”சாரி... இனி பிரயோஜனமில்லே. நீங்க வீட்டுக்குக் கூட்டிப் போறது தான்
பெட்டர்!’’ என்றார் டாக்டர்.
ராமச்சந்திரனுக்கு கண்கள் கலங்கியது. ‘சரிங்க டாக்டர். வேன் மட்டும் கொஞ்சம் அரேஞ்ச்
பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்’ என்றான்
குரல் கம்ம.
‘ஓ.கே. ஓ.கே.’ டாக்டர்
நகர்ந்தார்.
சுப்ரமண்ய கனபாடிகளுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி. இரண்டு நாளாக ஐ.சி.யூ.வில்
வைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. டாக்டர் கையை விரித்து விட்டார்.
கனபாடிகளுக்கு மொத்தம் ஐந்து பெண்கள். மூன்று பிள்ளைகள். மாயவரம்
பக்கத்தில் குக்கிராமம். கோயிலில் வேலை பார்த்து, வருமானம் போதாமல் சென்னைக்கு வந்து, வைதீகம் செய்து இன்று 84 வயது.
மனைவி சுமங்கலியாக எப்பவோ போய்ச் சேர்ந்து விட்டாள். பையன்கள் வளர்ந்து
ஆளாகி எல்லோரும் இன்று நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள். பெண்களில் இருவர்
வெளிநாட்டில். மூன்று பேர் இங்கே சென்னையிலும், கோவையிலும்.
அடி வயிற்றில் இருந்து சத்தமாக வெளி வந்து கொண்டிருந்த மூச்சுக்
காற்று, இப்பொழுது நெஞ்சுக்கு
வந்து விட்டிருந்தது. உறவினர்கள் எல்லோரும் அழுகையுடன் சுற்றி அமர்ந்திருந்தனர்.
‘‘ம்! நல்ல கல்யாணச் சாவு’ யாரும்
அழ வேண்டாம். ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனை பண்ணுங்கோ’’ - மூத்த மாப்பிள்ளை சொன்னார்.
‘‘இன்னும் ஒரு மணி நேரம் தான் தாங்கும்’’ - ஒருத்தர் ஆரூடம் கூறினார்.
‘‘இப்படி இழுத்துண்டு இருக்கே, ஏதேனும் ஆசை இருக்கோ என்னமோ, ஒருவேளை அதை வெளிய சொல்ல முடியாமத் தவிக்கிறாரோ...’’ சந்தேகம் எழுப்பினார் ஒரு மாமி.
‘‘இருக்கும்... இருக்கும். யாராவது செத்த என்னென்னு கேளுங்களேன்’’ மூத்த மகள் பானுமதி குரல் கொடுத்தாள்.
‘‘அப்பா... என்னப்பா இது... இப்படிக் கஷ்டப்படுறியே!’’ ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறியா... நாங்க
பேசறதெல்லாம் கேட்கறதா... கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கறியே.. என்னப்பா வேணும்
சொல்லுப்பா...’’ ராமச்சந்திரன்
கண்ணீருடன் கேட்டான்.
அவன் கதறல் காதில் விழுந்தது போல் சுப்ரமண்ய கனபாடிகள் லேசாகக் கண்களைச்
சுழற்றினார். தலையைத் திருப்பாமலே அங்கும் இங்கும் பார்த்தார். சுற்று முற்றும்
பார்த்தவரின் பார்வை சமையல் கட்டில் நிலைகுத்தியது.
கோமதி மாமி அழுது கொண்டிருந்தாள். தான் அழுவது யாருக்கும் தெரிந்து விடக்
கூடாது, என்பது போல கதவு ஓரமாக
நின்று கொண்டு அவள் அழுது கொண்டிருந்தாள்.
