’இந்த .போட்டைவைப் பாருடா, பொண்ணு அம்சமா இருக்கால்ல’ என்றாள் கல்யாணி.
‘அட, நீ வேறம்மா உனக்கு வேற வேலையே இல்லயா?
எப்பப் பாத்தாலும் பொண்ணைப் பாரு, போட்டோவைப் பாருன்னு இம்சை பண்ணிக்கிட்டு, லீவு
நாள்ல கூட மனுஷனை கொஞ்சம் நேரம் நிம்மதியா பேப்பர் பார்க்க விடறியா நீ’ இரைந்தான்
சாரங்கன்.
’ஆமாடா, நான் இம்சை பண்ணிக்கிட்டுதான் இருப்பேன். எனக்கு
ஒரு நல்ல மருமக, உனக்கு ஒரு நல்ல பொண்டாட்டி அமையுற வரைக்கும் இப்படி உன்ன
தொந்தரவு பண்ணிக்கிட்டு தான் இருப்பேன். இல்லன்னா ஒண்ணு பண்ணு. உங்க ஆபிஸ்ல உள்ள
பொண்ணுங்கள்லயே நல்ல ஒரு பொண்ணா ஒண்ண பார்த்துச் சொல்லு, ஆக வேண்டிய மத்த
விஷயங்களை நான் பார்த்துக்கறேன், என்ன சொல்ற... எனக்கும் அலைச்சல் மிச்சம்.
உனக்கும் தொந்தரவு இருக்காது’ கண்
சிமிட்டினாள் கல்யாணி.
’அடாடா, உன் இம்சை தாங்கலியே’ சொல்லி விட்டு பேப்பரைத் தூக்கிக் கொண்டு பால்கனிக்கு
ஓடினான் சாரங்கன்.
சாரங்கனுக்கு 28 வயது. பேங்கில் ஆபீசர் வேலை.
நல்ல பெண்ணாய்ப் பார்த்து அவனுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் என்பதுதான்
கல்யாணியின் கவலை. அதற்காக அவள் தனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என
எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தாள். வரன் பார்க்கும் சங்கங்களில் எல்லாம் பதிவு
பண்ணி வைத்திருந்தாள்.
சாரங்கன் எம்.பி.ஏ. முடித்த கையோடு பேங்கில்
ஆபிசர் வேலை கிடைத்து விட்டது. இவ்வளவு நாளாக ஊர் ஊராகச் சுற்றிக்
கொண்டிருந்தவனுக்கு தற்போது ப்ரோமஷனும் கொடுத்து சென்னை ரீஜனல் ஆபிஸிலேயே போஸ்டிங்கும்
கொடுத்து விட்டார்கள். ஆபிஸிற்கு நேரத்திற்குப் போய் விட்டு நேரத்திற்கு
வீட்டுக்கு வந்து விடுவான் சாரங்கன். அநாவசியமாக அங்கும் இங்கும் சுற்றும் பழக்கம்
அவனுக்குக் கிடையாது. அதிக நண்பர்களும் இல்லை. தாய் மீது மிகுந்த பாசம்.
சிறுவயதிலேயே தந்தை இறந்து விட கல்யாணிதான் அவனுக்கு எந்த ஒரு குறையுமில்லாமல்,
ஏக்கம் எதுவும் வந்துவிடாமல் அன்போடு வளர்த்தாள். அவள் பள்ளியில் தலைமை ஆசிரியையாக
இருந்தது ஒருவிதத்தில் சௌகர்யமாகப் போய் விட்டது. தன் பள்ளியிலேயே அவனைச்
சேர்த்துப் படிக்க வைத்ததுடன், தன் கையோடு பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு போய்,
கையோடு வீட்டிற்கும் கூட்டிக் கொண்டு வந்து விடுவாள். அதனால் சாரங்கனுக்கு அம்மா
என்றால் அலாதி பிரியம். அளவற்ற பாசம். அவள் மனம் நோக எதுவும், பேச மாட்டான், செய்ய
மாட்டான்.
அன்றைக்கு ஆபிஸ் லீவு நாள் என்பதால் சாவகாசமாக
எழுந்து கொண்டு பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான் சாரங்கன். கல்யாணியும் ரிடயர்
ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது. அதிக வேலைகள் என்று எதுவும் இல்லை. அதனால் மெதுவாக
எழுந்து, குளித்து, டிபன் செய்து விட்டு அவனை சாப்பிட அழைத்தாள்.
சாரங்கனும் பால்கனியிலிருந்து இறங்கி வந்தான்.
’ஐ, பொங்கலா, எனக்கு ரொம்பப் பிடிக்குமே! தொட்டுக்க
என்னம்மா பண்ணியிருக்க? கொத்சு இருந்தா நல்லா இருக்குமே!’ என்றான்
‘ம், என் பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு
எனக்குத் தெரியாதா என்ன, அதைத் தான் பண்ணியிருக்கேன். அரைகுறையாக் கொரிக்காம நல்லா
சாப்பிடு ஆமா’
’சரி, சரி, எனக்கு சாப்பாடு போடறேன்னு பேர் பண்ணாம
நீயும் உட்கார்ந்து சாப்பிடு ஆமா’ என்ற
சாரங்கன், அம்மவையும் இழுத்து அருகில் உட்கார வைத்தான்.
கல்யாணி, சாரங்கனை கனிவோடு பார்த்தாள். அவள்
மனம் பழைய நினைவுகளை அசை போட்டது. திடீரென்று அவள் கணவர் நாராயணன் மறைந்து விட,
உலகமே அஸ்தமித்தது மாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. அப்புறம் ஒரே மகனான சாரங்கன்தான்
அவள் உலகமாகிப் போனான். அவனுக்காகவே வாழ்ந்தாள். அவனை ஒரு பெரிய ஆபிசராக்கிப்
பார்க்க வேண்டும் என்பது அவள் லட்சியக் கனவு. இதோ, இப்போது அதுவும் நிறைவேறி
விட்டது. அடுத்து படித்த, பண்பான, நல்ல ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி
வைத்து விட்டால் போதும். தன் கடமை
முடிந்தது என்று எண்ணிக் கொண்டாள். அவளுக்கு அவன் தான் உலகம். அவன் நிம்மதியாக,
சந்தோஷமாக வாழ்ந்தாள் போதும், தனக்கு ஏதும் தேவையில்லை என்பதுதான் கடவுளிடம் அவளது
தினசரி வேண்டுதலாக இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் மாடிக்கு போனவனை
இழுத்து உட்கார வைத்தாள் கல்யாணி. ‘ இதோ பார் சாரங்கன், எனக்கும் வயசாகிக் கிட்டே
போகுது. காலா காலத்துல உன்னை ஒரு பொண்ணு கையில பிடிச்சுக் கொடுக்கணும்னு நான்
நினைக்குறது தப்பா? நீ அதுக்கு பிடி கொடுக்கவே மாட்டேங்கறியே, ஏன்?’ என்றாள் குரல் தழுதழுக்க.
அம்மா குரல் தழுதழுத்ததும் சாரங்கனால் தாங்கிக்
கொள்ளவே முடியவில்லை. ‘அய்யோ அம்மா, நான் என்ன கல்யாணமே வேண்டாம்னா சொன்னேன்.
கொஞ்ச நாள் போகட்டும்னுதான சொன்னேன். அதுவும் இதுக்கு முன்னாடி ஊர், ஊரா
சுத்திக்கிட்டிருந்தேன். இப்போதான் ஹெட்-ஆபிஸ்க்கே வந்தாச்சே. அதுனால இனிமே
ஒண்ணும் பிரச்சனை இல்ல, உனக்கு பிடிச்ச நல்ல பொண்ணா பாரு, நீ சொல்ற பொண்ணு
கழுத்துல நான் தாலியக் கட்டுறேன்’ என்றான்.
