Wednesday, November 17, 2010

எழுதாத கதைகள்

இணையம் அறிமுகமான காலகட்டத்திலிருந்தே கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வமுண்டு. சிறுவயதில் எழுதிப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு வெளியாகி இருக்கிறது என்றாலும் தற்போது சோம்பல் மற்றும் முனைப்பின்மை காரணமாக அவ்வப்போது எழுதிப் பார்த்து அப்படியே தொடராமல் விட்ட கதைகள் அநேகம். என்றாவது எழுதி முடிப்பேனா?... தெரியாது!

அதிலிருந்து ஒரு சில மட்டும்...


கதை - 1

கிருஷ்ணசாமிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. இதுவரை வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் இழுத்துக் கொண்டிருந்த சுவாசம் மெல்ல மெல்ல மேலேறி இப்போது தொண்டைக்குழியை அடைந்து விட்டிருந்தது. ’ஹா.. ஹா...’ என்று விநோதமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் என எல்லோரும் கண்களில் கண்ணீருடன் அவர் கட்டிலைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணசாமிக்கு காட்சி விரிந்தது. குடுமியும் பூணூலுமாய் ஒரு சிறு பையன் தோன்றினான். ’வா... வா...’ என்று இவரை அழைத்தான். அவன் கூடவே தலையைத் தலையை ஆட்டியபடி ஒரு மாடு நின்று கொண்டிருந்தது. கிருஷ்ணசாமி திடீரென்று அந்த மாட்டை விரட்ட, வெகுண்ட மாடு அந்தச் சிறுவனைத் துரத்த... சிறுவன் பயந்து போய், கத்திக் கொண்டே வயலில் வேகமாக ஓடி... கால் தடுக்கி மிகப் பெரிய அந்தத் திறந்தவெளிக் கிணற்றில் விழ.... மாடு திரும்பி நின்று கிருஷ்ணசாமியை முறைத்தது. மாட்டின் தலைக்கு பதில் அதில் கிருஷ்ணசாமியின் தலை தெரிந்தது. கிருஷ்ணசாமி ’ஓ’வென்று அலறினார்.

**********

கதை - 2


பீச்சில் நான் காலாற நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த மனிதர் எதிரே வந்தார். அழுக்குத் தாடி. கலைந்த தலை முடி கிழிந்த ஆடை. முகம் முழுவதும் அம்மைத் தழும்புக் காயம் என அவரைப் பார்க்கவே சற்று பயங்கரமாக இருந்தது.

“தம்பி! ரொம்ப பசிக்குதுப்பா, டீக் குடிக்கவாவது எதுனா கொடேன்” என்றார்.

எனக்கு ஏனோ ஆத்திரமாக வந்தது. அதே சமயம் பரிதாபமாகவும் இருந்தது. பைக்குள் கைவிட்டேன். ஒரு முழு ஐந்து ரூபாய் நாணயம் வெளிவந்தது. அதை அவர் கையில் போடப் போனேன். அவரோ, “தம்பி, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு,” என்றார் சிரிப்புடன்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன இது, ஏன் இவர் என்னவோ சொல்லி உளறுகிறார்.. ஒருவேளை பைத்தியமா, இல்லை குடிகாரரோ.. கஞ்சா, அபின் இது மாதிரி ஏதும் குடிப்பவரோ, போதையில் உளறுகிறாரோ?” புரியாமல் விழித்தேன்.

“நாராயணா! நாராயணா!“ என்றார் அவர் புன் சிரிப்புடன்.

நான் திகைத்தேன். “என்ன இது?, எப்படி இவருக்கு என் பெயர் தெரியும்? உண்மையில் இவர் என் பெயரைத் தான் சொல்கிறாரா, இல்லை கடவுளைக் கூப்பிடுகிறாரா? ஒன்றும் புரியவில்லையே!” அவரையே உற்று நோக்கினேன் சற்று அச்சத்துடன்.

அவர் ஒன்றும் சொல்லாமல் நீட்டிய கையை மேலும் என்னை நோக்கி நீட்டியவாறே என் கண்களை உற்று நோக்க ஆரம்பித்தார். எனக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

************

கதை - 3

நள்ளிரவு. ஊர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், உடல் முழுதும் ஈரம் சொட்டச் சொட்ட அந்த ஆலயத்தினுள் நுழைந்தாள் அவள். அங்குள்ள சிலைகளைச் ஒரு சுற்றுச் சுற்றி வந்தவள், கை கூப்பி வணங்கி விட்டு, மெள்ள தனது ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைய ஆரம்பித்தாள். 

சற்று நேரத்தில்...

அவள் இடுப்புவரை தொங்கிய அந்தக் கூந்தல் அவளை முழுமையாய் மறைந்திருக்க, மெல்ல அந்தச் சிலைகளைச் சுற்றி வர ஆரம்பித்தாள். அவள் உதடுகளில் மிகத் தீவிரமான முணுமுணுப்பு.

பதினைந்து முறை சுற்றியவள், முதல் சிலை அருகே வந்தாள். நின்றாள். கை கூப்பினாள். தான் கொண்டு வந்திருந்த கறுப்பு நிறப் பையிலிருந்து ஏதோ ஒன்றை வெளியே எடுத்தாள். அது ஒரு மாலை.  இலைகளாலும், மூலிகை மலர்களாலும் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதனை எடுத்து தனது கழுத்தில் அணிந்து கொண்டவள், அந்தச் சிலையைப் பார்த்துச் சிரித்தாள், “திருப்தியா! திருப்தியா” என்றாள் சத்தமாக. தலையைத் தலையை ஆட்டியவாறே உரக்கச் சிரித்தவள், ஒரு கறுப்பு நூல் கயிற்றை எடுத்தாள், மந்திரங்களை உச்சரித்தவாறே, அந்தச் சிலைமீது அதனைச் சுற்றத் தொடங்கினாள்.

சற்று நேரத்தில் அந்தச் சிலையின் கை, கால்கள், இடை என அனைத்தும் அந்த நூலின் கட்டுக்குள் வந்து விட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் அந்தச் சிலையைச் சுற்றி வந்து வணங்கியவள், அந்த சிலையின் அடிப்பாகத்தை அசைக்கத் தொடங்கினாள். அஷ்டபந்தனம் வைத்து, பூசப்பட்டிருந்த அது, அவ்வளவு எளிதில் அசைந்து கொடுக்கவில்லை. உடன் கத்தி போன்ற ஒன்றை வைத்து, அதனைக் கீறத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் அதன் கலவைகள் உடைந்தன. உதிர்ந்து விழுந்தன. இப்பொழுது மெல்ல அந்தச் சிலையை நகர்த்தினாள். அவள் முகத்தில் வெற்றிக் களிப்பு. சிலையை இலேசாக மேலே தூக்கினாள்.. கீழே.. அந்த இயந்திரத் தகடு வைக்கப்பட்டிருந்தது. மெல்ல கை விட்டு அதனை எடுத்துக் கொண்டவள், அதனைச் சுருட்டி, தனது அரைஞாண் கயிற்றில் முடிந்து கொண்டாள். பின் சிலையை அதே இடத்தில் வைத்தவாறே, அடுத்த சாமி சிலையை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

*********

(தொடரும்)

Friday, October 29, 2010

முரண்


உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!

Monday, October 25, 2010

எண்ணப் போலிகள்


ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்

வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்

விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு

சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..

டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது

Monday, October 18, 2010

கவிதை மேகம்


ஒரு கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
புது மணப்பெண்ணின்
மோகாவஸ்தைகளாய்
நீண்டு கொண்டே
போனது என்
வார்த்தைகள்

ஒரு நல்ல கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

தலைப்பிரசவப் பெண்ணின்
இடுப்பு வலி போல
கொஞ்சம் கொஞ்சமாய்
ரம்பித்து
முடிவில்
வெளிபோந்தது
என் கவிதை
குருதி தோய்ந்த
தொப்புள் கொடியோடு
உயிரின்றி..
உணர்வின்றி...

Thursday, October 14, 2010

கவிதை


அங்கும் இங்குமாய்
சிதறிக் கிடக்கும்
ரொட்டித் துண்டுகளைப் போல
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்!

பேப்பர் வெயிட்டையும் மீறி
காற்றில் படபடக்கும்
காகிதத்தைப் போல
என் மனது!

உத்தரவின்றி
உள்ளே வந்துவிட்டு
வெளியேறத் தவிக்கும்
தட்டாம் பூச்சியாய்
வார்த்தைகளின்றி
அலைந்து கொண்டிருக்கிறது
உள்ளுக்குள்ளேயே
ஒரு குரல்!

கனத்த மௌனத்தில்
நினைவின் நிசப்தத்தையும் மீறி
எங்கோ தூரத்தே ஒலிக்கிறது
ஒரு கூட்ஸ் ரயிலின் சப்தம்!

அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்
கேட்பாரற்று!

Wednesday, October 6, 2010

வேஷம்இந்த .போட்டைவைப் பாருடா, பொண்ணு அம்சமா இருக்கால்ல என்றாள் கல்யாணி.

‘அட, நீ வேறம்மா உனக்கு வேற வேலையே இல்லயா? எப்பப் பாத்தாலும் பொண்ணைப் பாரு, போட்டோவைப் பாருன்னு இம்சை பண்ணிக்கிட்டு, லீவு நாள்ல கூட மனுஷனை கொஞ்சம் நேரம் நிம்மதியா பேப்பர் பார்க்க விடறியா நீ’  இரைந்தான் சாரங்கன்.

ஆமாடா, நான் இம்சை பண்ணிக்கிட்டுதான் இருப்பேன். எனக்கு ஒரு நல்ல மருமக, உனக்கு ஒரு நல்ல பொண்டாட்டி அமையுற வரைக்கும் இப்படி உன்ன தொந்தரவு பண்ணிக்கிட்டு தான் இருப்பேன். இல்லன்னா ஒண்ணு பண்ணு. உங்க ஆபிஸ்ல உள்ள பொண்ணுங்கள்லயே நல்ல ஒரு பொண்ணா ஒண்ண பார்த்துச் சொல்லு, ஆக வேண்டிய மத்த விஷயங்களை நான் பார்த்துக்கறேன், என்ன சொல்ற... எனக்கும் அலைச்சல் மிச்சம். உனக்கும் தொந்தரவு இருக்காதுகண் சிமிட்டினாள் கல்யாணி.

அடாடா, உன் இம்சை தாங்கலியே சொல்லி விட்டு பேப்பரைத் தூக்கிக் கொண்டு பால்கனிக்கு ஓடினான் சாரங்கன்.

சாரங்கனுக்கு 28 வயது. பேங்கில் ஆபீசர் வேலை. நல்ல பெண்ணாய்ப் பார்த்து அவனுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் என்பதுதான் கல்யாணியின் கவலை. அதற்காக அவள் தனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தாள். வரன் பார்க்கும் சங்கங்களில் எல்லாம் பதிவு பண்ணி வைத்திருந்தாள்.

சாரங்கன் எம்.பி.ஏ. முடித்த கையோடு பேங்கில் ஆபிசர் வேலை கிடைத்து விட்டது. இவ்வளவு நாளாக ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு தற்போது ப்ரோமஷனும் கொடுத்து சென்னை ரீஜனல் ஆபிஸிலேயே போஸ்டிங்கும் கொடுத்து விட்டார்கள். ஆபிஸிற்கு நேரத்திற்குப் போய் விட்டு நேரத்திற்கு வீட்டுக்கு வந்து விடுவான் சாரங்கன். அநாவசியமாக அங்கும் இங்கும் சுற்றும் பழக்கம் அவனுக்குக் கிடையாது. அதிக நண்பர்களும் இல்லை. தாய் மீது மிகுந்த பாசம். சிறுவயதிலேயே தந்தை இறந்து விட கல்யாணிதான் அவனுக்கு எந்த ஒரு குறையுமில்லாமல், ஏக்கம் எதுவும் வந்துவிடாமல் அன்போடு வளர்த்தாள். அவள் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தது ஒருவிதத்தில் சௌகர்யமாகப் போய் விட்டது. தன் பள்ளியிலேயே அவனைச் சேர்த்துப் படிக்க வைத்ததுடன், தன் கையோடு பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு போய், கையோடு வீட்டிற்கும் கூட்டிக் கொண்டு வந்து விடுவாள். அதனால் சாரங்கனுக்கு அம்மா என்றால் அலாதி பிரியம். அளவற்ற பாசம். அவள் மனம் நோக எதுவும், பேச மாட்டான், செய்ய மாட்டான்.

அன்றைக்கு ஆபிஸ் லீவு நாள் என்பதால் சாவகாசமாக எழுந்து கொண்டு பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான் சாரங்கன். கல்யாணியும் ரிடயர் ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது. அதிக வேலைகள் என்று எதுவும் இல்லை. அதனால் மெதுவாக எழுந்து, குளித்து, டிபன் செய்து விட்டு அவனை சாப்பிட அழைத்தாள்.

சாரங்கனும் பால்கனியிலிருந்து இறங்கி வந்தான்.

ஐ, பொங்கலா, எனக்கு ரொம்பப் பிடிக்குமே! தொட்டுக்க என்னம்மா பண்ணியிருக்க? கொத்சு இருந்தா நல்லா இருக்குமே!என்றான்

‘ம், என் பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா என்ன, அதைத் தான் பண்ணியிருக்கேன். அரைகுறையாக் கொரிக்காம நல்லா சாப்பிடு ஆமா

       சரி, சரி, எனக்கு சாப்பாடு போடறேன்னு பேர் பண்ணாம நீயும் உட்கார்ந்து சாப்பிடு ஆமா என்ற சாரங்கன், அம்மவையும் இழுத்து அருகில் உட்கார வைத்தான்.

கல்யாணி, சாரங்கனை கனிவோடு பார்த்தாள். அவள் மனம் பழைய நினைவுகளை அசை போட்டது. திடீரென்று அவள் கணவர் நாராயணன் மறைந்து விட, உலகமே அஸ்தமித்தது மாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. அப்புறம் ஒரே மகனான சாரங்கன்தான் அவள் உலகமாகிப் போனான். அவனுக்காகவே வாழ்ந்தாள். அவனை ஒரு பெரிய ஆபிசராக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவள் லட்சியக் கனவு. இதோ, இப்போது அதுவும் நிறைவேறி விட்டது. அடுத்து படித்த, பண்பான, நல்ல ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்து  விட்டால் போதும். தன் கடமை முடிந்தது என்று எண்ணிக் கொண்டாள். அவளுக்கு அவன் தான் உலகம். அவன் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்தாள் போதும், தனக்கு ஏதும் தேவையில்லை என்பதுதான் கடவுளிடம் அவளது தினசரி வேண்டுதலாக இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் மாடிக்கு போனவனை இழுத்து உட்கார வைத்தாள் கல்யாணி. ‘ இதோ பார் சாரங்கன், எனக்கும் வயசாகிக் கிட்டே போகுது. காலா காலத்துல உன்னை ஒரு பொண்ணு கையில பிடிச்சுக் கொடுக்கணும்னு நான் நினைக்குறது தப்பா? நீ அதுக்கு பிடி கொடுக்கவே மாட்டேங்கறியே, ஏன்?என்றாள் குரல் தழுதழுக்க.

