Friday, August 28, 2009

மியூசிக் தெரபி - இசைச் சிகிச்சை

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன். இசை கேட்டு, உலக உயிர்கள் மட்டுமல்ல, இறைவனே மயங்கியதாகக் கூறப்படுவது அதன் பெருமையை விளக்குவதாகும். வெறும் பக்தி வெளிப்பாட்டிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே இசை என்பதில்லை. அதன் மூலம் நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதே அதன் சிறப்பான முக்கியத்துவம்.


தற்போது மாற்றுச் சிகிச்சை முறை என்பது எல்லா இடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. உண்மையில் மாற்றுச் சிகிச்சை முறை என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? பயன்கள் என்ன? என்பது பற்றி பலர் முறையாக அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.


தற்போதுள்ள ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக உள்ள இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், யோகா தெரபி போன்றவையே மாற்று மருத்துவச் சிகிச்சை முறை என அழைக்கப்படுகின்றது. இதில் ‘மியூசிக் தெரபி' எனப்படும் இசை வழியான சிகிச்சை முறையும் ஒன்றாகும். இவற்றின் முக்கிய பயன்கள் என்னவென்றால் பின்விளைவுகள் ஏதும்  ஏற்படாது என்பது தான்.


 
இசைவழி சிகிச்சைமுறை
பல்வேறு விதமான நோயுற்ற மனிதர்களுக்கு, அவர்கள் தம் நோயின் தன்மைக்கேற்றவாறு குறிப்பிட்டவகை இசைக் கோர்வைகளைப் பயன் படுத்தி நோயினைத் தீர்க்க முனைவதே மியூசிக் தெரபி எனப்படும் இசைவழிச் சிகிச்சை முறையாகும்.


குறிப்பிட்ட வகை இசையின் மூலம், பிறழ்வான நடத்தையுடையோர், மாறுபட்ட குணாதிசியங்களை உடைய மனிதர்கள், சிலவகை மன நோயால் பாதிக்கப்பட்டோர், உடல்நலக் குறைபாடு உடையவர்கள் எனப் பலருக்கும் குறிப்பிடத் தகுந்த விதத்தில் முன்னேறம் அடைவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


புகழ்பெற்ற பலமருத்துவமனைகளிலும் மாற்றுச் சிகிச்சை முறையாக இசை பயன்படுத்தப்படுகின்றது. சான்றாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இசைவழி சிகிச்சைக்கு எனத் தனியாக ஒரு பிரிவு செயல்படுவதைக் கூறலாம்.


பல்வேறு ராகங்கள் பல்வேறு நோய்களின் கடுமையைக் குறைப்பதுடன், அவை குணமாவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்படுள்ளது. மேலும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக, மாணவர்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி நன்கு படிக்க, பல்வேறு பிரச்னையான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் (STRESS) குறைய, கோபம் போன்ற குணங்கள் மறைய என இசை பல விதங்களில் துணைபுரிகின்றது.


நடைமுறை வாழ்வில் இசை மூலம் அமைதி பெறுதல்.
பல்வேறு பிரச்னைகளும் போராட்டங்களும் கொண்ட நெருக்கடியான கால கட்டத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு தன்னுடைய மன அழுத்ததைக் குறைக்க கோவில் போன்றவற்றிற்குச் சென்று ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபடவோ, வீட்டிலே அமர்ந்து தியானம் செய்யவோ முடிவதில்லை.


மனம் அடங்கினால் தானே தியானம் செய்ய முடியும்? மனதை அடக்க என்ன செய்வது?. அதற்குத் தான் இசை பயன்படுகின்றது.

இசை மூலம் ஒருவன் மன அழுத்ததைக் குறைப்பதுடன், அமைதியையும், மன நிம்மதியையும் பெறலாம். அதற்கான இசைக்கோர்வைகள் அடங்கியவை ஒலிநாடாக்களாகவும் (ஆடியோ கேசட்) குறுந்தகடுகளாகவும் (சி.டி) கடைகளில் கிடைக்கின்றன.


இல்லத்திலேயே தனியான, வெளிநபர் தொந்தரவில்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கும் நபர், தன்னுடைய டேப்ரெக்காடரிலோ, மியூசிக் சிஸ்டத்திலோ இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும். பின்னர் தரையிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொண்டு உடலைத் தளர்ச்சியாக வைத்துக் கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி இசையினைக் கேட்க முற்படவேண்டும்.


தன்னுடைய அனைத்துப் பிரச்னைகளையும் மறந்து, தன்னையும் இசையையும் தவிர வேறு எந்த நினைப்பும் இல்லாதவாறு மனதை ஒருமுகப்படுத்தி இசையில் ஆழும் பொழுது மனம் அளவற்ற நிம்மதி அடைவதுடன், புதியதொரு உற்சாகமும் அடைகின்றது. இது சிறப்புடன் செயலாற்ற ஊக்கப்படுத்துவதுடன், தன்னம்பிக்கையோடு எதையும் எதிர் கொள்ளவும் தூண்டுகின்றது.எனவே வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி மன நிம்மதியற்றுத் தவிப்போர் வீட்டிலிருந்தவாறே இச்சிகிச்சை முறையைப் பின்பற்றலாம். இது அதிக செலவில்லாததும், பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததுமான முறை.


மியூசிக் தெரபி குறித்த பல ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள் சென்னை கிரி டிரேடிங் ஏஜென்சியிலும், (MUSIC THERAPY- Dr.P.Bharathy) லாண்ட்மார்க்கிலும் கிடைக்கின்றன. அப்பல்லோ மருத்துவமனையும் (‘Music for Pregnancy and babies', ‘Music for Sleep and Relaxation') என்ற ஒலிநாடாக்களையும் அது போன்று பல குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளது. மற்றும் TIMES MUSIC வெளியிட்டுள்ள Shravanam போன்ற பல ஒலிநாடாக்களும், இளையராஜாவின் ‘How to name it?, Nothing but wind போன்ற ஒலிநாடாக்களும், திருமதி ரேவதி கிருஷ்ணா, வீணை எஸ். காயத்ரியின் வீணை இசைக் குறிப்புகளும் மனதை அமைதிப்படுத்த வல்லவையே!

மன நலம் காப்போம்! குண நலம் பெறுவோம்!

No comments: