்தியை மதங்க முனிவர் எதிர்கொண்டு வரவேற்று ‘ வர வேண்டும்.., வர வேண்டும்.. இந்த ஏழை தன்யனானேன்' என்று அழைத்து ஆசனத்தில் அமரச் செய்தார்.


பரிவாரங்களில் ஒருசிலர் பெரிய தந்தப்பேழைகளைக் கொண்டு வந்து முனிவரின் முன்னால் வைத்தார்கள்.


பிறகு சக்கரவர்த்தி ஒரு ‘சமிக்ஞை' மூலம் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு, ஆசனத்தை விட்டு எழுந்து ‘தாங்கள் கருணை கூர்ந்து என் அழைப்பினை ஏற்று இங்கு வந்து இந்த விழாவை நடத்திக் கொடுத்தற்கு பல்லவ நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். தங்கள் குருகுலம் அமைந்த நந்திமலையில் ஒரு குடைவரைக் கோயில் அமைப்பதற்காக நூறு சிற்பிகளை இங்கிருந்து அனுப்பியிருக்கிறேன்! அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் தங்கள் குருகுலத்திற்கும் வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்திருக்கிறேன்..' என்று கூறிய சக்கரவர்த்தி, சட்டென்று பேச்சை நிறுத்தி, ‘ஆச்சார்ய தேவா!!.. தாங்கள் ஏதோ மனதில் தீவிரமாக விசனப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே!..' என்று வினவினார்.


மதங்கர் ஒரு கணம் மௌனமாக இருந்து விட்டு, ‘ சக்கரவர்த்தி... என்னுடைய பிரதம சிஷ்யையான ஒரு இளம் பெண்ணை நேற்று பிற்பகல் முதல் காணவில்லை. அவளைத் தேட தாங்கள் ஏற்பாடு செய்ய இயலுமா, இது என் வேண்டுகோள்!..' என்றார் மதங்கர்.


சக்கரவர்த்தி ஆசனத்தில் அமர்ந்து சில கணங்கள் மௌனமாக இருந்தார்.


அப்போது மதங்கர் மீண்டும் சொன்னார். ‘.. சில காலத்திற்கு முன் பல்லவ நாட்டைச் சேர்ந்த குணசேனன் என்னும் இளைஞன் என்னிடம் நடனமும், இசையும் சில காலம் பயின்றான். அவன் இங்கே அருகில் உள்ள ஸ்ரீபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். அவன் நடனத்திலும் இசையிலும் மிகவும் சமர்த்தனாக இருந்தான். அவன் என்னுடைய பிரதம சிஷ்யன் என்று சொல்வதற்கே பெருமைப்படுவேன். இந்தப் பெண் எனக்கு பிரதம சிஷ்யையாக இருந்தவள். இந்த இளம் பெண் அந்த வாலிபனை மனதால் மிகவும் விரும்பினாள்.. அந்த வாலிபன் ஒரு வருடத்திற்கு முன்னால் தன் தாய் தந்தையரை பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிப் போனவன் திரும்பி வரவேயில்லை. நானும் இந்தப் பெண்ணிற்காக சீடர்களை அனுப்பி ஸ்ரீ புரத்தில் குணசேனனைத் தேடிப் பார்க்க எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பலனில்லாமல் போய்விட்டது!..'


சக்கரவர்த்தி ஒருகணம் மௌனமாக இருந்து விட்டு, ‘நேற்று சன்மானம் வாங்கிக் கொள்ளாமல் போன பெண் அவள் தானா?..' என்று வினவினார்.


‘ஆமாம், பிரபு!'


‘.. ஆச்சார்ய தேவா! அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் எல்லாம் கிடைத்து விட்டன. அவளைத் தாங்கள் இனித் தேடிப் பயனில்லை!..'


‘பிரபோ!.. அது என்ன?'


‘.. ஆமாம்.. அந்தப் பெண் நேற்றுப் பிற்பகல் இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள புத்த விஹாரத்திற்குச் சென்று புத்த பிக்ஷுணி ஆகி விட்டாள்'


‘ஆஹா!.. அப்படியா? அவள் குணசேனனைக் காணாமல் மனமுடைந்து போய் விட்டாள் என்றே நினைக்கிறேன். எவ்வளவோ இடங்களில் நானும் குணசேனனை தேடிப் பார்த்தேன்!..'


சக்கரவர்த்தி ஒரு கணம் ஆசனத்திலிருந்து எழுந்து தன் சிரசிலிருந்து மணி மகுடம் எடுத்து மதங்க தேவரின் திருவடியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்.


‘ஆச்சார்ய தேவா!.. இந்த குணசேனனை எங்கெல்லாம் தேடினீர்கள்?.. என்னை மன்னித்து அருள வேண்டும். நான் அந்தப் பெண்ணிற்கு எவ்விதத் தீங்கும் செய்துவிடவில்லை...'


மதங்கர், சக்கரவர்த்தியை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு அதிர்ந்தவராக ‘குணசேனா!.. சக்கரவர்த்தியா!?.. தாங்களா?!..' என்று பதறினார்.


‘இந்த ஏழைதான் தங்கள் சிஷ்யன் குணசேனன். இதோ இந்த தந்தப்பேழையில் ஓலைச்சுவடியில் நானே எழுதி வைத்த தங்கள் அமர இலக்கியம் ‘பிருஹத்தேசி' இருக்கிறது. இதுவே இந்த எளியவனுடைய காணிக்கை. அந்தப் பெண் இயற்றிய தமிழ்ச் செய்யுளை நந்தி மலை குடைவரைக் கோயிலில் கல்வெட்டுக்களாகப் பதிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்தப் பேழையில் நானே உருவாக்கிய ஒரு புதியதோர் யாழ் இருக்கிறது! இந்த யாழ், அவளுடைய யோசனையின் பேரில் தாங்கள் விவரித்த சுத்த, சாயலக, சங்கீர்ண ராகங்களை நன்றாக மீட்டக் கூடியது.'


‘சக்கரவர்த்தி! எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்க அந்தக் கலையரசி என் கைவிட்டு போய் விட்டாள் என்று நினைக்கும் போது...'