’சரிதான், பொண்ணு எனக்குப் பிடிச்சிருந்தா மட்டும்
போதுமா, உனக்குப் பிடிக்க வேண்டாமா?’ என்றாள் கல்யாணி.
‘அம்மா உனக்குப் பிடிச்ச பொண்ண எனக்கு மட்டும்
எப்படிப் பிடிக்காமப் போகும் சொல்லு’ என்று
சாரங்கன் சொல்லவும் கல்யாணி நெகிழ்ந்து விட்டாள். அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்
பார்த்தது.
’ஆனா, அம்மா ஒரு கண்டிஷன்’ என்றான் சாரங்கன்.
‘என்ன கண்டிஷன்?’
‘ சும்மா பொண்ணு வீட்டுக்குப் போறது, பஜ்ஜி,
சொஜ்ஜி சாப்பிடறது, பொண்ண பாடச் சொல்றது... அப்புறம் போய்ட்டு தகவல் சொல்றோம்னு
சொல்லிட்டு, பின்னாடி பொண்ணப்
பிடிக்கலைன்னு சொல்றது - இந்த பிஸினஸெல்லாம் வேண்டாம். நீ நல்ல பொண்ணாப் பாரு,
அக்கம் பக்கத்துல நல்லா விசாரிச்சுக்கோ. நேரா பொண்ணு பார்க்கப் போறோம். அன்னிக்கே
நிச்சயதார்த்தம், அப்புறம் கல்யாணம். அவ்ளோ தான். தேவையில்லாம நிறைய பொண்ணுங்களப்
போய் பார்த்துட்டு, அப்புறம் அது சரியில்லை, இது சரியில்லைன்னு குறை சொல்லிட்டு...
அவங்களுக்கும் மனக் கஷ்டம். எனக்கும் மனசுக்கும் சங்கடமா இருக்கும். அதுனால இந்த
பஜ்ஜி, சொஜ்ஜி மேட்டர் எல்லாம் இல்லாம டைரக்டா பொண்ணப் பார்க்கறோம். கல்யாணத்தை
முடிக்கறோம். சரியா?.
‘அது கொஞ்சம் கஷ்டம்டா சாரங்கா.. நீயும்
கொஞ்சம் பொண்ணோட பேசி என்ன ஏதுன்னு கேட்டுக் கிட்டாதானே பின்னாடி சௌகரியமா
இருக்கும்...’
இழுத்தாள் கல்யாணி.
‘தேவையில்லம்மா... எனக்கு வரப்போறவ என்னை நல்லா
புரிஞ்சிக்கிட்டு, எனக்கேத்த மாதிரி நடந்துப்பான்னு நிச்சயமா நான் நம்பறேன். அப்படி
இல்லன்னாலும் அதை சரி பண்ண என்னால முடியும்னும் நினைக்கறேன். ஸோ
அதைப்பத்தியெல்லாம் நீ கவலைப்படாம ஆக வேண்டிய வேலைகளைப் பார்’ என்றான் சாரங்கன்.
மகன் இந்த அளவிற்காவது இறங்கி வந்தானே என்று
கல்யாணிக்கு ஒரே சந்தோஷம். தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினாள்.
***********
ஒரு சுபயோக சுபதினத்தில் சாரங்கனுக்கும்
சங்கீதாவுக்கும் திருமணம் முடிந்தது. சங்கீதா எம்.ஏ வரை படித்திருந்தாள்.
வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தாள். சாரங்கன்,
கல்யாணி என இருவரிடமும் மிகவும் பணிவாகத் தான் நடந்து கொண்டாள். ஆனால் வீட்டுக்
காரியங்கள் எதையும் சரிவரச் செய்யத் தெரியாமல் இருந்தாள். மிகவும் செல்லமாக
வளர்ந்த பெண் என்பதால் அப்படி இருக்கிறாள், எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும்
என்று நினைத்தாள் கல்யாணி. சாரங்கனும் அப்படியே தான் நினைத்தான்.
