Monday, August 3, 2009
”நலம் தரும் சொல்” - சிறுகதைக் குறுந்தகடு விமர்சனம்
சிறுகதை ஆசிரியரும் நல்ல சிறுகதை ரசிகருமான திரு பூரம். சத்தியமூர்த்தி அவர்கள், தனது பூரம் சிறுகதை ரசிகர் மன்றத்தின் சார்பாக ‘நலம் தரும் சொல்’ என்ற தலைப்பில் தேர்ந்தெடுத்த தனது சிறுகதைகளை குறுந்தகடாக வெளியிட்டிருக்கிறார்.
சிறுகதைகள் என்பன நடையால், கருப்பொருளால், இலக்கிய உத்திகளால், பாத்திரப் படைப்புகளால், சொல்லும் விதத்தால் சிற்ப்புறுகின்றன. நம் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கின்றன. அந்த வகையில் திரு பூரம் அவர்கள், தான் எழுதி பரிசுகள் பெற்ற சிறப்புச் சிறுகதைகளான ’நலம் தரும் சொல்’, ’சங்கரம்’, ’ஸ்தல விருக்ஷம்’, ’அந்தி வேளை’ என்னும் நான்கினையும் நம் செவிக்கு விருந்தாகும் குறுந்தகடாக்கி அளித்திருக்கிறார்.
’நலம் தரும் சொல்’ கதாநாயகனின் நினைவோட்டத்தில் விரிகிறது. ’சர்ரியலிஸம்’ எனப்படும் ’ஆழ்மன இயல்பியல்’ உத்தியில் இக்கதை சிறப்புறுகிறது. துறவறம் மேற்கொள்ள வேண்டிய இலட்சியத்தில் திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டிருக்கும் கதாநாயகனின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது. காஷாய ஆடை தரிக்க விரும்புவன், கல்யாண மாலை பூண நினைக்கிறான். அந்தக் காதல் நிறைவேறியதா, இல்லை அவன் லட்சியம் நிறைவேறியதா என்பதை தனக்கே உரிய பாணியில், மிகச் சிறப்பாக வருணனைகளைக் கையாண்டு நலம் தரும் சொல்லாக நயம் பட உரைத்திருக்கிறார் ஆசிரியர். பாம்பே கண்ணன் கதாநாயகனாகவே மாறி களிக்கிறார், மருகுகிறார், மயங்குகிறார், பதறுகிறார், கலங்குகிறார். நம்மை கதை நடக்கும் திருமாலிருஞ்சோலைக்கே அழைத்துச் சென்று விடுகிறார் என்றால் அது மிகையில்லை. உறுத்தாத பின்னணி இசையும், தெளிவான, உச்சரிப்புச் சுத்தத்துடன் கூடிய பின்னணிக்குரல்களும் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.
அடுத்த கதை சங்கரம். காதலும் இசையும் கலந்த இனிய சிறுகதை. கதாநாயகன் ஒரு அநாதை. அவனை அன்புகாட்டி வளர்க்கும் மாமாவுக்கும், மாமிக்கும் என்றும் நன்றியோடு இருக்க விரும்புகிறான். அவர்களின் ஒரே மகள் கல்யாணி. மாமி திடீரென்று மறைய, சங்கரன் மனமொடிந்து போகிறான். கல்யாணி கவலையில் வீழ்கிறாள். அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் செய்வதை தனது கடமையாக நினைக்கிறான். சங்கரன். ஆனால் கல்யாணியோ அவனையே மணம் செய்து கொள்ள நினைக்கிறாள். சங்கரன் அதை மறுக்கிறான். பின்னர் சம்மதிக்கிறான். திடீரென அவன் மாமா, அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுமாறும் கூறுகிறார். அவர் கூறுவதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட சங்கரன், கல்யாணியின் மீதான காதலைத் துறந்து இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறான்.