'புத்த, ஜைன மதங்கள் வாழ்க்கையைத் துறப்பதால் மோட்சத்தை அடைய முடியும் என்று மோட்சத்திற்கு தான் வழிகாட்டுகின்றன. வாழும் தர்மங்களை விவரித்து, சிறப்பாக வாழ்ந்து மோட்சத்தை அடைய அவை வழி சொல்லவில்லை!.. ஒரு மாபெரும் கலையரசியை இந்த மதம் விழுங்கி விட்டது... அந்த மதங்களை வேரோடு களைவதிலேயே நான் என் வாழ்நாள் முழுவதையும் செலவிடுவேன்..'


மதங்கர் அதிர்ந்து போய் நின்றார்!


‘இந்த யாழின் பெயர்..' என்று சற்று நிறுத்தினார் சக்கரவர்த்தி.


‘பெயர்?..'


‘இதன் பெயர்.. பிரியவாதினி!'.. என்று சொன்ன சக்கரவர்த்தியின் கண்கள் நீர்ச்சுனைகளாய் நிரம்பி இருந்தன.


ஆசிரியர் குறிப்பு:

நந்திமலை என்று கதையில் குறிப்பிட்டது பிற்காலத்தில் குடுமியான்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கே மகேந்திரபல்லவன் ஆணையின் பெயரில் ஒரு குடைவரைக் கோவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.


இந்தக் கோவிலில் இசைக் கல்தூண்கள் ஏழு சுரங்களை வாசிக்கக் கூடிய அளவில் உள்ளன. இது உலகப் பிரசித்தி பெற்றது.


இந்த மலைச்சாரலின் தென்பகுதியில் உள்ள ஒரு பாறைக் கல்வெட்டில், முப்பத்தெட்டு வரிகளில் ஒரு செய்யுள் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வரியில் 64 எழுத்துகள் இருக்கின்றன. 64 எழுத்துகளிலும் இசை, இலக்கணக் குறியீடுகள் காணப்படுகின்றன.


இந்தக் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரே பாறை மேல் ஒரு ஆசானும், அருகே ஒரு கமண்டலமும் சிற்பங்களாக உள்ளன.


நமது நாட்டு இசை மரபில் நடனத்தோடு இணைந்தது இசையாகும். இசை தனியாகப் பாடப்பட்டதில்லை.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மதங்கர் எழுதிய 'பிரஹத்தேசி' என்னும் வடமொழி நூல் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திற்குப் பிறகு ஒரு முக்கியமான இசை, இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. இந்நூல் இப்பொழுது முழுமையாகக் கிடைக்கவில்லை.


மகேந்திரவர்மன், ருத்ராச்சாரியாரிடம் இசை பயின்றவன். அவனுக்கு குணசேனன் என்ற பெயரும் உண்டு. இவன் உருவாக்கிய புதிய யாழின் பெயர் 'பரிவாதினி' என்று சொல்லப்படுகிறது.


'பரிவாதினி' என்ற வடமொழிச் சொல்லுக்குப் பொருள் சரியாக வரவில்லை. அது பிரியவாதினியாகவே இருக்கக் கூடும்.


வடமொழியில் வல்லவனான மகேந்திரவர்மன் முதலில் ஜைன மதத்தில் இருந்து பிறகு சைவ மதத்தைத் தழுவியதாக வரலாறு. இவன் எழுதிய வடமொழி நாடகம் ‘மத்தவிலாசம்' புத்த, ஜைன மதங்களின் குறைபாடுகளை கேலி செய்வதாக காணப்படுகிறது.


(முற்றும்)


நன்றி : இந்தக் கதையை இணையத்தில் பதிப்பிக்க அனுமதி தந்த எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

Monday, August 24, 2009

எழுத்தாளர் பூரம் சத்யமூர்த்திக்கு ஆர்.வி. விருது

(செய்தி - நன்றி தினமணி )


எழுத்தாளர்கள் பூரம், ரேவதிக்கு ஆர்.வி. விருது


சென்னை, ஆக. 23: ஆர்.வி. அறக்கட்டளை சார்பில், "பூரம்' எஸ்.சத்தியமூர்த்தி, "ரேவதி' டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகியோர் இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்.வி. விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுடன் அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.


சிறந்த நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான ஆர்.வி.யின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 29-ல் அனுசரிக்கப்படுகிறது.


அன்றைய தினம் சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள சங்கராலயம் அரங்கில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தா விருதுகளை வழங்குகிறார்.


மேலும் "சாதனையாளர் ஆர்.வி' என்ற நூலின் முதல் பிரதியையும் அவர் வெளியிடுகிறார். அதை எழுத்தாளர் பெ.சு.மணி பெறுகிறார்.


நிவேதிதா பதிப்பகம் தயாரித்து வழங்கும் "ஆர்.வி. சிறுகதைகள்' தொகுதி 1, தொகுதி 2 என்ற இரண்டு நூல்களின் முதல் பிரதியை "தினமணி' நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிடுகிறார். இதை எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) பெறுகிறார்.

************
வயதான காலத்திலும் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்காக உழைத்து வரும் பெரியவர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
வணக்கங்கள்!

பிரியவாதினி - 3 & 4

3

‘சிசிரருது' தொடங்கும்போது ஒருநாள் பகலில் பாடத்தை முடித்தவுடன் குணசேனன், ஆசார்யரிடம் பிரார்த்தித்துக் கொண்டான்.


‘ஸ்வாமி ஒரு விக்ஞாபனம், அடியேன் ஸ்ரீபுரத்தை விட்டுவந்து வெகுகாலமாகி விட்டது. என்னுடைய வயதான தாய், தந்தையர் என்னைக் காண ஆவலுடன் இருப்பார்கள். தங்கள் அனுமதியின் பேரில் நான் ஒரு தடவை என் தாய் தந்தையரை வணங்கி விட்டு ஒரு மாத காலத்தில் திரும்பி வருவதாக யோசனை உதித்திருக்கிறது. தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்.'


‘குணசேனா, மங்களம் உண்டாகட்டும். விரைவில் திரும்பிவர வேண்டும்' என்று ஆசிர்வதித்தார் ஆசார்ய தேவர்.


