Wednesday, August 26, 2009

பிரியவாதினி - நிறைவுப்பகுதி

மறுநாள் காலை, மதங்க தேவர் விடுதியில் அனுஷ்டானங்களை முடித்து விட்டு தியானத்தில் இருந்த போது அரசாங்க அதிகாரி ஒருவர் வந்து அடிபணிந்து பல்லவச் சக்கரவர்த்தி ‘ காலை பத்து நாழிகைக்கு மேல் அங்கு வந்து ஆச்சார்யரை வணங்க விரும்புவதாக' தெரிவித்துக் கொண்டார்.

'அப்போது பிரியவாதினியைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் உதவியை நாடலாமா?' என்று கூட முனிவருக்குத் தோன்றிற்று.


‘ஒருக்கால் இவள் ஸ்ரீபுரம் தனியாகப் போயிருப்பாளா?' அவருக்கும் பலவித மனக்கவலைகள் அலைமோதிக் கொண்டிருந்தன.


பத்துநாழிகைக்கு மேல் சக்கரவர்த்தி பரிவாரங்களுடன் விடுதிக்கு வருகை தந்தார்.


சக்கரவர்த்தியை மதங்க முனிவர் எதிர்கொண்டு வரவேற்று ‘ வர வேண்டும்.., வர வேண்டும்.. இந்த ஏழை தன்யனானேன்' என்று அழைத்து ஆசனத்தில் அமரச் செய்தார்.


பரிவாரங்களில் ஒருசிலர் பெரிய தந்தப்பேழைகளைக் கொண்டு வந்து முனிவரின் முன்னால் வைத்தார்கள்.


பிறகு சக்கரவர்த்தி ஒரு ‘சமிக்ஞை' மூலம் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு, ஆசனத்தை விட்டு எழுந்து ‘தாங்கள் கருணை கூர்ந்து என் அழைப்பினை ஏற்று இங்கு வந்து இந்த விழாவை நடத்திக் கொடுத்தற்கு பல்லவ நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். தங்கள் குருகுலம் அமைந்த நந்திமலையில் ஒரு குடைவரைக் கோயில் அமைப்பதற்காக நூறு சிற்பிகளை இங்கிருந்து அனுப்பியிருக்கிறேன்! அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் தங்கள் குருகுலத்திற்கும் வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்திருக்கிறேன்..' என்று கூறிய சக்கரவர்த்தி, சட்டென்று பேச்சை நிறுத்தி, ‘ஆச்சார்ய தேவா!!.. தாங்கள் ஏதோ மனதில் தீவிரமாக விசனப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே!..' என்று வினவினார்.


மதங்கர் ஒரு கணம் மௌனமாக இருந்து விட்டு, ‘ சக்கரவர்த்தி... என்னுடைய பிரதம சிஷ்யையான ஒரு இளம் பெண்ணை நேற்று பிற்பகல் முதல் காணவில்லை. அவளைத் தேட தாங்கள் ஏற்பாடு செய்ய இயலுமா, இது என் வேண்டுகோள்!..' என்றார் மதங்கர்.


சக்கரவர்த்தி ஆசனத்தில் அமர்ந்து சில கணங்கள் மௌனமாக இருந்தார்.


அப்போது மதங்கர் மீண்டும் சொன்னார். ‘.. சில காலத்திற்கு முன் பல்லவ நாட்டைச் சேர்ந்த குணசேனன் என்னும் இளைஞன் என்னிடம் நடனமும், இசையும் சில காலம் பயின்றான். அவன் இங்கே அருகில் உள்ள ஸ்ரீபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். அவன் நடனத்திலும் இசையிலும் மிகவும் சமர்த்தனாக இருந்தான். அவன் என்னுடைய பிரதம சிஷ்யன் என்று சொல்வதற்கே பெருமைப்படுவேன். இந்தப் பெண் எனக்கு பிரதம சிஷ்யையாக இருந்தவள். இந்த இளம் பெண் அந்த வாலிபனை மனதால் மிகவும் விரும்பினாள்.. அந்த வாலிபன் ஒரு வருடத்திற்கு முன்னால் தன் தாய் தந்தையரை பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிப் போனவன் திரும்பி வரவேயில்லை. நானும் இந்தப் பெண்ணிற்காக சீடர்களை அனுப்பி ஸ்ரீ புரத்தில் குணசேனனைத் தேடிப் பார்க்க எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பலனில்லாமல் போய்விட்டது!..'


சக்கரவர்த்தி ஒருகணம் மௌனமாக இருந்து விட்டு, ‘நேற்று சன்மானம் வாங்கிக் கொள்ளாமல் போன பெண் அவள் தானா?..' என்று வினவினார்.


‘ஆமாம், பிரபு!'


‘.. ஆச்சார்ய தேவா! அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் எல்லாம் கிடைத்து விட்டன. அவளைத் தாங்கள் இனித் தேடிப் பயனில்லை!..'


‘பிரபோ!.. அது என்ன?'


‘.. ஆமாம்.. அந்தப் பெண் நேற்றுப் பிற்பகல் இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள புத்த விஹாரத்திற்குச் சென்று புத்த பிக்ஷுணி ஆகி விட்டாள்'


‘ஆஹா!.. அப்படியா? அவள் குணசேனனைக் காணாமல் மனமுடைந்து போய் விட்டாள் என்றே நினைக்கிறேன். எவ்வளவோ இடங்களில் நானும் குணசேனனை தேடிப் பார்த்தேன்!..'


சக்கரவர்த்தி ஒரு கணம் ஆசனத்திலிருந்து எழுந்து தன் சிரசிலிருந்து மணி மகுடம் எடுத்து மதங்க தேவரின் திருவடியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்.


‘ஆச்சார்ய தேவா!.. இந்த குணசேனனை எங்கெல்லாம் தேடினீர்கள்?.. என்னை மன்னித்து அருள வேண்டும். நான் அந்தப் பெண்ணிற்கு எவ்விதத் தீங்கும் செய்துவிடவில்லை...'


மதங்கர், சக்கரவர்த்தியை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு அதிர்ந்தவராக ‘குணசேனா!.. சக்கரவர்த்தியா!?.. தாங்களா?!..' என்று பதறினார்.


‘இந்த ஏழைதான் தங்கள் சிஷ்யன் குணசேனன். இதோ இந்த தந்தப்பேழையில் ஓலைச்சுவடியில் நானே எழுதி வைத்த தங்கள் அமர இலக்கியம் ‘பிருஹத்தேசி' இருக்கிறது. இதுவே இந்த எளியவனுடைய காணிக்கை. அந்தப் பெண் இயற்றிய தமிழ்ச் செய்யுளை நந்தி மலை குடைவரைக் கோயிலில் கல்வெட்டுக்களாகப் பதிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்தப் பேழையில் நானே உருவாக்கிய ஒரு புதியதோர் யாழ் இருக்கிறது! இந்த யாழ், அவளுடைய யோசனையின் பேரில் தாங்கள் விவரித்த சுத்த, சாயலக, சங்கீர்ண ராகங்களை நன்றாக மீட்டக் கூடியது.'


‘சக்கரவர்த்தி! எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்க அந்தக் கலையரசி என் கைவிட்டு போய் விட்டாள் என்று நினைக்கும் போது...'


'புத்த, ஜைன மதங்கள் வாழ்க்கையைத் துறப்பதால் மோட்சத்தை அடைய முடியும் என்று மோட்சத்திற்கு தான் வழிகாட்டுகின்றன. வாழும் தர்மங்களை விவரித்து, சிறப்பாக வாழ்ந்து மோட்சத்தை அடைய அவை வழி சொல்லவில்லை!.. ஒரு மாபெரும் கலையரசியை இந்த மதம் விழுங்கி விட்டது... அந்த மதங்களை வேரோடு களைவதிலேயே நான் என் வாழ்நாள் முழுவதையும் செலவிடுவேன்..'


மதங்கர் அதிர்ந்து போய் நின்றார்!


‘இந்த யாழின் பெயர்..' என்று சற்று நிறுத்தினார் சக்கரவர்த்தி.


‘பெயர்?..'


‘இதன் பெயர்.. பிரியவாதினி!'.. என்று சொன்ன சக்கரவர்த்தியின் கண்கள் நீர்ச்சுனைகளாய் நிரம்பி இருந்தன.


ஆசிரியர் குறிப்பு:

நந்திமலை என்று கதையில் குறிப்பிட்டது பிற்காலத்தில் குடுமியான்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கே மகேந்திரபல்லவன் ஆணையின் பெயரில் ஒரு குடைவரைக் கோவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.


இந்தக் கோவிலில் இசைக் கல்தூண்கள் ஏழு சுரங்களை வாசிக்கக் கூடிய அளவில் உள்ளன. இது உலகப் பிரசித்தி பெற்றது.


இந்த மலைச்சாரலின் தென்பகுதியில் உள்ள ஒரு பாறைக் கல்வெட்டில், முப்பத்தெட்டு வரிகளில் ஒரு செய்யுள் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வரியில் 64 எழுத்துகள் இருக்கின்றன. 64 எழுத்துகளிலும் இசை, இலக்கணக் குறியீடுகள் காணப்படுகின்றன.


இந்தக் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரே பாறை மேல் ஒரு ஆசானும், அருகே ஒரு கமண்டலமும் சிற்பங்களாக உள்ளன.


நமது நாட்டு இசை மரபில் நடனத்தோடு இணைந்தது இசையாகும். இசை தனியாகப் பாடப்பட்டதில்லை.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மதங்கர் எழுதிய 'பிரஹத்தேசி' என்னும் வடமொழி நூல் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திற்குப் பிறகு ஒரு முக்கியமான இசை, இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. இந்நூல் இப்பொழுது முழுமையாகக் கிடைக்கவில்லை.


மகேந்திரவர்மன், ருத்ராச்சாரியாரிடம் இசை பயின்றவன். அவனுக்கு குணசேனன் என்ற பெயரும் உண்டு. இவன் உருவாக்கிய புதிய யாழின் பெயர் 'பரிவாதினி' என்று சொல்லப்படுகிறது.


'பரிவாதினி' என்ற வடமொழிச் சொல்லுக்குப் பொருள் சரியாக வரவில்லை. அது பிரியவாதினியாகவே இருக்கக் கூடும்.


வடமொழியில் வல்லவனான மகேந்திரவர்மன் முதலில் ஜைன மதத்தில் இருந்து பிறகு சைவ மதத்தைத் தழுவியதாக வரலாறு. இவன் எழுதிய வடமொழி நாடகம் ‘மத்தவிலாசம்' புத்த, ஜைன மதங்களின் குறைபாடுகளை கேலி செய்வதாக காணப்படுகிறது.


(முற்றும்)


நன்றி : இந்தக் கதையை இணையத்தில் பதிப்பிக்க அனுமதி தந்த எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

1 comment:

அரவிந்த் said...

ஆமாம். இது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்னால் 1960-65 வாக்கில் வெளி வந்த சிறுகதை என்பது குறிப்பிடத்தக்கது.