அம்மா குரல் தழுதழுத்ததும் சாரங்கனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ‘அய்யோ அம்மா, நான் என்ன கல்யாணமே வேண்டாம்னா சொன்னேன். கொஞ்ச நாள் போகட்டும்னுதான சொன்னேன். அதுவும் இதுக்கு முன்னாடி ஊர், ஊரா சுத்திக்கிட்டிருந்தேன். இப்போதான் ஹெட்-ஆபிஸ்க்கே வந்தாச்சே. அதுனால இனிமே ஒண்ணும் பிரச்சனை இல்ல, உனக்கு பிடிச்ச நல்ல பொண்ணா பாரு, நீ சொல்ற பொண்ணு கழுத்துல நான் தாலியக் கட்டுறேன்என்றான்.

சரிதான், பொண்ணு எனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் போதுமா, உனக்குப் பிடிக்க வேண்டாமா?என்றாள் கல்யாணி.

‘அம்மா உனக்குப் பிடிச்ச பொண்ண எனக்கு மட்டும் எப்படிப் பிடிக்காமப் போகும் சொல்லுஎன்று சாரங்கன் சொல்லவும் கல்யாணி நெகிழ்ந்து விட்டாள். அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

ஆனா, அம்மா ஒரு கண்டிஷன் என்றான் சாரங்கன்.

‘என்ன கண்டிஷன்?

‘ சும்மா பொண்ணு வீட்டுக்குப் போறது, பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிடறது, பொண்ண பாடச் சொல்றது... அப்புறம் போய்ட்டு தகவல் சொல்றோம்னு சொல்லிட்டு, பின்னாடி  பொண்ணப் பிடிக்கலைன்னு சொல்றது - இந்த பிஸினஸெல்லாம் வேண்டாம். நீ நல்ல பொண்ணாப் பாரு, அக்கம் பக்கத்துல நல்லா விசாரிச்சுக்கோ. நேரா பொண்ணு பார்க்கப் போறோம். அன்னிக்கே நிச்சயதார்த்தம், அப்புறம் கல்யாணம். அவ்ளோ தான். தேவையில்லாம நிறைய பொண்ணுங்களப் போய் பார்த்துட்டு, அப்புறம் அது சரியில்லை, இது சரியில்லைன்னு குறை சொல்லிட்டு... அவங்களுக்கும் மனக் கஷ்டம். எனக்கும் மனசுக்கும் சங்கடமா இருக்கும். அதுனால இந்த பஜ்ஜி, சொஜ்ஜி மேட்டர் எல்லாம் இல்லாம டைரக்டா பொண்ணப் பார்க்கறோம். கல்யாணத்தை முடிக்கறோம். சரியா?.

‘அது கொஞ்சம் கஷ்டம்டா சாரங்கா.. நீயும் கொஞ்சம் பொண்ணோட பேசி என்ன ஏதுன்னு கேட்டுக் கிட்டாதானே பின்னாடி சௌகரியமா இருக்கும்... இழுத்தாள் கல்யாணி.

‘தேவையில்லம்மா... எனக்கு வரப்போறவ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டு, எனக்கேத்த மாதிரி நடந்துப்பான்னு நிச்சயமா நான் நம்பறேன். அப்படி இல்லன்னாலும் அதை சரி பண்ண என்னால முடியும்னும் நினைக்கறேன். ஸோ அதைப்பத்தியெல்லாம் நீ கவலைப்படாம ஆக வேண்டிய வேலைகளைப் பார் என்றான் சாரங்கன்.

மகன் இந்த அளவிற்காவது இறங்கி வந்தானே என்று கல்யாணிக்கு ஒரே சந்தோஷம். தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினாள்.

***********

ஒரு சுபயோக சுபதினத்தில் சாரங்கனுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் முடிந்தது. சங்கீதா எம்.ஏ வரை படித்திருந்தாள். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தாள். சாரங்கன், கல்யாணி என இருவரிடமும் மிகவும் பணிவாகத் தான் நடந்து கொண்டாள். ஆனால் வீட்டுக் காரியங்கள் எதையும் சரிவரச் செய்யத் தெரியாமல் இருந்தாள். மிகவும் செல்லமாக வளர்ந்த பெண் என்பதால் அப்படி இருக்கிறாள், எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்தாள் கல்யாணி. சாரங்கனும் அப்படியே தான் நினைத்தான்.

மாதங்கள் கடந்தன. காலையில் எழுந்து வீடு, வாசல் தெளிப்பது முதல் சமைப்பது உட்பட எல்லாவற்றையும் கல்யாணியே செய்து வந்தாள். சங்கீதா ஏதாவது செய்ய வருவாள், ஆனால் கல்யாணி விட மாட்டாள். நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. பாவம் உனக்கேன் இதெல்லாம், நான் தான் இருக்கேனே வெட்டியா! என்று சொல்லி அனுப்பி விடுவாள்.

சாரங்கனுக்குக் காபி கொடுப்பது, டிபன, சாப்பாடு, பரிமாறுவது என எல்லாவற்றையும் கல்யாணியே பார்த்துப் பார்த்து செய்வாள். சங்கீதா ஏதாவது கேட்டால், நான் இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்கப் போறேன், ஏதோ இருக்கற வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் என் கையால விதவிதமாச் செஞ்சு போடணும்னு ஆசைப்படறேன். அது தப்பா, தயவு செய்து அதுக்கு தடை சொல்லாதீங்க  என்பாள்.

சாரங்கன் சமயங்களில் சங்கீதாவிடம் கேட்பான், நீ ஏன் இந்த வீட்டு  வேலையெல்லாம் செய்யக் கூடாது, பொழுது போகாமல் வீட்டில் இருக்கும் போது செய்யலாமே! என்பான்.

என்னைச் செய்ய விட்டால் தானே உங்க அம்மா, எல்லாத்தையும் அவங்களே செஞ்சாத்தான் அவங்களுக்கு திருப்தி. என்னை என்ன செய்யச் சொல்றீங்கஎன்று அலுத்துக் கொள்வாள் சங்கீதா.

இப்படியே நாட்கள் கடந்தன. ஒருநாள் காலை... பேப்பர் படித்துக் கொண்டிருந்த சாரங்கனிடம் காபியைக் கொணர்ந்து நீட்டினாள் கல்யாணி. வாங்கி ஒரு சிப் குடித்தவன்,  தூ, என்ன காப்பி இது நல்லாவே இல்ல, ஒரேயடியா கசக்குது. பொடி வாசனை வேற அடிக்குது. வர வர உனக்குக் காபி போடவே தெரியலைம்மா. வயசாயிருச்சி இல்ல. எல்லாம் மறந்து போச்சு போல.என்றான்.