குணசேனன் அன்று மாலையில் குடிலுக்குத் திரும்பி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே சதங்கை ஒலி கேட்டது.


‘பிரியவாதினி, வரவேண்டும்... ஏன் சற்று வாட்டமுற்றிருக்கிறாய்' என்று கேட்டான் குணசேனன்.


‘ஒன்றுமில்லை ஸ்வாமி' என்று சொல்லி பிரியவாதினி சற்று மௌனமாக இருந்தாள்.


‘பிரியவாதினி, நீ எப்போதும் போல மகிழ்ச்சியாகக் காணப்படவில்லை'


‘ஸ்வாமி, இந்த ஏழை உங்களிடம் ஓர் வேண்டுகோள் விடுக்கலாமா?'


‘நிச்சயமாக, நான் செய்யக் கூடிய உதவி என்ன இருக்கிறது?'


‘ஸ்வாமி, தாங்கள் இப்பொழுது ஸ்ரீபுரத்திற்கு அவசியம் செல்ல வேண்டுமா?' -பிரியவாதினியின் அழகிய விழிகளில் ஆழங்காண முடியாத தாபமும், கவலையும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன!


‘ஆமாம். என்னுடைய வயதான தாய், தந்தையர் இவ்வளவு மாதங்களாக என்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் மிகவும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களைக் கண்டு, ஆசி பெற்று, உடனே திரும்பி விடுவேன்.'


பிரியவாதினி சில கணங்கள் மௌனமாக நின்றாள்.


‘ஸ்வாமி! இந்த ஏழையையும் தாங்கள் அழைத்துச் செல்ல முடியாதா?...' என்று கேட்ட பிரியவாதினி விம்மல்களோடு அவன் காலடியில் விழுந்து வணங்கினாள்.


குணசேனன் பதறிப்போனான்!


‘ஸுகுமாரி!.. நீ வீணாகக் கலங்க வேண்டாம். நான் விரைவில் திரும்பி வருகிறேன்!


அவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனை படர்ந்தது.


‘ஸ்வாமி! தாங்கள் இல்லாமல் என்னால் ஒரு கணமும் இருக்க இயலாது என்று தோன்றுகிறது!...' என்று விம்மினாள் பிரியவாதினி.


‘ நானும் உன்னை விட்டு பிரிய விரும்பவே இல்லை. இப்போது நீ எனக்கு விடை கொடு, விரைவில் நான் திரும்பி வருகிறேன்' என்றான் குணசேனன்.



4



‘ சிசிரருது' முடிந்து ‘வசந்தருது' தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் மாலைவேலையில் பிரியவாதினி ராஜபாட்டையில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள்! இரண்டு மாதங்கள் ஆகியும் குணசேனனைக் காணவில்லை! குணசேனனின் நண்பன் வித்யாதரனும் அனுமதி பெற்று ஸ்ரீபுரம் போயிருந்தான்! இவர்களைப் பற்றிய விவரம் யாரிடம் கேட்பது என்று அவளுக்குப் புரியவில்லை!


இப்படிப்பல மாதங்களாகியும் குணசேனன் திரும்பி வரவில்லை. இந்த வருடம் வசந்த ருதுவின் தொடக்கத்தில் பல்லவச் சக்கரவர்த்தியிடமிருந்து மதங்க முனிவருக்கு ஓர் அழைப்போலை வந்தது. காஞ்சித் தலைநகரில் நடனக் கலை விழா ஏற்பாடாகியிருப்பதாகவும், மதங்க முனிவர் தன் நடன கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சக்ரவர்த்தி அழைப்பு விடுத்திருந்தார். வைகாசி மாதத் தொடக்கத்தில் சக்கரவர்த்தி தேர்கள் அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.


செய்தி கேட்டு பிரியவாதினி சற்றே தெளிவடைந்தாள்.


‘காஞ்சித்தலைநகருக்குப் போனால் அதற்கருகே உள்ள ஸ்ரீபுரத்தில் குணசேனனை சந்திக்க இயலுமல்லவா?, அப்படியே குணசேனனும் அந்த நடன நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பாரா?'


வைகாசி மாதத்தில் தேர்கள் வந்து விட்டன. காஞ்சிக்குக் கிளம்பும் முன் பிரியவாதினி ஆச்சார்யரை அடிபணிந்து ‘ஸ்வாமி! என்னுடைய அந்தரங்கத்தை தங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்!... அந்த குணசேனன் இன்னும் திரும்பி வரவில்லை. அவரில்லாமல் என்னால் வாழ முடியாது என்றே தோன்றுகிறது!.. இப்போது நாம் செல்லும் போது ஸ்ரீபுரத்தில் அவரைப் பற்றி விசாரித்து வர தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விம்மினாள்'


‘பிரியவாதினி!.. நானே அதை மனதில் நினைத்திருக்கிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்!..' என்றார் மதங்க முனிவர்.


காஞ்சி அரண்மனையில் நடனக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன. பல்லவ சக்கரவர்த்தி மகேந்திர வர்மர் மதங்க முனிவருக்கும், அவருடைய சிஷ்யர்களுக்கும் எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தார். அரசாங்க அதிகாரிகள் எல்லோரும் நன்றாக உபசரித்து, பணிவிடை செய்யக் காத்திருந்தார்கள்.


பிரியவாதினியின் மனம், எப்பொழுதும் ஸ்ரீபுரத்தில் உள்ள குணசேனனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.


கலை நிகழ்ச்சிகள் தொடங்கிய முதல் நாள் பிரியவாதினி நடனமாடிய போது அவளுடைய கண்கள் மக்கள் கூட்டம் நிரம்பிய அந்த மண்டபத்திலும், மற்ற காஞ்சிநகர் கலைஞர்கள் மத்தியிலும் குணசேனனையே தேடி அலைந்தன. பத்து நாட்கள் நடந்த வசந்த விழாவிலே பத்துநாட்களும் சக்கரவர்த்தியும் பட்டமகிஷியும் சபையில் வந்தமர்ந்து நடனங்களை ரசித்தார்கள். பிரியவாதினிக்கு ஏக்கம் தான் மிஞ்சிற்று!


மதங்கர் இரண்டு சீடர்களை ஸ்ரீபுரத்திற்கு அனுப்பி குணசேனனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தார். ஆனால் அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது.