மாதங்கள் கடந்தன. காலையில் எழுந்து வீடு, வாசல்
தெளிப்பது முதல் சமைப்பது உட்பட எல்லாவற்றையும் கல்யாணியே செய்து வந்தாள். சங்கீதா
ஏதாவது செய்ய வருவாள், ஆனால் கல்யாணி விட மாட்டாள். ’நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. பாவம் உனக்கேன்
இதெல்லாம், நான் தான் இருக்கேனே வெட்டியா!’ என்று
சொல்லி அனுப்பி விடுவாள்.
சாரங்கனுக்குக் காபி கொடுப்பது, டிபன,
சாப்பாடு, பரிமாறுவது என எல்லாவற்றையும் கல்யாணியே பார்த்துப் பார்த்து செய்வாள்.
சங்கீதா ஏதாவது கேட்டால், ’நான் இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்கப் போறேன்,
ஏதோ இருக்கற வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் என் கையால விதவிதமாச் செஞ்சு
போடணும்னு ஆசைப்படறேன். அது தப்பா, தயவு செய்து அதுக்கு தடை சொல்லாதீங்க’ என்பாள்.
சாரங்கன் சமயங்களில் சங்கீதாவிடம் கேட்பான், நீ
ஏன் இந்த வீட்டு வேலையெல்லாம் செய்யக்
கூடாது, பொழுது போகாமல் வீட்டில் இருக்கும் போது செய்யலாமே! என்பான்.
’என்னைச் செய்ய விட்டால் தானே உங்க அம்மா, எல்லாத்தையும்
அவங்களே செஞ்சாத்தான் அவங்களுக்கு திருப்தி. என்னை என்ன செய்யச் சொல்றீங்க’ என்று அலுத்துக் கொள்வாள் சங்கீதா.
இப்படியே நாட்கள் கடந்தன. ஒருநாள் காலை...
பேப்பர் படித்துக் கொண்டிருந்த சாரங்கனிடம் காபியைக் கொணர்ந்து நீட்டினாள் கல்யாணி.
வாங்கி ஒரு சிப் குடித்தவன், ’தூ, என்ன காப்பி இது நல்லாவே இல்ல, ஒரேயடியா கசக்குது.
பொடி வாசனை வேற அடிக்குது. வர வர உனக்குக் காபி போடவே தெரியலைம்மா. வயசாயிருச்சி இல்ல.
எல்லாம் மறந்து போச்சு போல.’ என்றான்.
’இல்லையேடா, எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டுத்
தானே கொண்டு வந்தேன். உனக்கு மட்டும் ஏன் கசக்குது?’
’அப்போ, நான் பொய் சொல்றேன்கிறியா?’ ஒரேயடியாகக் கத்தினான்
சாரங்கன்.
’போதும், போதும் ஒரு சின்ன காபிக்கு எதுக்கு இத்தனை
கோபம். வாக்குவாதம். வேற நல்லதா போட்டுக்கிட்டு வந்தாப் போச்சு’ சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள் கல்யாணி.
மறுநாள் காலை. டிபன் சாப்பிட உட்கார்ந்தான் சாரங்கன்.
கல்யாணி அவனுக்கு மிகவும் பிடித்த பொங்கல் – கொத்சுவைப் பரிமாறினாள். ’தூ... தூ... தூ.... அய்யோ, ஒரே உப்பு... அம்மா, எத்தனை
தடவை சொல்றது காபி, சமையல்னு நீ பண்றது எதுவுமே நல்லால்லேன்னு. சொன்னா புரிஞ்சிக்க
மாட்டியா. சங்கீதா, சங்கீதா’ இரைந்தான்.