இல்லையேடா, எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டுத் தானே கொண்டு வந்தேன். உனக்கு மட்டும் ஏன் கசக்குது?

அப்போ, நான் பொய் சொல்றேன்கிறியா? ஒரேயடியாகக் கத்தினான் சாரங்கன்.

போதும், போதும் ஒரு சின்ன காபிக்கு எதுக்கு இத்தனை கோபம். வாக்குவாதம். வேற நல்லதா போட்டுக்கிட்டு வந்தாப் போச்சு சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள் கல்யாணி.

மறுநாள் காலை. டிபன் சாப்பிட உட்கார்ந்தான் சாரங்கன். கல்யாணி அவனுக்கு மிகவும் பிடித்த பொங்கல் கொத்சுவைப் பரிமாறினாள். தூ... தூ... தூ.... அய்யோ, ஒரே உப்பு... அம்மா, எத்தனை தடவை சொல்றது காபி, சமையல்னு நீ பண்றது எதுவுமே நல்லால்லேன்னு. சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா. சங்கீதா, சங்கீதாஇரைந்தான்.

துளசிக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த சங்கீதா சத்தம் கேட்டு ஓடி வந்தாள். கல்யாணி கண் கலங்கி நின்று கொண்டிருப்பதும், சாரங்கன் சாப்பிடாமல் கை கழுவிக் கொண்டிருப்பதையும் பார்த்து அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘என்னங்க, எதுக்குக் கூப்பிட்டீங்க... ஏன் சாப்பிடாம எழுந்துடீங்க... என்றாள்

ம்... என்னத்த சொல்றது காபி சரியில்ல, டிபன் சரியில்ல... வர வர சாப்பாடும் சரியில்ல... ஏண்டா சாப்பிடறோம்னு இருக்கு... ரொம்ப கஷ்டமா இருக்கு. இனிமே ஒண்ணு பண்ணு சங்கீதா. பேசாம காலையில காபிலேர்ந்து டிபன, சாப்பாடு, நைட் டின்னர்னு எல்லாத்தையும் நீயே பண்ணு. அம்மாவுக்கு வயசாயிருச்சி இல்லையா, அதான் நிதானம் தெரியல... இனிமே எல்லா காரியத்தையும் நீயே பார். நான் கிளம்புறேன் சொல்லி விட்டு வேகமாக அலுவலகத்துக்குச் சென்று விட்டான் சாரங்கன்.

கல்யாணிக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு நாள் தன் சமையலை ருசித்துச் சாப்பிட்டவன், காபி ஏ-ஒன் என்று புகழாரம் சூட்டியவன், அம்மா மாதிரி பொங்கல்-கொத்சு பண்ண யாராலும் முடியாது என்று உறவு வீடுகளில் சவால் விட்டவன், இப்போது தன் சமையலையே வேண்டாம் என்கிறான். கைப்பக்குவம் சரியில்லை... நிதானம் இல்லை என்கிறான், ஏன்?  நினைக்கும் போதே அழுகையாக வந்தது கல்யாணிக்கு.
கல்யாணம் ஆனால் பையன்கள் மாறிப் போய் விடுவார்கள், பொண்டாட்டி தாசர்கள் ஆகிவிடுவார்கள் என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் சாரங்கனும் அப்படி ஆகி விடுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. மனதுக்குள் அப்படியே நொறுங்கிப் போனாள்.

தினம்தோறும் காலையில் எழுந்து கொண்டதும் வேலை செய்ய கை, கால்கள் பரபரக்கும். ஆனால் காலை ஐந்து மணிக்கே எழுந்து எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்திருப்பாள் சங்கீதா. முன்பெல்லாம் ஓயாது ஏதாவது வேலை கல்யாணிக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது எல்லா வேலையும் சங்கீதாவே செய்வதால், இவளுக்கு வேலையே இல்லை. வாழ்க்கையே போரடிக்க ஆரம்பித்து விட்டது. மேலும் சங்கீதாவின் சுமாரான சமையலைக் கூட சாரங்கன் வாயாறப் புகழ்வதும், இதைச் செய்த கைக்கு வளையல் வாங்கிப் போடணும், மோதிரம் வாங்கிப் போடணும் என்று தன் காதுபடவே பெருமையாகப் பேசுவதும், அவன் தன்னை உதாசீனப்படுத்துகிறானோ, பாரமாக நினைக்கிறானோ என்ற எண்ணத்தை அவளுக்குத் தந்தது. இது இப்படியே தொடர்ந்தால் அவர்கள் இன்ப வாழ்விற்குக் குறுக்காகத் தான் இல்லாமல் எங்காவது சென்று விட வேண்டும் என்றும் அவள் முடிவு செய்தாள்.

அன்று இரவு... நடுநிசி கடந்திருக்கும். கல்யாணிக்குத் தூக்கம் வரவில்லை. எப்படி இருந்த சாரங்கன் இப்படி மாறிப் போய் விட்டான் என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கிக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அப்போது அவள் அறை நோக்கி யாரோ வருவது போல் தோன்றவே, அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்.

அறை வாசலில் வந்து நின்றது..... சாரங்கன்....

அம்மா.... அம்மா.... தூங்கிட்டியாம்மா. தூங்கும்மா... நல்லா தூங்கு. நீ. நல்லா தூங்கணும். நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு தான் நான் இப்படிப் பண்றேன். இப்படி நடந்துக்கறேன். ஆமாம்மா, உன்னை கடுமையா பேசினதுக்காக என்னை மன்னிச்சிடு. உன் சாப்பாடு சரியில்லை சொன்னதுக்காக, உன்னை உதாசீனம் பண்ணதுக்காக என்னை மன்னிச்சிரும்மா... நான் அதெல்லாம் வேணும்னு செய்யலம்மா... உன் மேல உள்ள பாசத்துல தான் செஞ்சேன். ஆமாம்மா.... இதுநா வரைக்கும் என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சே, வளர்த்தே.. எனக்காக ஓடாத் தேஞ்ச.. உன்னையே உருக்கிக்கிட்டே. ஆனா, கல்யாணம் ஆனப்புறமும் நீயே கொஞ்சம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எல்லா வேலையும் செய்யறது என் மனசுக்குப் பொறுக்கலம்மா. சங்கீதா கிட்ட எத்தனையோ தடவ சொன்னேன். அம்மாவை வேலை செய்ய விடாம, நீ செய்னு. அவளும் நீங்க அதுக்கு ஒப்புக்கல்லேன்னு சொன்னா. அது மட்டுமில்ல. இதுதான் சாக்குன்னு அவ பாட்டுக்கு எந்த வேலையும் செய்யாம டி.வி. பார்த்துட்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சிட்டா. நீயோ 60க்கு மேல வயசாகியும் ஓய்வு ஒழிச்சல் இல்லாம உழைச்சிக்கிட்டு இருந்தே...