இந்த விழாக்களின் கடைசிநாளில் மதங்க முனிவருக்கு பல்லவச் சக்கரவர்த்தி சன்மானங்கள் கொடுத்து விசேஷமாய் கௌரவித்ததோடு அவருடைய சிஷ்யர்கள் யாவருக்கும் தனித்தனியாக பரிசுப் பட்டாடைகளையும், பொற்கிழிகளையும் வழங்கினார். ஆனால் அப்போது பிரியவாதினியை மட்டும் காணவில்லை.


மதங்க தேவர் அரண்மனை விடுதிக்குத் திரும்பியதும் மிகவும் கவலையுற்றவராய் பிரியவாதினியைத் தேடி அழைத்து வருவதற்கு சீடர்களை அனுப்பினார்.


எங்கு தேடியும் பிரியவாதினி அகப்படவில்லை.


(தொடரும்)



Sunday, August 23, 2009

பிரியவாதினி - 2

2


பகுதி -1

'கிரீஷ்மருது' தொடங்கிய சமயம். மதங்க முனிவர் பகல் உணவிற்குப் பிறகு இருபது நாழிகையளவில் வழக்கம் போல தன்னுடைய அறையில் பிரியவாதினிக்கு மட்டும் அவருடைய சங்கீத இலக்கணங்களை விவரிக்கத் தொடங்கினார்.


ஒருகணம் தியானித்தபின், 'பிரியவாதினி அந்த இளைஞன் குணசேனனை இங்கே அழைத்து வா!' என்று பணித்தார்.


'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று சொல்லி துள்ளி எழுந்து பிரியவாதினி வெகு விரைவில் குணசேனனை அழைத்து வந்தாள்.


அவன் வந்து வணங்கி எழுந்ததும் மதங்கர் ஆசிர்வதித்து விட்டு, 'குணசேனா, இன்றுமுதல் பிரியவாதினியோடு சேர்த்து உனக்கும் சங்கீத இலக்கணங்களை விவரிக்க எண்ணுகிறேன். சித்தமாக இருப்பாயா?...'


'காத்திருக்கிறேன் ஸ்வாமி, அடியேன் பாக்கியம்..'


அப்போது பிரியவாதினியின் முகமும் சற்றே மலர்ந்ததை குணசேனன் கவனிக்காமலில்லை.


‘பரத முனிவருடைய இசை இலக்கணம் பல நூற்றாண்டுகளாக அப்படியே காப்பாற்றி வருகிறோமே தவிர அதை ஆராய்ந்து வளர்ச்சியடைவதற்கு யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை. அந்தப்பணியை நான் சில வருட காலமாக மேற்கொண்டு சில இலக்கண விரிவாக்கங்களை சூத்திரங்களாக வடமொழிக் கவிதையில் இயற்றினேன். இதைப் பிரியவாதினி மட்டும் சிலகாலமாக என்னிடம் கற்று வருகிறாள். இதை நீயும் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு இந்த இலக்கண அலங்காரங்களைக் கற்றுத்தர ஒப்புக் கொள்வாயல்லவா?...


'தங்கள் ஆக்ஞை ஸ்வாமி..' என்று அடிபணிந்தான் குணசேனன்.


அன்று முதல் ‘ஹேமந்தருது'வின் முடிவு வரை குணசேனனும், பிரியவாதினியும் மட்டும் அந்த இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்து கொண்டார்கள். ஏறத்தாழ ஐந்நூறு ஸ்லோகங்களை இயற்றி முடித்த மதங்கமா முனிவர், இருவரையும் மனதுக்குள்ளே ஆசிர்வதித்தார்.


'ஸ்வாமி! பரதமுனிவர் எழுதிய 18 ‘ஜாதிகளை' 18 ‘ராகங்'கள் என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். தங்களூடைய இலக்கண அலங்காரங்கள் மூலம் அவைகள் பதினெட்டாயிரமாகப் பெருகி வளர முடியும். இதில் துருவகானத்தில் உள்ள அலங்காரங்களை தங்கள் இலக்கணப்படி இந்த அடியவள் ஒரு தமிழ்ச் செய்யுளாக தங்கள் கிருபையால் இயற்ற முடிந்திருக்கிறது. இந்தச் செய்யுளை வித்யார்த்திகளுக்கு கற்றுக் கொடுப்பது சுலபமாக இருக்குமல்லவா?...' என்று கேட்டாள் பிரியவாதினி ஒருநாள்.


‘ஆமாம். இங்கே அநேக தமிழ்ப்புலவர்கள் இசை கற்றுக் கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.'


‘அந்தச் செய்யுளகளை தங்கள் முன் பாடிக்காட்டலாமா?'


குணசேனனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


பிரியவாதினி அந்தச் செய்யுளைப் பாடினாள்.


‘மிகவும் நன்றாக இருக்கிறது. இதை இனி வித்யார்த்திகளுக்கு நீ கற்றுத் தரலாம்!..'


குணசேனன் அடிபணிந்து, ஸ்வாமி! அடியேனும் இதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.. அடியேனுக்கு தமிழ்ச் செய்யுள் இயற்றும் புலமை இல்லை. ஆனால் வடமொழியில் கவிதை எழுதுவேன். பிரியவாதினியின் தமிழ்ப்புலமையைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைகிறேன்...' என்றான் குணசேனன்.


‘குணசேனா!.. அவள் ஒரு தமிழ்ப்புலவரின் மகள். அதுமட்டுமல்ல; இங்கே குருகுலத்திற்கு வருகின்ற தமிழ்ப்புலவர்களிடமும் தமிழ்ச்செய்யுள் இயற்றுவதற்கு கற்றுக் கொண்டு இருக்கிறாள்.. வடமொழி, தமிழ் இரண்டிலுமே இவள் புலமை பெற்றவள்!...'


'அந்தச் செய்யுளை இந்த ஏழைக்கும் கற்றுத்தரும்படி ஆசார்யர் பணிக்க வேண்டும் ஸ்வாமி!'


‘அப்படியே ஆகட்டும்' என்றார் மதங்க தேவர்.


குணசேனனும், பிரியவாதினியும் மதங்க தேவரின் இசை, இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்த பின், ஒருநாள் பிரியவாதினி கேட்டாள்.