அதன் பின் என்ன நடக்கிறது, கல்யாணிக்கும் அவனுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதை ”சங்கரம்” என்னும் தலைப்பில் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். சாதாரண கதைதான், ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதத்தில், காட்சிகளின் சித்திரிப்பில் இது சிறப்பான கதையாகிறது. பின்னணிக் குரல்கள் இச்சிறுகதைக்கு பக்கபலமாக இருக்கின்றன.
இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான சிறுகதை ஸ்தல விருக்ஷம். குடும்ப உறவுகளை, அண்ணன் தங்கை பாசத்தை, நகர வாழ்க்கையின் உதாசீனத்தை, பணம் வந்தால் மனிதர்கள் மாறிப் போய் விடுவதை உணர்ச்சி பொங்கக் கூறும் சிறுகதை இது. ஆனால் கதையில் மைய இழையாக இருப்பது ’சாதி’ இறைவன் படைப்பில் அனைவரும் சமமே! ஆனால் மனிதர்கள் தங்கள் தவறான புரிதல்களினாலும், கற்பிதங்களினாலும் தங்களுக்குள் உயர்வு, தாழ்வு கருதிக் கொள்கின்றனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தக் கதை ஒரு முதலியார் பெண் எப்படி ஐயங்கார் பெண்ணாக மாறுகிறாள் என்பதைச் சுட்டுகிறது எனலாம். அல்லது ஒரு மகள் எப்படி மருமகள் ஆகிறாள் என்பதை விளக்கும் கதை என்றும் கூறலாம்.
சுதர்சனன் தன் தங்கை மங்கையின் மீது உயிரையே வைத்திருக்கிறான். பக்கத்துவீட்டில் வசிக்கும் முதலியார் பெண் மாணிக்கவல்லியையும் சமமாகவே பாவிக்கிறான். மாணிக்கவல்லியின் பெற்றோர்கள் அடுத்தடுத்து இறந்து விட, அவள் சுதர்சனன் வீட்டில் தஞ்சமடைகிறாள். படிப்படியாக தனது நடத்தைகளால் அவர்கள் குடும்பத்துள் ஒருத்தியாக மாறுகிறாள். மங்கை திருமணமாகிச் செல்கிறாள். நகரவாழ்க்கையின் டாம்பீகமும், அவள் பாசத்திற்கு விலையாகிறது. பிறந்த குடும்பத்துடன் ஒட்டுதலும், தொடர்பும் இல்லாமல் போய் விடுகிறது. சுதர்சனின் தாய் படுத்த படுக்கையாகி விட, அவளுக்கு மகள் போல் இருந்து எல்லாச் சேவைகளையும் செய்கிறாள். சுதர்சனனுக்கும், மாணிக்கவல்லியின் மீதான இரக்கம் சுதர்சனனுக்கு காதலாக மாறுகிறது. அவளையே மணமுடிக்கப் போவதாக தாயைப் பார்க்க வந்த மங்கையிடம் சொல்கிறான். அவள் சாதி வித்தியாசம் பாராட்டிக் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறாள்.
தாய் இறக்கும் முன்பு, மாணிக்கவல்லியையே திருமணம் செய்து கொள்ளுமாறு சுதர்சனனிடம் சொல்கிறாள். மேலும் அவள், ‘பகவானைச் சரணடைந்து உண்மையான பக்தி செய்பவர்கள் எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான். மாணிக்கவல்லியும் இந்த வீட்டுப் பெண் தான். ஸ்ரீ வைஷ்ணவ குலப் பெண் தான்’ என்று சொல்லி இருவரையும் ஆசிர்வதித்துக் கண்ணை மூடுகிறாள். ஜாதி வித்தியாசம் பிறப்பினால் ஏற்படுவதில்லை. அவரவர்களது நடத்தையால் தான் அது தீர்மானிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இக்கதை. மாணிக்க வல்லியின் பாத்திரம் மறக்க முடியாத ஒன்று. பாத்திரப்படைப்பால், கதை மாந்தர்களால் இந்தச் சிறுகதை சிறப்புறுகிறது.