நீ அந்த விஷயத்துல பிடிவாதக்காரி. அன்பா அக்கறையா ஓய்வெடுத்துகோன்னு சொன்னா கேட்கமாட்டேங்கிறது எனக்கு நல்லாத் தெரியும். சோம்பேறியா இருக்கற சங்கீதாவையும் சுறுசுறுப்பானவளா ஆக்கணும். உனக்கும் நல்ல ஓய்வு கொடுத்து ரெஸ்ட் எடுக்க வைக்கணும். அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சப்போதான் இந்த ஐடியா வந்தது. உன் கிட்ட கடுமையா பேசற மாதிரி நடிச்சி உன்னை ரெஸ்ட்ல இப்போ உட்கார வச்சிருக்கேன். சங்கீதாவையும் புகழற மாதிரி பேசி அவளையும் சுறுசுறுப்பானவளா மாத்தியிருக்கேன். ஆமாம்மா, நான் போட்டது, போடறது எல்லாம் வேஷம் தான். ஆனா, அதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலைம்மா. என்னை மன்னிச்சிடும்மா.. அம்மா, நீ நல்லா இருக்கணும். எப்பவும் எங்க கூட துணையா இருக்கணும்மா... அதுக்காகத் தான்மா நான் அப்படி உங்கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன். நான் என்னிக்கும் உன்னோட அன்பான பிள்ளைதான்மா. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்மா. ஒருத்தர்ட்ட ஒருத்தர் மனம் விட்டு பேசினா எல்லாம் சரியாகிடும். அதுவரைக்கும் இந்த வேஷம் தொடர்ந்துட்டு தான்மா இருக்கும். அதுக்காக என்ன மன்னிச்சிடு.. சொல்லி விட்டு அந்த இடம் விட்டு அகன்றான் சாரங்கன், கண்களில் கண்ணீருடன்.

கல்யாணியின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீர்.

(கடந்த ஆண்டு லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளிச் சிறப்பிதழில் வெளியான சிறுகதை - எழுதியவர் -        பா.சு.ரமணன்)

Monday, September 27, 2010

அம்மா.. அன்புள்ள அம்மா....சாரி... இனி பிரயோஜனமில்லே. நீங்க வீட்டுக்குக் கூட்டிப் போறது தான் பெட்டர்!’’ என்றார் டாக்டர்.

ராமச்சந்திரனுக்கு கண்கள் கலங்கியது. சரிங்க டாக்டர். வேன் மட்டும் கொஞ்சம் அரேஞ்ச் பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்என்றான் குரல் கம்ம.

ஓ.கே. ஓ.கே.டாக்டர் நகர்ந்தார்.

சுப்ரமண்ய கனபாடிகளுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி. இரண்டு நாளாக ஐ.சி.யூ.வில் வைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. டாக்டர் கையை விரித்து விட்டார்.

கனபாடிகளுக்கு மொத்தம் ஐந்து பெண்கள். மூன்று பிள்ளைகள். மாயவரம் பக்கத்தில் குக்கிராமம். கோயிலில் வேலை பார்த்து, வருமானம் போதாமல் சென்னைக்கு வந்து, வைதீகம் செய்து இன்று 84 வயது.

மனைவி சுமங்கலியாக எப்பவோ போய்ச் சேர்ந்து விட்டாள். பையன்கள் வளர்ந்து ஆளாகி எல்லோரும் இன்று நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள். பெண்களில் இருவர் வெளிநாட்டில். மூன்று பேர் இங்கே சென்னையிலும், கோவையிலும்.

அடி வயிற்றில் இருந்து சத்தமாக வெளி வந்து கொண்டிருந்த மூச்சுக் காற்று, இப்பொழுது நெஞ்சுக்கு வந்து விட்டிருந்தது. உறவினர்கள் எல்லோரும் அழுகையுடன் சுற்றி அமர்ந்திருந்தனர்.

‘‘ம்! நல்ல கல்யாணச் சாவுயாரும் அழ வேண்டாம். ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனை பண்ணுங்கோ’’ - மூத்த மாப்பிள்ளை சொன்னார்.

‘‘இன்னும் ஒரு மணி நேரம் தான் தாங்கும்’’ - ஒருத்தர் ஆரூடம் கூறினார்.

‘‘இப்படி இழுத்துண்டு இருக்கே, ஏதேனும் ஆசை இருக்கோ என்னமோ, ஒருவேளை அதை வெளிய சொல்ல முடியாமத் தவிக்கிறாரோ...’’ சந்தேகம் எழுப்பினார் ஒரு மாமி.

‘‘இருக்கும்... இருக்கும். யாராவது செத்த என்னென்னு கேளுங்களேன்’’ மூத்த மகள் பானுமதி குரல் கொடுத்தாள்.

‘‘அப்பா... என்னப்பா இது... இப்படிக் கஷ்டப்படுறியே!’’ ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறியா... நாங்க பேசறதெல்லாம் கேட்கறதா... கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கறியே.. என்னப்பா வேணும் சொல்லுப்பா...’’ ராமச்சந்திரன் கண்ணீருடன் கேட்டான்.

அவன் கதறல் காதில் விழுந்தது போல் சுப்ரமண்ய கனபாடிகள் லேசாகக் கண்களைச் சுழற்றினார். தலையைத் திருப்பாமலே அங்கும் இங்கும் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தவரின் பார்வை சமையல் கட்டில் நிலைகுத்தியது.

கோமதி மாமி அழுது கொண்டிருந்தாள். தான் அழுவது யாருக்கும் தெரிந்து விடக் கூடாது, என்பது போல கதவு ஓரமாக நின்று கொண்டு அவள் அழுது கொண்டிருந்தாள்.

அந்த வீட்டின் சமையல் வேலை முதல் அனைத்து வேலைகளையும் கவனிப்பது கோமதி மாமி தான். அதுவும் சுப்ரமண்ய கனபாடிகளின் மனைவி பார்வதி போய்ச் சேர்ந்த பிறகு, குழந்தைகளை வளர்ப்பது முதல் எல்லா வேலைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தவள் கோமதி தான். மாமிக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கிறார்களா என்று ஒருத்தருக்கும் எதுவும் தெரியாது. சமையல் வேலை கேட்டு வந்தாள். தெரிந்தவர், உறவினர் எல்லோரும் வற்புறுத்தவே கனபாடிகளும் சரி என்று சம்மதித்தார்.

அன்று முதல் அந்த வீட்டில் ஒரு மனுஷியாக மாறி விட்டாள் கோமதி மாமி.

கனபாடிகளின் பிள்ளைகள் அனைவரும் அவளை பாசத்தோடு ‘‘அத்தை. அத்தை’’ என்றுதான் அழைப்பார்கள். அதற்கேற்றவாறு தான் அவளும் நடந்து கொண்டாள். தன் குழந்தைகளைப் போலவே எண்ணி அவர்களை வளர்த்தாள். ஆளாக்கினாள்.

மாமி அழுது கொண்டிருக்க... இரண்டாவது பையன் சீனிவாசன், ‘அத்தை இப்படி வாங்கோ... அப்பா உங்களாண்ட என்னவோ சொல்லணும்னு நினைக்கறார் போல இருக்கு வாங்கோமாமியின் கையைப் பிடித்து கட்டிலருகே அழைத்து வந்தான்.

‘‘அப்பா எங்களையெல்லாம் அடையாளம் தெரியறதா. நாங்க சொல்றதெல்லாம் கேட்கறதா. ஏதாவது சொல்லணுமாப்பா. ப்ளீஸ் சொல்லுப்பா...’’ கண்ணீருடன் கதறினான் ராமச்சந்திரன்.

புரிந்தது போல் கனபாடிகள் தலை லேசாக அசைந்தது. மறுபடியும் ஒரு முறை கீழ் மேலாய் பார்வையைச் சுழலவிட்டார். பார்வை மீண்டும் கோமதி மாமி மேல் வந்து நிலைத்தது.