'ஸ்வாமி! இந்த வடமொழி இசை இலக்கண சூத்திரங்களுக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டாமா?...'


‘அதைச் செய்யக் கூடிய வல்லமை பெற்றவன் குணசேனன் தான்! அவனே அதற்கு பெயர் சூட்டட்டும்!'


‘ஸ்வாமி, இது மாபெரும் இலக்கியம். இதை வடமொழியில் ‘ப்ருஹத்தேசி' என்று சொல்லலாம் என்றான் குணசேனன்.


மதங்க முனிவர் மெல்லப் புன்னகை புரிந்தார்!
 
(தொடரும்)

Saturday, August 22, 2009

பிரியவாதினி - பூரம் சத்தியமூர்த்தி

79 வயதாகும்   பூரம் சத்தியமூர்த்தி  அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர். கலாரசனை மிக்கவர். தற்போது முற்றிலும் பார்வை இழந்த நிலையிலும் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வருகிறார். (அவர் சொல்லச் சொல்ல நண்பர்கள் எழுதி வருகின்றனர்). 1960களில் எழுதி அவர் பரிசு பெற்ற சிறுகதைகளுள் ஒன்று இங்கே...
அவரைப் பற்றிய விவரங்கள் இங்கே...
 
- - - - - **********************************************************************************
பிரியவாதினி
பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லையில் நந்திமலைச் சாரலில் வசந்த காலத்தில் ஒருநாள் காலை நேரம்! அங்கே பாறையைப் பின்னணியாகக் கொண்டு நீண்ட சதுர வடிவத்தில் ஒரு மண்மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மண்மேடையில் ஒருபுறம் பதினைந்து இளங்குமரிகள் நடன உடை தரித்து அஞ்சலி முத்திரையுடன் கண்களை மூடித் தியானத்தபடி நாட்டியத்திற்குச் சித்தமாக நின்றார்கள்! இன்னொருபுறம் பதினைந்து இளங்குமாரர்கள் அதே போல் சித்தமாக நின்றார்கள்! அவர்களுக்கெதிரே ஆசனம் போன்று அமைந்து ஒரு பாறை மேல் மதங்க முனிவர் தியானம் செய்தபடி அமர்ந்திருந்தார். அவருக்கு இடதுபுறத்தில் தரையில் நான்கு இளம்பெண்கள் இசைக்கருவிகளுக்கு ஸ்ருதி ஊட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு வலது புறத்திலே சில பார்வையாளர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிலே இரண்டு இளைஞர்கள் புதுமுகங்களாகத் தென்பட்டார்கள்!

யாழின் மெல்லிய இசை ஸ்ருதியை இழைத்தது.

மதங்கதேவர் ஒரு ஜதிஸ்வரத்தைப் பாடத் தொடங்கினார்.

‘ஸா, தாபாம கா ப ரிக பாம கரீ
கரீ ஸாரிஸா தத ஸா ரீ கா பா பதரீஸா
ஸா ரி கா பபத ரி....'

அந்த வித்யார்த்திகள் மிகவும் சுறுசுறுப்பாக தாளக்கட்டு விடாமல் நடனம் செய்தார்கள்!

பெண்கள் பகுதியில் முன்னால் நின்றிருந்த ஓர் அழகிய இளங்குமரி மிகச்சிறப்பாக ஆடி அடவுகளைத் தெளிவாக அபிநயித்தாள்! சிலர் தவறு செய்யும் பொழுது மதங்கர் இடைமறித்து, அந்தப் பெண்ணை மறுபடி ஆடச் செய்து மற்ற வித்யார்த்திகளும் அதைக் காணும்படிச் செய்தார். இதற்குப் பிறகு சில சித்தர் பாடல்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக அபிநயித்துக் காட்டினார்கள்.

இப்படி அந்த நடனப்பயிற்சி ஏறத்தாழ ஆறு நாழிகைகள் நடைப்பெற்றன. பின்னர் அது முடிந்ததற்கு ஆசார்யர் ‘சமிக்ஞை' செய்யவே வித்யார்திகள் ஒவ்வொருவரும் வந்து தனித்தனியாக அவரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பெண்களின் முதன்மையாக நின்ற அந்த இளம்பெண் மிகவும் அடக்கத்துடன் ஆசார்யர் முன் வந்து வணங்கி எழுந்து விநயமாகத் தெரிவித்தாள்!

‘ஆசார்யதேவரே! தங்களை நமஸ்கரிக்க இரண்டு புது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்!'

மதங்கர் கண்களைத் திறந்து பார்த்தார்.

அந்த இரண்டு இளைஞர்களும் முன்னால் வந்து சில பழங்களை அவர் முன் ஒரு தட்டில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ‘அபிவாதநம்' சொன்னார்கள்.

‘ஆசார்யதேவா! நாங்கள் இருவரும் பல்லவ நாட்டைச் சேர்ந்தவர்கள்!.. காஞ்சிக்கு அருகே உள்ள ஸ்ரீபுரத்திலிருந்து வருகிறோம்!... என் பெயர் ‘குணசேனன்'. இவன் என் நண்பன் ‘வித்யாதரன்'! நாங்கள் இருவரும் காஞ்சியில் சிலகாலம் நடனமும், இசையும் பயின்றவர்கள்... இந்தக் கலையை விருத்தி செய்து கொள்வதற்காக தங்கள் திருவடியை தஞ்சம் அடைந்திருக்கிறோம்... எங்களுக்கு அநுக்ரஹிக்க வேணும்!...'

‘நீங்கள் இருவரும் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள்?..'

‘ஸ்வாமி... நாங்கள் இருவரும் க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.. அடியேன் கொஞ்சம் ‘சாமகானம்' ‘அத்யயனம்' செய்திருக்கிறேன்.

‘மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் எந்த ஆசாரியரிடம் நடனமும் இசையும் பயின்றீர்கள்...'

‘குலபதி ஆசார்யர் ருத்ராசாரியாரிடம் பயின்றிருக்கிறோம்..'

