Monday, August 16, 2010

சர்மாவின் டைரிக் குறிப்பு...



1. கம்பன் பிறந்த நாள் 06.02.0886 புதன்கிழமை

2. A. சேஷய்யா சாஸ்திரி பிறப்பு 22.03.1828 சனிக்கிழமை

3. சுபானு புரட்டாசி-21, ஞாயிறுக் கிழமை, 05.10.1823  இராமலிங்கம் பிறப்பு.

   ஸ்ரீமுக தை 19, வெள்ளிக்கிழமை, 30.01.1874, இரவு 12 மணியில், கடகமதி, மகர பாநு, பூசத்தில், இராமலிங்க சுவாமி வடலூர் மேட்டுக் குப்பத்தில், திருவளாக மாளிகை அறையில், திருக்காப்பிட்டுக் கொண்டு மறைவு.

4. தமிழ் நாடகாசிரியர் T.T. சங்கரதாஸ் சுவாமி பிறப்பு ஆவணி மாதம், 22ஆம் தேதி, சனிக்கிழமை,07.09.1867.

 இறப்பு 13.11.1922 திங்கள்.

5. 18.08.1968 கணித மேதை சகுந்தலா தேவி, கல்கத்தா பானர்ஜியை மணந்தார்.

6. உவச்சர் குலத்தில் தோன்றியவன் கம்பன். சோழனின் வஞ்சனையால் மகன் தனை இழந்து, இனிக் கால் மிதிப்பதில்லை என்ற வைராக்கியத்தில் சோழ தேசம் விட்டேகி, பாண்டிய தேசம் வந்தனன். நாட்டரசன் கோட்டையிலே அவன் தஞ்சம் புக, அவன் வழிபடு கடவுளாம் வாணி, காளியாய் ஆங்கே வந்தமைந்திட்டனள். அதுவே ஸ்ரீகண்ணுடை நாயகியாள் ஆலயமாம்.

பிரிவுத் துயரிலே காலம் தள்ளிய அவன் அம்பிகாபதியின் மறைவுக்குப் பின் ஏது இலக்கியமும் செய்தானில்லை. துயரத்தில் வெந்து மடிந்த அவன் தன் சமாதியும் ஆங்குண்டு. இன்னமும் அவன் குலத்தவரே ஆங்கே பூசனை செய்கின்றனர். 

"பைம்பொற் சிலம்பணிந்து பாடகக் கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி"

   என அழுகுனிச் சித்தர் பாடுவது இந்த அம்மையையே! அவர் தம் ஜீவ சமாதியும் இக்கோயிலில் உண்டு.

7. அம்பிகாபதி, அமராவதியின் சமாதி, புதுக்கோட்டை சமஸ்தானத்திலே, அன்னவாசல் என்ற ஊருக்கு அருகில் உள்ள, பெரிய பாழுங்கிணற்றை ஒட்டிய தோப்பினிலே உள்ளது.  தரையோடு தரை ஒட்டிய, கேணிக்கு மூடி போல் போட்டு மூடப்பட்ட, அதனை அறிவார் யாருமில்லை ஆங்கே. 

8. ராக்காயி கோயில் என்பது, அழகர்மலையில், பழமுதிர்ச் சோலையின் மேலுண்டு. நூபுர கங்கையின் அடித்தளத்திலே அமைந்திட்ட அக்கோயில் சிலாரூபம் உண்மையில் காளியன்று. கண்ணகியே! மதுரைக்கு வருமுன், ஈண்டு வந்து மாநகர் எல்லையான சிலம்பாற்றங்கரையிலே தங்கி இளைப்பாறினர் கண்ணகியும் கோவலனும். பின்னர் நடந்த நிகழ்வால் சீற்றம் கொண்ட கண்ணகி, மதுரையை எரித்த பின், இவ்விடம் வந்தே கோவலனுடன் வானேகினள். அதனைக் கண்ட வேட்டுவர்கள், கண்ணகியை வழிபட்டுக் கோயில் சமைத்தனர். எனவே கண்ணகியின் கோயிலே அஃதாம். 

ஒரு காற்சிலம்பு மட்டுமே அச் சிலாரூபம் கொண்டிருப்பதே அதற்குச் சாட்சியாம்.

9. வேங்கட மலையில் எழுந்தருளியிருக்கும் சிலா ரூபம் விட்டுணு அன்று என்றும், தசாவதாரத்தில் எந்த அவதாரமும் அதுவன்று, உண்மையில் ஸ்ரீ சுப்ரமண்யரே அங்கு இருப்பது என்றும், பின்னோர் அதனை மாற்றி பெருமாளாக்கி விட்டனர் என்றும் சிலர் கூறும் கூற்று உண்மை என்பதற்கான வலுவான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைத்திலது. ஆயினும் பி. ஸ்ரீ. ஆச்சார்யாவின் விகடன் கட்டுரை ஈண்டு சிந்திக்கற்பாலதே.

எனினும் வள்ளியும், தெய்வானையும், முருகனும் வேலும் எங்கே போயின என்பதை அக்கட்டுரை விரிவாக விளக்கின் நலம் பயக்கும்.

10. தேவர் மலை என்று ஈண்டு ஓர் மலையுண்டு. அம்மலையில் ஜீவ சமாதியாய் இருப்போர், சிற்றரசராய் விளங்கிய பெருமிழலைக் குறும்ப நாயனார். தம்பிரான் தோழருக்கும், சேரமானுக்கும் தோழர்.