‘‘அப்பா... என்னப்பா... அத்தை கிட்ட ஏதாவது சொல்லணுமா... ப்ளீஸ் சொல்லுப்பா... கொஞ்சம் ட்ரை பண்ணுப்பா... ப்ளீஸ்...’’ சீனிவாசன் விசும்பினான்.

சுப்ரமண்ய கனபாடிகளின் தலை இலேசாக அசைந்தது. கை, கால்கள் இலேசாக விறைத்தன. மெல்ல சிரமப்பட்டு வாயைத் திறந்தார். ‘‘அத்... அத்...’’ என்றார். அதை முழுமையாகச் சொல்ல விடாமல் மூச்சுத் திணறியது. உடம்பு தூக்கிப் போட்டது. கண்களில் கண்ணீர் வழிந்தது.

‘‘சொல்லுப்பா... சொல்லுப்பா... ப்ளீஸ்’’ என்றான் மூர்த்தி.

‘‘அத்... அத்... அத்தை இல்லே... அம்மா’’ சொன்ன சுப்ரமண்ய கனபாடிகளின் பார்வை நிலைத்தது. மூச்சு ஒடுங்கியது.

அதுவரை ஒதுங்கி நின்றிருந்த கோமதி மாமி கனபாடிகளின் மார்பில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.


***********

(நன்றி : பத்திரிகையில் வெளியாகிப் பரிசு பெற்ற இச்சிறுகதையை வெளியிட அனுமதி தந்த எழுத்தாளர் ஆனந்தி மணியன் அவர்களுக்கு...)

Saturday, September 25, 2010

இரண்டு கடிதங்கள்


 22-04-1982
                                                                                                 விழுப்புரம்


அன்புள்ள மாலதிக்கு,

கல்யாணி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம், நீ அங்கு உன் கணவர் குழந்தைகளுடன் நலமாகவே இருப்பாய் என எண்ணுகிறேன். என்னடா, இவ்வளவு அருகில் இருந்து கொண்டு, கடிதம் ஏன் எழுதுகிறாள் என உனக்குத் தோன்றலாம். காரணம் இருக்கின்றது. என் நெருங்கிய தோழியான உன்னிடம் சொல்லாமல் நான் யாரிடம் சொல்லாப் போகிறேன் எல்லாவற்றையும்!. சில நாட்களாகவே ஏன் சில மாதங்களாகவே எனக்கு இந்தப் பிரச்னை இருக்கின்றது. உன்னிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றால் நீ மாதர் சங்கம் அது இது என்று மிகவும் பிஸி. போனில் இந்த விஷயங்களை எல்லாம் பேசவும் முடியாது. அது தான் இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதக் காரணம். நீ சைக்காலஜி படித்தவள், அதுவும் சமூக சேவை நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பவள், எனவே நீ தான் என பிரச்னைக்குச் சரியான தீர்வைத் தர முடியும் என எண்ணியே இக்கடிதத்தை எழுதுகிறேன். நான் போனில் கூறியது போல இந்தக் கடித்ததைப் படித்தவுடனுடனே நீ கிழித்து எறிந்து விடவும்.

உனக்கு ஞாபகம் இருக்கும், நாம் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். உனக்கோ தமிழ் இலக்கியம், மு.வ என்றால் உயிர். எனக்கு அகதா கிறிஸ்டி, ஷிட்னி ஷெல்டன் என்றால் இரவுச் சாப்பாடு கூட வேண்டாம். அப்படிப் பித்துப் பிடித்துத் திரிந்த நான் இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது என்ன தெரியுமா? சித்தர் பாடல்களும், திருவடிப் புகழ்ச்சியும்தான். என்ன ஆச்சர்யமாய் இருக்கின்றதா? நான் எப்படி இப்படி மாறினேன் என்று நினக்கின்றாயா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் சூழ்நிலை என்னை இப்படியாக்கி விட்டது.

என் கணவரைப் பற்றி உனக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்று தெரியவில்லை. அவர் நல்லவர் தான் அதில் எந்த சந்தேகமுமில்லை. நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். நான் நேசிப்பதை விட அவர் என்னை அதிகம் நேசிக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். மிகவும் சிறு வயதிலேயே எங்களுக்குத் திருமணம்  நடந்து விட்டதால் ரொம்ப அன்னியோன்னியம். இந்த இள வயதிலேயே ஒரு வங்கியில், மிகப் பெரிய உயர் பதவி வகிக்குமளவிற்கு உயர்ந்து இருப்பதே அவர் திறமைக்குக் காரணம். அவர் ஒழுக்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால் சமீப காலமாக, அதுவும் சந்தியா பெரிய பெண் ஆனதிலிருந்து அவர் நடத்தையில் பெரிய மாற்றம். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது என்றாலும் என்னை, என் மனதை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்னும் பொழுது எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கின்றது.

என் பிரச்னையை உனக்கு எப்படி விளக்கிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பூஜை, பஜனை என முன்னை விட மிக அதிகமாக ஈடுபடுகிறார். நான் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று ஒருநாள் கேட்டதற்கு, அவர் சித்தர் பாடல்களையும், திருவாசகத்தையும், திருவடிப் புகழ்ச்சியையும் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, " தினமும் படி மிகவும் நல்லது” என்றார். நான் சித்தர் பாடல்களையோ, திருவருட்பாவையோ, திருவாசகத்தையோ குறை கூறவில்லை. அவற்றை நான் படித்தும் தான் வருகிறேன். எனக்கு அமைதியும் அவை மூலம் தான் ஏற்படுகின்றது. ஆனால் அது தற்காலிக அமைதிதான். பொங்கி வரும் கடலை எதனைக் கொண்டு அடக்க முடியும்?. ஒன்றை அமுக்க அமுக்க அது முன்னிலும் வீரியமாய் எழுகின்றதே! நான் என்ன செய்ய? எனக்கு பயமாக இருக்கிறது மாலா, இவை எல்லாவற்றையும் விரிவாகப்பேசினால் எங்கே நீ தவறாக நினைத்து விடுவாயோ என்றும் அஞ்சுகிறேன்.

நீ கூறுவாய்! "மனம் விட்டுப் பேசு! எல்லாப் பிரச்னையும் சரியாகி விடும்", என்று! மனம் விட்டும் பேசியாகிவிட்டது. வந்த பதில் என்ன தெரியுமா? "சாரி! கல்யாணி! உனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை மறவாதே!" என்பது தான்.  ஆனால் எனக்கு முப்பத்தெட்டு வயது தான் ஆகிறது! அது என்ன கிழ வயதா?. இல்லை நாற்பது வயதானால் எல்லாரும் சந்நியாசம் வாங்கிக் கொண்டுவிட வேண்டுமா என்ன? சில சந்நியாசிகளே வாழ்க்கையை எப்படி அனுபவித்திருக்கிறார்கள், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்குத் தெரியுமே! அதை விடு! அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என் பிரச்னைக்கு என்ன தான் தீர்வு என்று நீயே சொல்.