‘ஆஹா... அவரிடம் தான் அடியேன் சிறுவயதிலே பாடம் பயின்றேன். அவருடைய ஆக்ஞையின் பேரில் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நந்திமலைச் சாரலில் குருகுலத்தை அமைத்துக் கொண்டேன். அவர்தான் எப்பேர்பட்ட மகாபுருஷர்... அவர் சுகமாக இருக்கிறாரா?...

‘ஸ்வாமி, அவர் ‘காலகதி' அடைந்து இரண்டாண்டுகள் ஆகி விட்டன. அவர் தான் கடைசித் தறுவாயில் தங்கள் பெயரைச் சொல்லி, தங்களிடம் எங்கள் ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுமாறு பணித்தார்.'

'அப்படியா, நீங்கள் இருவரும் குருகுலத்திலே தங்கிப் பாடம் கேட்கலாம்'

இளைஞர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.

‘தீர்காயுஸ்மான் பவா!.. பிரியவாதினி இந்த பிரம்மச்சாரிகளை நம்முடைய ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பாயாக!..”

'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று அந்த இளநங்கை நமஸ்கரித்து எழுந்தாள்.

பிரியவாதினி அந்த இரண்டு இளைஞர்களையும் மிகவும் பணிவுடன் அழைத்துச் சென்றாள். அந்த இடத்திலிருந்து அரை நாழிகை தொலைவில் மதங்கருடைய ஆஸ்ரமம் தென்பட்டது. அதை ஒட்டி பல குடில்கள் இருந்தன. ஒருபுறம் இளங்குமரர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இளம்பெண்களோடு சற்று வயது முதிர்ந்த தாதிமார்களும் பலவித அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அகன்று பரந்த ஆஸ்ரமத்திலே அமைந்த நடுமுற்றத்தில் ‘ கார்ஹ பத்ய', ‘ஆன்வாஹார்யபசன', ‘ஆஹவனீய' ஆகிய மூன்று அக்னிகுண்டங்கள் லேசாகப் புகையை எழுப்பிக் கொண்டிருந்தன. வேதம் பயிலும் வித்யார்த்திகள் சிலர் அந்த அக்னியிலே ஹோமம் செய்து கொண்டிருந்தார்கள். ஆஸ்ரமத்திற்கு பின்புறத்தில் பசுக்கள் கட்டப்பட்ட கொட்டில்களில் சில பிரம்மச்சாரிகள் பசுக்களை பராமரித்தார்கள். பெண்கள் பகுதியில் ஒரு பகுதியினர் பகல் உணவிற்காக பழங்களையும், காய்கறிகளையும் நறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தாதிமார்கள் பெண்களுக்கு அலங்காரம் செய்வதிலும், நகைகளை எடுத்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

குணசேனையும், வித்யாதரனையும் பிரியவாதினி மிகவும் பணிவுடன் ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றாள். ‘ஸ்வாமி.. நீங்கள் இருவரும் இந்தக் குடிலில் தங்கிக் கொள்ளலாம்.. அங்கே ஒரு மண் பானையில் சுத்தமான நீர் இருக்கிறது. உங்கள் இருவருக்கும் எது தேவையானாலும் என்னிடம் தெரிவித்துக் கொள்ளலாம். இந்த அடியவள் அதை நிறைவேற்றக் காத்திருப்பாள்.'

குணசேனன் அவளுடைய பணிவையும் ‘அதிதி சத்கார'த்தையும் கண்டு மிகவும் வியந்து போனான். ‘பிரியவாதினி மிகவும் நன்றி'...

அப்போதுதான் குணசேனன் அவளுடைய அழகிய முகத்தை நேருக்கு நேர் கண்டான். ‘ஆஹா, இவள் தான் எவ்வளவு அழகிய பொற்கொடியாக இருக்கிறாள்! இவளுடைய அங்க அசைவும், சொல்லழகும் தான் எவ்வளவு நளினமாக இருக்கின்றன!'

‘.... தங்களுக்குத் தேவையான நடன ஆடைகளும் சதங்கைகளும் நான் கொண்டு வந்து தருகிறேன்.. சரியாக பதினைந்து நாழிகைக்கு ஆராதனை முடிந்து ஆரத்தி ஆனபின் ஆசார்ய தேவரோடு எல்லோருக்கும் பிக்க்ஷை அளிக்கப்படுகிறது. நீங்கள் அங்கே சித்தமாக வந்து விடலாம்!...'

'பெண்ணே! உன் உபசாரங்களையும் தெளிவான பேச்சையும் கண்டு மிகவும் வியக்கிறேன்... இந்த ஆஸ்ரமமே காளிதாசன் வர்ணித்த கன்வ மகரிஷி ஆஸ்ரமம் போல் காட்சியளிக்கிறது... அங்கே வாழும் சகுந்தலையாக நீ தோன்றுகிறாய்!...'

பிரியவாதினி மெல்லப் புன்னகை புரிந்தாள். அவள் கன்னங்கள் இரண்டிலும் லேசாக செம்மை படர்ந்தது.

(தொடரும்)

Thursday, August 6, 2009

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை - ஒரு பார்வை - பகுதி - 2

இந்த நாவலின் மூலம் கிருஷ்ணன் வைக்கும் வாதங்கள் மிக முக்கியமானவை. சமூகம், மதம், அரசியல், கல்வி, சினிமா, ஆன்மீகம் என்பது பற்றி இந்த நாவல் முன் வைக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. அரசியல் குறித்து நம்பியும் கண்ணனும் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்கள் நுட்பம் சார்ந்தவை. காந்தியின் அரசியல், கம்யூனிஸ்ட்களின் அரசியல் வாழ்க்கை, தி.முக.வின் வெற்றி என எல்லாமே சற்று அதிகமாகவே இந்நாவலில் விமர்சனத்துள்ளாகுகின்றன. குறிப்பாக கம்யூனிச சித்தாங்களை, தத்துவார்த்தங்கள் குறித்து இந்நாவல் சற்றுக் கடுமையாகவே விமர்சிக்கிறது எனலாம்.

நாவலில் கம்யூனிஸ்ட் நம்பி கூறுவதாக வரும் கீழ்கண்ட உரையாடல் மிக முக்கியமானது.