இம்மலைபற்றி, "காக்கை மூக்கு நிழலிலே கலம் பொன்" என்று பெரியோர்கள் கூறக் கேட்டதுண்டு. இம்மலையின் உச்சி காக்கையின் மூக்குப் போன்று இருக்கும் என்றும், அதன் நிழல் வீழும் இடத்திலெல்லாம் கலம் பொன் புதையல் இருப்பதாகவும் ஐதீகம்.

ஆனால் நிழல், எப்பொழுது, எந்தெந்த இடத்தில், எந்தெந்த நேரத்தில் விழும், அதிலே எவ்வெவ்விடத்திலே புதையல் உண்டு என்பதை இது காறும் யாரும் அறிந்திலார்.

பங்குனி 16, விரோதிகிருது, 7.00 pm, 29-03-1972

Monday, August 9, 2010

யாரோ ஒருவனின் டைரிக் குறிப்புக்கள்

“ப்போப்பு.. ப்போப்பு..” கத்திக் கொண்டே ஒரு தள்ளு வண்டிக்காரன் கடந்து போகிறான்.

“சாமி, எதுனா போட்டுக் கொடு சாமி! நீதான் பஸ்ட் சவாரி” என்கிறான் ஒரு ஆட்டோக்காரன்.

“அம்மா, இங்க பாரும்மா! இவன் கோலம் போடவிடாம என்னைத் தடுக்கறான்மா” புகார் சொல்கிறாள் ஒரு சின்னப் பெண்.

“ஏய்! சீக்கிரம் போ, பைப்பில தண்ணி வருதான்னு பாரு!” யாரோ ஒரு பெண், யாரையோ விரட்டிக் கொண்டிருந்தாள்.

‘நாயர், ஸ்ட்ராங்க்கா ஒரு டீ'. வாயில் சிகரெட் புகையுடன் ஒரு வாலிபன்.

“ஏய், ஊருக்குப்போனதும் மறக்காம ஆபிசுக்கு போன் பண்ணு என்ன?” என்கிறான் ஒரு ஆண், மனைவியை ரிக்ஷாவில் ஏற்றிவிட்டுவிட்டு.

“ஏய். எருமை எழுந்திரு. இன்னும் என்ன தூக்கம்!” ஒரு தாய் மகளை அதட்டுகிறாள்.

 ஒரு குடுமி வைத்த பையன், மொட்டை மாடியில் சூரியனைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தவாறு குனிந்து, நிமிர்ந்து, உட்கார்ந்து, எழுந்து ஏதோ செய்கிறான்.

 எங்கோ ஒரு குழந்தை வாய் ஓயாமல் அழுது கொண்டிருக்கிறது.

உற்சாகத்துடன் கல்லூரிக்குப் புறப்படுகிறார்கள் மாணவர்கள்.

 நாடார், கடையைத் திறந்து, சாமிபடத்துக்கு மாலை போட்டு, ஊதுபத்தி காட்டிக் கொண்டிருக்கிறார்.

எங்கோ ஒரு அய்யர் சத்தமாக மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

“ஏதுடா இது வம்பா இருக்கே” அவிழ்ந்த குடுமி வேகமாக ஆட ஒரு மனிதர் மற்றொருவரிடம் விவாதித்துக் கொண்டே தெருவில் நடந்து செல்கிறார்.

“ச்சே, இந்த சாக்கடை வேற சனியன் அடிக்கடி அடைச்சுக்குது, அதுவும் ஆபிஸ் போற நேரத்தில” அலுத்துக் கொண்டே, நீளமான கம்பியால் சைபனைக் குத்திக் கொண்டிருக்கிறார் ஒரு கண்ணாடி மனிதர்.

‘கோல மாவு' ‘கோல மாவு' கத்திக் கொண்டே சைக்கிளில் செல்கிறான் ஒரு மனிதன்.

 ஷஷ்டியை நோக்க சரவண பவனார்...... பாடல் எங்கோ ஒலிக்கிறது.

“அம்மா, பால்” கூவுகிறான் ஒரு சின்னப்பையன்.

யாரோ ஒரு மனிதர், எங்கோ காறிக் காறித் துப்பிக் கொண்டிருக்கிறார்.

தேவையில்லாமல் ‘ஹார்ன்' அடித்தவாறே பைக்கில் ஒருவன் வேண்டுமென்றே அங்கும் இங்கும் கடந்து செல்கிறான். ஒரு ரெட்டைச் சடை போட்ட பெண் மாடியிலிருந்து எட்டிப் பார்க்க, இவன் கை உயர்த்திப் புன்னகைக்கிறான். அவளும் சுற்று முற்றும் பார்த்து விட்டுக் கையசைக்கிறாள்.

 ‘நாதா தனுமனிசம்' நிறைய பெண்கள் கோரசாக சுருதி பிசகாமல் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

 ‘ம்மா!' மாடு இரண்டு முறை கத்திவிட்டு நடு ரோட்டில் சாணம் போட்டுவிட்டுச் செல்கிறது.

 நான் கயிற்றை உத்தரத்தில் மாட்டி முடிச்சை இறுக்கிப் பார்க்கிறேன்.

- 1981, பிப்ரவரி 26, வியாழக்கிழமை, திருவல்லிக்கேணியில் ஒரு காலைப் பொழுது...