அடுத்து வரும் ’அந்திவேளை’ கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டது. வெகு சாதாரணமான கதை. கிராமத்தில் மிகப் பணக்காரக் குடும்பங்கள் இரண்டு. ஒற்றுமையாக இருந்த அக் குடும்பங்கள் ஏதோ காரணத்தால் பிரிந்து, பேச்சு வார்த்தையே இல்லாமல் போய் விடுகிறது. கதையின் தலைவிக்கு, பிரிந்து போன அந்தக் குடும்பத்தின் வாரிசு மீது காதல். மேலும் ஏதோ காரணத்தால் பிரிந்த அந்த இரண்டு குடும்பங்களையும் ஒன்று சேர்க்கவும் அவள் விரும்புகிறாள். ஏன் அந்தக் குடும்பம் பிரிந்தது, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, மீண்டும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்தனவா என்பதை ஒரு நாடகம் போன்று இந்தக் கதை விளக்குகிறது. இந்தக் கதைப் பொருளை அடிப்படையாக வைத்து நிறைய திரைப்படங்கள், நாடகங்கள் உருவாக்கியிருக்கின்றன. என்றாலும் பண்டாரம், அம்மன் அருள், மல்லிகை வாசம் என்றெல்லாம் சேர்த்துக் கோர்த்து கதைக்கு ஒருவித மாந்திரீக யதார்த்தத் தன்மையைக் கொண்டு வந்திருகிறார் ஆசிரியர்.
நான்கு கதைகளுமே மிக நன்றாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல குரல் வளத்துடன் கூடிய பின்னணிக் கலைஞர்கள் பங்களித்திருக்கிறார்கள். உறுத்தாத பின்னணி இசை சிறுகதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது. ஒரு நாடகம் பார்க்கும் மனநிறைவை இந்தக் குறுந்தகடு அளிக்கிறது என்றால் அது மிகையில்லை. பாம்பே கண்ணன் குழுவினருக்குப் பாராட்டுகள்! பூரம் சத்தியமூர்த்திக்கு வாழ்த்துகள்! எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அளித்திருக்கும் பி.வெங்கட்ராமன் சிறுகதை ஆர்வலர்களின் நன்றிக்குரியவர்.
பத்திரிகை ஊடகங்களில் சிறுகதைகள் வெளிவருவதே அருகி விட்ட காலத்தில், சிறுகதைகளுக்கான வாசகர்கள் எண்ணிக்கையே குறுகிப் போய் விட்ட கால கட்டத்தில், குறுந்தகடாக அதுவும் 1960-70களில் வெளிவந்த சிறுகதைகளை வெளிக் கொணர்ந்திருப்பது தைரியமான முயற்சி. ஆனால் தற்போதைய இளம் தலைமுறை வாசகர்கள் இது போன்ற குறுந்தகடுகளை வாங்கி ஆதரிக்கக முன்வருவார்களா? சிறுகதை ரசிகர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
தொடர்புக்கு
பூரம் சத்திய மூர்த்தி – 9444452202
பி.வெங்கட்ராமன் – 9841076838
குறுந்தகடு கிடைக்குமிடம்
பாம்பே கண்ணன்
17/டி, (30/டி) சுமந்த் அபார்ட்மெண்ட்,
தேவநாதன் தெரு,
மந்தவெளி, சென்னை-28
கைப்பேசி – 9841153973
bombaykannan@hotmail.com
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சார், சிறுகதையை எல்லாம் இப்ப எவன் படிக்கறாங்குறீங்க? இதுல சிடியா வேற கதைங்க, அதுவும் 1950-60ல வந்தது.... என்னமோ, பொழுது போகாத வயசான ஆட்கள் பண்ற வேலைன்னு நினைக்கறேன். வேற என்னத்த சொல்றது?.....
வாழ்க வளமுடன்
அசோகன்
Post a Comment