”முகுந்தன், மதம் நமது நாட்டில் மிகப் பெரிய உண்மை. அது நாம கண்ணை மூடிகிட்டா மறைஞ்சி போயிடாது. நாம் அநியாயத்தை எதிர்த்துப் போராடறதுக்கு மதம் உதவியா இருக்கும்னு நினைச்சா அதோடு கை குலுக்க நாம தயங்கக் கூடாது. காந்தி இதைத்தான் அவர் பாணில, கொஞ்சம் குழப்பமான முறைல செய்ய நினைச்சாரு."

“மதத்தை அணைச்சிகிட்டா மதம் நம்மையே மாத்திடும். முதல்ல நல்லா இருக்கும். ஆனா நம்மோட சொந்த ஆத்மாவைக் கரையேத்தற முயற்சில நாம மக்களை மறந்திடுவோம். அவங்க பிரச்சனைகளை மறந்திடுவோம்” என்ற முகுந்தனின் எதிர்வினை, தற்போதைய அரசியல்வாதிகளின் போலித்தனத்தை, தப்பிக்கும் மனப்பான்மையை, அப்பட்டமான சுயநலப்போக்கை, தங்கள் சுயலாபத்துக்காக மட்டுமே மதத்தைக் கையாள்வதைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

அது போன்று வீட்டை விட்டு வெளியேறிய நம்மாழ்வார், சகோதரன் பட்சிராஜனுக்கு எழுதும் கடிதமும் மிக முக்கியமானது.

“சுயராஜ்யம் புளித்து போன ஒரு கனவாக எனக்குப் படுகிறது. கடவுள் அவர்கள் பக்கம். எதிர்க்க எனக்கு விருப்பமில்லை. வரப்போகும் தலைமுறைகள் வரையும் தியாகிகளின் பட்டியலில் என் பெயர் வரும் என்பதற்காக நாயைப் போலச் சாக நான் தயாராக இல்லை” என்ற வரிகளில் அக்கால இளைஞர்கள் சிலரது மாறுபட்ட மனநிலை வெளியாகிறது.

மற்றுமொரு முக்கியமான கடிதம் நம்பி, இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதும் கடிதம்.

”தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் இந்த வாழ்க்கையால் என்ன பயன்? ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பதால் என்ன லாபம்? நிறைவேறவே முடியாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப் போகிறது?” - சமூகத்தின் சுயநலப் போக்கையும், அதன் சகிக்க முடியாத இன்னொரு முகத்தையும் பற்றி ஆழ்ந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்படும் இந்த வரிகள் ஒரு நம்பிக்கையில் தோற்றுப்போனவனின் உண்மையான வாதமாகக் கருதத்தக்கது.

கம்யூனிஸ்ட்கள் குறித்த கீழ்கண்ட வரிகள் வாசக அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.

”அட்டையை எடுத்துட்டா புஸ்தகமெல்லாம் காத்தால்ல இருக்கு”, ” இந்த கம்யூனிஸ்ட் போர்வையை என்னிக்கு நீ தூக்கிப் போடறியோ அன்னிக்கு தான் உருப்படுவே”, “கம்யூனிஸ்டா, உள்ளத்திலேயே அழுகி வீச்சம் அடிக்கற பயலுங்க அவங்க தான்”.

”இருங்க. தலகாணி இல்லையா. இடுப்புக்கு அண்டக் கொடுக்கணும்ல... தென்பட்டது லெனின்.... புஸ்தகங்களை தன்னுடைய ரவிக்கையால் மூடினாள். படுத்துக் கொண்டு அவனை அழைத்தாள்...”

”லெனினுக்குச் சேதமில்லை. இரண்டாம் பாகத்தின் நீல அட்டைதான் சிறிது கசங்கிய மாதிரி இருந்தது”

மேற்கண்ட வரிகளினூடே இந்நாவல் கூறும் நுண்ணரசியல் பல. எல்லோருக்கும் நல்லவனாக வரும் நம்பியின் மறைவு அதிர்ச்சியை அளிப்பது மட்டுமல்ல; அதற்கு எந்த எதிர்ப்பலைகளும் எழாமல் இருப்பதே புரையோடிப் போன சமூகத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக உள்ளது.

கையாலாகாத, பொருந்தாத வெற்றுக் கூச்சல் எழுப்பும் நபராக வரும் நரசிம்மனின் பாத்திரமும் இங்கு முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். ’பிராமணர்களுக்கு தனிதேசம் வேண்டும்’ என்ற அவனது அபத்தப் பேச்சு குறியீடாக வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்துகிறது.

பெரியார், நரசிம்மன் வசிக்கும் சன்னதித் தெருவில் பேச வந்தபோது முன்வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்படுத்துதல்கள் மிக முக்கியமானவை. அதுவும் ‘யகாஸகௌ சகுந்தகா...’ எனத் தொடங்கி சுக்ல பக்ஷ யஜூர்வேதத்தில் வருவதாகச் சொல்லப்படும் ஸ்லோகத்தை பேச்சாளர் கூறக் கேட்டதும் அதை உடனடியாகப் படிக்க ஆவல் கொள்ளும் நரசிம்மனின் போக்கு அவனது குணாதிசயத்தைத் தெளிவுறக்காட்டி விடுகிறது.

கடைசியில் மலம் சுத்தம் செய்யும் பெண்ணை உறவுக்கு அழைக்க, அவளால் முகத்தில் மலம் அப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். ஆனால் அவன் இறுதி ஊர்வலத்தில் அதே பெண், சுடுகாடு வரை ஒப்பாரி வைத்துக் கொண்டே செல்வதாக வருவது கதையோடு ஒட்டவில்லை.

ரோசாவின் பாத்திரப்படைப்பும் கவனத்தில் கொள்ளத் தக்கது என்றாலும் அது பிறப்பு முதல் உடன் வளர்ந்த இயல்பான ஒன்றாகவே இருப்பதால் வியப்படைய ஏதுமில்லை.

