Sunday, May 31, 2009

புகையிலை ஒழிப்பு தினம்

இன்று (31-05-2009) புகையிலை ஒழிப்பு தினம். அதையொட்டி திரைப்படங்களிலும், ஊடகங்களிலும் புகையிலையின் பயன்பாடு மற்றும் அவற்றால் விளையும் தீமைகள் குறித்த கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் க்ரீன்பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர்களான ராஜேஷ், சந்தானபாரதி, அழகு, விஜய்கிருஷ்ண்ராஜ் மற்றும் பின்னணிப் பாடகி சாருலதா மணி, தயாரிப்பாளர், பிலிம்சேம்பர் முன்னாள் தலைவர் மோகன்ராஜ், நடிகர் பிரவீண் காந்த், பாடலாசிரியர் விவேகா, முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களால் விளையும் தீமைகள் குறித்தும், ஊடகங்களில் அவை முன்னில்லைப் படுத்தப்படுவது குறித்தும் திரைப்பட மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்தவர்களுக்கிடையே கலந்துரையால் நடைபெற்றது. அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிடிட்யூட்டின் Tobacco Cessation Centre Principal விதுபாலா அவர்கள் நிகழ்ச்சியில் புற்றுநோயால் விளையும் தீமைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 'உலகம் முழுவதும் புற்றுநோயால் 65 லட்சம் பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு 8.5 லட்சம் பேர் புற்று நோயால், பாதிக்கப்பட்டுள்ளனர். புகை பிடிப்போர் தங்கள் உடல்நலத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், அருகில் இருப்பவரின் உடல் நலத்தையும் கெடுக்கின்றனர். இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அத்துடன் இப்புகைப் பழக்கம் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவது மட்டுமல்லாது கருவில் இருக்கும் குழந்தையின் உடல்மற்றும் மனநலத்தையும் பாதிக்கிறது என்று அவர் விரிவாக எடுத்துரைத்தார்.


நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் பேசியதுதான் ஹைலைட். தான் இளம்வயது முதலே புகைப்பிடிப்பதில்லை என்றும், அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர் தான் என்றும் அவர் குறிப்பிட்டார். நல்ல விஷயங்களை மட்டுமே சினிமாவில் சொல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் தனது கொள்கையாக வைத்திருந்தார். என்னைப் போன்றவர்கள் அந்த விஷயத்தில் அவரையே முன் மாதிரியாகக் கொண்டோம் என்றார். தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் மோகன்ராஜ், புகையிலைப் பொருட்களின் தயாரிப்பை நிறுத்த முடியாது என்னும் பட்சத்தில் அவற்றைப் பயன்படுத்தாத மனிதர்களுக்கு அரசு, நிர்வாக ரீதியாக பல விஷயங்களில் முன்னுரிமை தரலாம். சலுகைகள் காட்டலாம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பாடகர் பிரசன்னா, சிகரெட் போன்ற பொருட்கள் எளிதில் கிடைப்பதால் தான் இந்தப் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவை கிடைப்பது அரிது என்ற எண்ணம் வந்தால் இது குறைவதற்கு வாய்ப்புண்டு என்று தெரிவித்தார். மொத்தத்தில் கேன்சர் போன்ற நோய்களை ஒழிப்பதற்கு ஊடகங்களின் பங்கு மிக அவசியம் என்பதை எடுத்துரைப்பதாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.
புகையிலையை ஒழிப்போம். புன்னகையை வளர்ப்போம்.

1 comment:

Anonymous said...

எல்லோரும் நல்லதை நல்லாத்தான் சொல்லியிருக்காங்க, ஆனா யார் கேட்கப் போறாங்க, சொல்லுங்க..

அன்புடன்
அசோகன்