எப்படி அந்தக் காலத்தில், இளவயதிலேயே கணவனை இழந்து, இளமை, ஆசை எல்லாவற்றையும் துறந்து, கைம்பெண்ணாய் வாழ்ந்தார்கள் என நினைக்கும்பொழுது ஆச்சர்யமாய் இருக்கின்றது. அத்தை ஏன் எல்லோரையும் கடைசி வரை திட்டிக் கொண்டிருந்தாள், பாட்டி ஏன் என்ன கேள்வி கேட்டாலும் எரிந்து எரிந்து விழுந்தாள் என இப்பொழுதுதான் புரிகிறது. கல்யாணம் ஆன மூன்றே மாதத்தில் கணவனை இழந்து விட்டவள் அத்தை. மிகுந்த வைராக்கியசாலி. பாட்டியின் கணவரோ கல்யணம் ஆன ஒரு மாதத்தில் காவிரிக்குக் குளிக்கப் போனவர், திரும்ப வரவேயில்லை, உயிரோடு. ஏன் அவர்கள் எல்லாம் அப்படி இருந்தார்கள்,   சிடுசிடுத்தார்கள் என்பது அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது, மிக நன்றாகப் புரிகிறது.  அந்தக் காலத்தில் குலம், ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் இருந்தது. ஆனால் தற்பொழுது?... நானே சில சமயம் சில சினிமாக்களை, ஒளியும் ஒலியும் போன்ற பாடல் காட்சிகளைப் பார்க்கும் பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறேன். சில சமயம் எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. ஒரு வேளை நான் தான் இப்படி இருக்கிகிறேனோ, மற்றவர்கள் எல்லாம் நார்மலாகத் தான் இருப்பார்களோ?,  எனக்குப் புரியவில்லை.

உனக்கு ஒன்று தெரியுமா? நான் இப்பொழுதெல்லாம் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறேன். வெளியில் செல்வதென்றால் கோயிலுக்குச் செல்வதோடு சரி! எனக்கே என்னைக் கண்டு சில சமயங்களில் பயமாக, ஏன் வெறுப்பாகக் கூட இருக்கிறது. மாலா! இதற்கு நல்லதொரு தீர்வை நீ தருவாய் என்ற எண்ணத்தில் தான் இம் மடல். என் பிரச்னை என் கணவருக்கு நன்கு தெரியும். என்னைக் குழந்தைப் போலத் தான் பார்த்துக் கொள்கிறார். ஆயினும் சில விஷயங்களில் அவர் அப்படித் தான். சில செயல்கள் அவர் ஆன்மீக வாழ்விற்கு இடைஞ்சல் எனக் கூறுகின்றார். நான் தான் மாற வேண்டுமாம். எனவே இது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை அல்ல. முடிவெடுக்க வேண்டிய பிரச்னை. நீ நல்லதொரு முடிவைத் தருவாய் என்ற எதிர்பார்ப்புடன்...

உன் அன்புத் தோழி
கல்யாணி


(பி.கு. தயவு செய்து கடிதத்தைப் படித்தவுடன் கிழித்து எறிந்துவிடு. உடன் உன் மடலை எதிர் பார்க்கிறேன்)

*************

               03/05/1982
விழுப்புரம்


அன்புள்ள கல்யாணிக்கு,

உன் மாலதி எழுதிக் கொண்டது. நலம் விழைவதும் அ·தே! உன் கடிதம் கிடைத்தது. எனக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை! நீ பிரச்னை என்று நினைப்பது உண்மையில் ஒரு பிரச்னையே அல்ல. வீணாக நீ தான் வழக்கம் போல் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறாய். ஆனால் அதைத் தீர்க்க நீ எந்த வழியில், நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இப்போது முக்கியம். காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை உடைத்தெறியப் போகின்றாயா? அல்லது வேறு ஏதேனும் புதுமையைச் செய்யப் போகின்றாயா? முடிவெடுக்க வேண்டியது நீ தான். உடனே உன்னை நான் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாக்குவதாக எண்ணாதே! மனம் போனபடி வாழ்வது மனித வாழ்க்கையல்ல. அது மிருக வாழ்க்கை. நீ படித்தவள். பண்புள்ளவள். மன உறுதி மிக்கவள். எந்த விதத்திலும் கீழ்த் தரமான எண்ணங்களுக்கு இடம் கொடாதே! அதற்காக உன்னை எப்பொழுது பார்த்தாலும் கடவுளையே வணங்கிக் கொண்டு இரு என்றும் கூறவில்லை. சித்தர் பாடல்கள் மட்டுமல்ல, நல்ல புத்தகங்களை நிறையப் படி. குறிப்பாக மு.வ.வின், நா.பாவின் புத்தகங்கள் உன்னை நிச்சயம் பண்படுத்தும்.

சரி உன் பிரச்னைக்கான தீர்வு தான் என்ன? உனக்கு ஞாபகம் இருக்கும், நம் ரூம் மேட் உமாவைப் பற்றியும், ஜாஸ்மினைப் பற்றியும். அப்புறம் காயத்ரி, சுதா... புரிகிறதா, நான் சொல்ல வருவது...?

அந்தக் காலத்தில் அரசர்கள் பல மனைவிகளோடு அந்தப்புர வாழ்க்கை நடத்தினர். அந்த மனைவிகள், கணவர் இல்லாத நேரங்களில் எப்படி வாழ்க்கை நடத்தி இருப்பர் என எண்ணிப் பார். சேடிப் பெண்களைப் பற்றி நீ அறிவாய் தானே! அது போல சங்க இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், அதில் தோழியின் பங்கு முக்கியமானது. அவளுக்குத் தெரியாதது என்று எதுவுமே இல்லை. தலைவியின் உடல் உறுப்புக்களில் இருந்து, உடல் மச்சங்கள் வரை. அதெல்லாம் எப்படிச் சாத்தியம், அப்படியென்ன அவர்களுக்குள் நெருக்கம், ஏன் தலைவிக்கு மட்டும் இத்தனை தோழிகள்,  தோழிக்குக் காதலே வராதா, அப்படி வந்தால் அவள் என்ன செய்திருப்பாள், அவளுக்கு யார் உதவியிருப்பார்கள்? கொஞ்சம் எண்ணிப் பார். உனக்கே எல்லாம் புரியும்.

கடைசியாக ஒன்று. இந்த சமூகம் பலதைப் பற்றியும் பலவாறாகப் பேசிக் கொண்டுதான் இருக்கும். நாம் அதைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அதே சமயம், நாம் நமது கண்ணியத்தையும் கைவிட்டு விட முடியாது. உனக்கு நல்லதொரு கணவர் குழந்தைகள் உள்ளனர் என்பதை மறவாதே! உனக்குத் தெரியுமா, சில வீடுகளில் தாயும் மகளுமே நல்ல தோழிகளாக  விளங்குகின்றனர் என்பது! எதையும் புரிந்து நடந்து கொள். அவ்வளவுதான்.

தினம்தோறும் மாலை வேளையில் அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று குழந்தைகளுடன் விளையாடு. ஏதாவது கைத் தொழில் கற்றுக் கொள். அல்லது ஆக்கப்பூர்வமான செயல்கள், சோஷியல் சர்வீஸ் என்று எதையாவது செய். நல்ல இசையைக் கேள். கர்நாடக சங்கீதக் கேசட்டுகள் நிறையக் கிடைக்கின்றன. பாலமுரளி, எம்.எல்.வி, எம்.எஸ். பாடல்களைக் கேள். உன் கணவர் அனுமதி கொடுத்தால் நீ வேலைக்குக் கூடச் செல்லலாம். உன் உண்மையான பிரச்னை என்ன தெரியுமா? தனிமைதான். அதுதான் உன்னை இப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது. அதைப் போக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும். முதலில் அதைப் போக்குவதற்கான செயல்களில் இறங்கு. வெட்டிப் பேச்சு பேசாத நல்ல நட்புக்களை வளர்த்துக் கொள். மூளைக்கு சதா வேலை கொடுத்துக் கொண்டே இருந்தால் கண்டபடி குழப்பமான எண்ணங்கள் எல்லாம் எதுவும் வராது. புரிகிறதா?

எரியும் நெருப்பை தண்ணீர் கொண்டும் அணைக்கலாம். மணல் கொண்டும் அணைக்கலாம். அது நெருப்பின் தன்மையைப் பொறுத்தது.  எனவே வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நல்லபடியாக நடந்துகொள். மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள். சில சமயங்களில் நமக்கு நாம் தான் உதவி என்பதை மறவாமல் அதற்கேற்றவாறு புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்.

அன்புடன்

உன்
மாலதி

(பி.கு. நீ சொன்ன படியே கடிதத்தைக் கிழித்து எறிந்து விட்டேன். என் இந்தக் கடிதத்தைக் கிழிப்பதும் கிழிக்காததும் உன் இஷ்டம். வாழ்க தெளிவுடன்)

Monday, August 16, 2010

சர்மாவின் டைரிக் குறிப்பு...1. கம்பன் பிறந்த நாள் 06.02.0886 புதன்கிழமை

2. A. சேஷய்யா சாஸ்திரி பிறப்பு 22.03.1828 சனிக்கிழமை

3. சுபானு புரட்டாசி-21, ஞாயிறுக் கிழமை, 05.10.1823  இராமலிங்கம் பிறப்பு.

   ஸ்ரீமுக தை 19, வெள்ளிக்கிழமை, 30.01.1874, இரவு 12 மணியில், கடகமதி, மகர பாநு, பூசத்தில், இராமலிங்க சுவாமி வடலூர் மேட்டுக் குப்பத்தில், திருவளாக மாளிகை அறையில், திருக்காப்பிட்டுக் கொண்டு மறைவு.

4. தமிழ் நாடகாசிரியர் T.T. சங்கரதாஸ் சுவாமி பிறப்பு ஆவணி மாதம், 22ஆம் தேதி, சனிக்கிழமை,07.09.1867.

 இறப்பு 13.11.1922 திங்கள்.

5. 18.08.1968 கணித மேதை சகுந்தலா தேவி, கல்கத்தா பானர்ஜியை மணந்தார்.

6. உவச்சர் குலத்தில் தோன்றியவன் கம்பன். சோழனின் வஞ்சனையால் மகன் தனை இழந்து, இனிக் கால் மிதிப்பதில்லை என்ற வைராக்கியத்தில் சோழ தேசம் விட்டேகி, பாண்டிய தேசம் வந்தனன். நாட்டரசன் கோட்டையிலே அவன் தஞ்சம் புக, அவன் வழிபடு கடவுளாம் வாணி, காளியாய் ஆங்கே வந்தமைந்திட்டனள். அதுவே ஸ்ரீகண்ணுடை நாயகியாள் ஆலயமாம்.

பிரிவுத் துயரிலே காலம் தள்ளிய அவன் அம்பிகாபதியின் மறைவுக்குப் பின் ஏது இலக்கியமும் செய்தானில்லை. துயரத்தில் வெந்து மடிந்த அவன் தன் சமாதியும் ஆங்குண்டு. இன்னமும் அவன் குலத்தவரே ஆங்கே பூசனை செய்கின்றனர். 

"பைம்பொற் சிலம்பணிந்து பாடகக் கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி"

   என அழுகுனிச் சித்தர் பாடுவது இந்த அம்மையையே! அவர் தம் ஜீவ சமாதியும் இக்கோயிலில் உண்டு.

7. அம்பிகாபதி, அமராவதியின் சமாதி, புதுக்கோட்டை சமஸ்தானத்திலே, அன்னவாசல் என்ற ஊருக்கு அருகில் உள்ள, பெரிய பாழுங்கிணற்றை ஒட்டிய தோப்பினிலே உள்ளது.  தரையோடு தரை ஒட்டிய, கேணிக்கு மூடி போல் போட்டு மூடப்பட்ட, அதனை அறிவார் யாருமில்லை ஆங்கே. 

8. ராக்காயி கோயில் என்பது, அழகர்மலையில், பழமுதிர்ச் சோலையின் மேலுண்டு. நூபுர கங்கையின் அடித்தளத்திலே அமைந்திட்ட அக்கோயில் சிலாரூபம் உண்மையில் காளியன்று. கண்ணகியே! மதுரைக்கு வருமுன், ஈண்டு வந்து மாநகர் எல்லையான சிலம்பாற்றங்கரையிலே தங்கி இளைப்பாறினர் கண்ணகியும் கோவலனும். பின்னர் நடந்த நிகழ்வால் சீற்றம் கொண்ட கண்ணகி, மதுரையை எரித்த பின், இவ்விடம் வந்தே கோவலனுடன் வானேகினள். அதனைக் கண்ட வேட்டுவர்கள், கண்ணகியை வழிபட்டுக் கோயில் சமைத்தனர். எனவே கண்ணகியின் கோயிலே அஃதாம். 

ஒரு காற்சிலம்பு மட்டுமே அச் சிலாரூபம் கொண்டிருப்பதே அதற்குச் சாட்சியாம்.

9. வேங்கட மலையில் எழுந்தருளியிருக்கும் சிலா ரூபம் விட்டுணு அன்று என்றும், தசாவதாரத்தில் எந்த அவதாரமும் அதுவன்று, உண்மையில் ஸ்ரீ சுப்ரமண்யரே அங்கு இருப்பது என்றும், பின்னோர் அதனை மாற்றி பெருமாளாக்கி விட்டனர் என்றும் சிலர் கூறும் கூற்று உண்மை என்பதற்கான வலுவான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைத்திலது. ஆயினும் பி. ஸ்ரீ. ஆச்சார்யாவின் விகடன் கட்டுரை ஈண்டு சிந்திக்கற்பாலதே.

எனினும் வள்ளியும், தெய்வானையும், முருகனும் வேலும் எங்கே போயின என்பதை அக்கட்டுரை விரிவாக விளக்கின் நலம் பயக்கும்.

10. தேவர் மலை என்று ஈண்டு ஓர் மலையுண்டு. அம்மலையில் ஜீவ சமாதியாய் இருப்போர், சிற்றரசராய் விளங்கிய பெருமிழலைக் குறும்ப நாயனார். தம்பிரான் தோழருக்கும், சேரமானுக்கும் தோழர்.

இம்மலைபற்றி, "காக்கை மூக்கு நிழலிலே கலம் பொன்" என்று பெரியோர்கள் கூறக் கேட்டதுண்டு. இம்மலையின் உச்சி காக்கையின் மூக்குப் போன்று இருக்கும் என்றும், அதன் நிழல் வீழும் இடத்திலெல்லாம் கலம் பொன் புதையல் இருப்பதாகவும் ஐதீகம்.

ஆனால் நிழல், எப்பொழுது, எந்தெந்த இடத்தில், எந்தெந்த நேரத்தில் விழும், அதிலே எவ்வெவ்விடத்திலே புதையல் உண்டு என்பதை இது காறும் யாரும் அறிந்திலார்.

பங்குனி 16, விரோதிகிருது, 7.00 pm, 29-03-1972