நாவலின் ஊடாக வந்து போகும் சர்வாங்க சவர ஜெர்மன் ஐயங்கார், விக்டோரியா ராணியின் மரணத்துக்காகக் குளித்த, பொன்னாவை எப்படியாவது வளைத்துப் போட முயற்சித்த வக்கீல் ஐயங்கார், ஆண்டாளைக் கட்டிப்பிடித்த அவர் பையன், நள்ளிரவில் தூரம் ஒதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட ஆண்டாளை அரவணைத்த அய்யராத்து குடுமிப் பையன், எப்போதும் கற்றாழை நாற்றம் அடிக்கும் தினமொட்டு நிருபர் சங்கரராமன், வாய் ஓயாமல் ஆங்கிலம் பேசிக் கொண்டும், அவ்வப்போது திருமலையிடம் வந்து நாசிகா சூரணம் யாசித்தும், சமயங்களில் நிர்வாணமாகத் தெருக்களில் சுற்றிக் கொண்டும் இருக்கும் மனநிலை பிறழ்ந்த வக்கீல் ராமசாமி அய்யர், வயதிற்கு மீறிய தெளிவுடன் இருக்கும் கண்ணனின் தங்கை ராதா என்று கிருஷ்ணன் நம் முன்னால் காட்சிப்படுத்தும் மனிதர்கள் நாவலில் எந்தவித மிகைப்படுத்துதலும் இல்லாமல் இயல்பாகவே வந்து போகிறார்கள்.

நாவலில் ஆங்காங்கே அடிக்கும் ‘கற்றாழை வாடை’யின் வீச்சம் சற்றே அதிமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
காந்தீயம், கம்யூனிஸம், மத நம்பிக்கை, குரு விசுவாசம், சமூக சேவை, திராவிட இயக்கங்கள், வரலாற்று விமர்சனம் என்று பல தடங்களை இந்நாவல் தொட்டுச் செல்கிறது. இது உணர்வு சார்ந்த நாவலா, அரசியல் சார்ந்த நாவலா என்று பார்த்தால் உணர்வு சார்ந்த அரசியல் நாவல் என்று தாராளமாகச் சொல்லி விடலாம். புரட்சி என்பது இன்று ஒரு நகைப்புக்குரிய சொல்லாக மாறி விட்டதற்கு யார் காரணம் என்பதை இந்த நாவல் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று கூறாமல் செல்வதே ஒருவிதத்தில் நாவலின் பலம் என்றும் சொல்லலாம்.

நாவல் கூறும் மையக் கருத்தாக இதைக் கொள்ளலாம். ஒருவன் கொள்கை வீரனாக வாழ்கிறான். ஆனால் கடைசியில் அந்தக் கொள்கைக்காகவே உயிரை விடுகிறான், எந்தப் பயனுமில்லாமல். மற்றொருவனோ, வாழ்க்கையை யதார்த்தமான அதன் போக்கில் எதிர் கொள்கிறான். வளைந்து கொடுத்துப் போகப் பழகிக் கொள்ளும் அவன், இறுதியில் எந்த விதக் கொள்கைப் பிடிப்புமில்லாது, முடிவு எடுக்கக் கூடத் தயங்கும் சராசரி மனிதனாக வாழ்க்கையை தயக்கத்துடன் எதிர் கொள்கிறான். யதார்த்தத்தில் இப்படிப்பட்ட மனிதர்களே எங்கும் காணக் கிடைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களே தங்கள் வாழ்வனுபவத்தால் தங்களை உருமாற்றிக் கொண்டு வெற்றியடைகிறார்கள் என்பதே உண்மை. அது அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், ஆன்மீகமாகட்டும் எங்கும் நாம் இப்படிப்பட்ட கண்ணன்களை அதிகம் பார்க்கலாம். கண்ணன்களே நாளடைவில் கம்சர்களாக மாறுவது தான் வாழ்க்கையின் குரூரம் அல்லது யதார்த்தம்.

மொத்தம் பதினெட்டு அத்தியாயங்களில் இந்த நாவலைப் படைத்திருக்கும் நமது பாராட்டுகுரியவர். தடை நடையே இல்லாமல் செல்வது நாவலின் வெற்றிக்குச் சான்றாகிறது. உணர்வுரீதியாக சொற் சித்திரம் தீட்டியிருக்கிறார் எனக் கூறின் அது மிகையில்லை. தாமிரபரணி ஆறு, சுலோசன முதலியார் பாலம், நாங்குநேரிக் குளம், வண்ணார் பேட்டை பங்களா, குற்றால அருவி என காட்சிப்படுத்துதல்களும் விவரணைகளும் வெகு இயல்பாக இருக்கிறது.

ஆரம்பம், நடு, முடிவு என்று நாவலின் முழுமையான அம்சங்கள் கொண்டிருந்தாலும், நாவல் இறுதியில் ’சென்று தேய்ந்து இருதல்’ என்னும் வகையிலேயே அமைந்திருக்கிறது. சொல்லப்போனால் நம்பியின் மரணத்தோடு, நம்மாழ்வார் திரும்ப வந்து குடும்பத்துடன் இணைவதோடு நாவல் ஒருவிதத்தில் முற்றுப் பெற்று விடுகிறது எனலாம். மற்றொரு விதத்தில் பார்த்தால் நாவல் முடியவில்லை, கண்ணனின் டில்லி பயணத்தோடு தற்காலிகமாக முடிந்திருக்கிறது அவ்வளவே! கண்ணனின் டில்லி வாழ்க்கை, சீக்கியர் பிரச்சனை, சாகித்ய அகாதமி விவகாரம், டில்லி அரசியல், காந்திகளின் எழுச்சி-வீழ்ச்சிகள், கழகங்களின் வீழ்ச்சி என்று சமகாலச் செய்திகளை கண்ணன் மூலமாகப் பதிவு செய்ய கிருஷ்ணனுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. புலிநகக் கொன்றையின் இரண்டாம் பாகத்தை தாராளமாக எதிர்பார்க்கலாம்.

பறவைகள் கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கலாம். பூக்களை அழிக்கலாம். சில நேரங்களில் அமைதியாகவும் இருக்கலாம். ஆனால் மரம் அதனால் எல்லாம் பாதிக்கப்படுவதில்லை. அது அமைதியாய் அனைத்திற்கும் சாட்சியாய் இருந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களும் அப்படித்தான். வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் இது எதனாலும் பாதிக்கப்படாத காலம், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருக்கிறது, புலிநகக் கொன்றையைப் போலவே!

புலிநகக் கொன்றை
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை
நாகர்கோவில் - 629001