அந்த வீட்டின் சமையல் வேலை முதல் அனைத்து வேலைகளையும் கவனிப்பது கோமதி
மாமி தான். அதுவும் சுப்ரமண்ய கனபாடிகளின் மனைவி பார்வதி போய்ச் சேர்ந்த பிறகு,
குழந்தைகளை வளர்ப்பது முதல் எல்லா
வேலைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தவள் கோமதி தான். மாமிக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா,
குழந்தைகள் இருக்கிறார்களா என்று
ஒருத்தருக்கும் எதுவும் தெரியாது. சமையல் வேலை கேட்டு வந்தாள். தெரிந்தவர்,
உறவினர் எல்லோரும் வற்புறுத்தவே கனபாடிகளும்
சரி என்று சம்மதித்தார்.
அன்று முதல் அந்த வீட்டில் ஒரு மனுஷியாக மாறி விட்டாள் கோமதி மாமி.
கனபாடிகளின் பிள்ளைகள் அனைவரும் அவளை பாசத்தோடு ‘‘அத்தை. அத்தை’’ என்றுதான் அழைப்பார்கள். அதற்கேற்றவாறு தான் அவளும் நடந்து கொண்டாள். தன்
குழந்தைகளைப் போலவே எண்ணி அவர்களை வளர்த்தாள். ஆளாக்கினாள்.
மாமி அழுது கொண்டிருக்க... இரண்டாவது பையன் சீனிவாசன், ‘அத்தை இப்படி வாங்கோ... அப்பா உங்களாண்ட
என்னவோ சொல்லணும்னு நினைக்கறார் போல இருக்கு வாங்கோ’ மாமியின் கையைப் பிடித்து கட்டிலருகே அழைத்து வந்தான்.
‘‘அப்பா எங்களையெல்லாம் அடையாளம் தெரியறதா. நாங்க சொல்றதெல்லாம் கேட்கறதா. ஏதாவது
சொல்லணுமாப்பா. ப்ளீஸ் சொல்லுப்பா...’’ கண்ணீருடன் கதறினான் ராமச்சந்திரன்.
புரிந்தது போல் கனபாடிகள் தலை லேசாக அசைந்தது. மறுபடியும் ஒரு முறை கீழ்
மேலாய் பார்வையைச் சுழலவிட்டார். பார்வை மீண்டும் கோமதி மாமி மேல் வந்து
நிலைத்தது.
‘‘அப்பா... என்னப்பா... அத்தை கிட்ட ஏதாவது சொல்லணுமா... ப்ளீஸ் சொல்லுப்பா...
கொஞ்சம் ட்ரை பண்ணுப்பா... ப்ளீஸ்...’’ சீனிவாசன் விசும்பினான்.
சுப்ரமண்ய கனபாடிகளின் தலை இலேசாக அசைந்தது. கை, கால்கள் இலேசாக விறைத்தன. மெல்ல சிரமப்பட்டு வாயைத்
திறந்தார். ‘‘அத்... அத்...’’
என்றார். அதை முழுமையாகச் சொல்ல விடாமல் மூச்சுத்
திணறியது. உடம்பு தூக்கிப் போட்டது. கண்களில் கண்ணீர் வழிந்தது.
‘‘சொல்லுப்பா... சொல்லுப்பா... ப்ளீஸ்’’ என்றான் மூர்த்தி.
‘‘அத்... அத்... அத்தை இல்லே... அம்மா’’ சொன்ன சுப்ரமண்ய கனபாடிகளின் பார்வை நிலைத்தது. மூச்சு
ஒடுங்கியது.
அதுவரை ஒதுங்கி நின்றிருந்த கோமதி மாமி கனபாடிகளின் மார்பில் விழுந்து அழ
ஆரம்பித்தாள்.
(நன்றி : பத்திரிகையில் வெளியாகிப் பரிசு பெற்ற இச்சிறுகதையை வெளியிட அனுமதி தந்த எழுத்தாளர் ஆனந்தி மணியன் அவர்களுக்கு...)
1 comment:
கதை மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவும் அந்த இறுதி வரிகள் நெஞ்சை நெகிழ வைத்தது. எழுதிய ஆனந்தி மணியனுக்கும், வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள், நன்றிகள். தொடர்ந்து இது போன்றவற்றை வெளியிடுங்கள்.
கௌசல்யா
Post a Comment