துளசிக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த சங்கீதா
சத்தம் கேட்டு ஓடி வந்தாள். கல்யாணி கண் கலங்கி நின்று கொண்டிருப்பதும், சாரங்கன்
சாப்பிடாமல் கை கழுவிக் கொண்டிருப்பதையும் பார்த்து அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘என்னங்க, எதுக்குக் கூப்பிட்டீங்க... ஏன்
சாப்பிடாம எழுந்துடீங்க...’ என்றாள்
’ம்... என்னத்த சொல்றது காபி சரியில்ல, டிபன்
சரியில்ல... வர வர சாப்பாடும் சரியில்ல... ஏண்டா சாப்பிடறோம்னு இருக்கு... ரொம்ப
கஷ்டமா இருக்கு. இனிமே ஒண்ணு பண்ணு சங்கீதா. பேசாம காலையில காபிலேர்ந்து டிபன,
சாப்பாடு, நைட் டின்னர்னு எல்லாத்தையும் நீயே பண்ணு. அம்மாவுக்கு வயசாயிருச்சி
இல்லையா, அதான் நிதானம் தெரியல... இனிமே எல்லா காரியத்தையும் நீயே பார். நான்
கிளம்புறேன்’ சொல்லி விட்டு வேகமாக அலுவலகத்துக்குச் சென்று
விட்டான் சாரங்கன்.
கல்யாணிக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு நாள்
தன் சமையலை ருசித்துச் சாப்பிட்டவன், காபி ஏ-ஒன் என்று புகழாரம் சூட்டியவன், அம்மா
மாதிரி பொங்கல்-கொத்சு பண்ண யாராலும் முடியாது என்று உறவு வீடுகளில் சவால்
விட்டவன், இப்போது தன் சமையலையே வேண்டாம் என்கிறான். கைப்பக்குவம் சரியில்லை...
நிதானம் இல்லை என்கிறான், ஏன்? – நினைக்கும் போதே அழுகையாக வந்தது கல்யாணிக்கு.
கல்யாணம் ஆனால் பையன்கள் மாறிப் போய்
விடுவார்கள், பொண்டாட்டி தாசர்கள் ஆகிவிடுவார்கள் என்று அவள்
கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் சாரங்கனும் அப்படி ஆகி விடுவான் என்று அவள்
கனவிலும் நினைக்கவில்லை. மனதுக்குள் அப்படியே நொறுங்கிப் போனாள்.
தினம்தோறும் காலையில் எழுந்து கொண்டதும் வேலை
செய்ய கை, கால்கள் பரபரக்கும். ஆனால் காலை ஐந்து மணிக்கே எழுந்து எல்லாவற்றையும்
செய்ய ஆரம்பித்திருப்பாள் சங்கீதா. முன்பெல்லாம் ஓயாது ஏதாவது வேலை கல்யாணிக்கு
இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது எல்லா வேலையும் சங்கீதாவே செய்வதால்,
இவளுக்கு வேலையே இல்லை. வாழ்க்கையே போரடிக்க ஆரம்பித்து விட்டது. மேலும்
சங்கீதாவின் சுமாரான சமையலைக் கூட சாரங்கன் வாயாறப் புகழ்வதும், ’இதைச் செய்த கைக்கு வளையல் வாங்கிப் போடணும், மோதிரம்
வாங்கிப் போடணும்’ என்று தன் காதுபடவே பெருமையாகப் பேசுவதும், அவன்
தன்னை உதாசீனப்படுத்துகிறானோ, பாரமாக நினைக்கிறானோ என்ற எண்ணத்தை அவளுக்குத்
தந்தது. இது இப்படியே தொடர்ந்தால் அவர்கள் இன்ப வாழ்விற்குக் குறுக்காகத் தான்
இல்லாமல் எங்காவது சென்று விட வேண்டும் என்றும் அவள் முடிவு செய்தாள்.
அன்று இரவு... நடுநிசி கடந்திருக்கும்.
கல்யாணிக்குத் தூக்கம் வரவில்லை. ’எப்படி
இருந்த சாரங்கன் இப்படி மாறிப் போய் விட்டான்’ என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அப்போது அவள் அறை நோக்கி
யாரோ வருவது போல் தோன்றவே, அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு தூங்குவது போல்
பாவனை செய்தாள்.
அறை வாசலில் வந்து நின்றது..... சாரங்கன்....
’அம்மா.... அம்மா.... தூங்கிட்டியாம்மா. தூங்கும்மா...
நல்லா தூங்கு. நீ. நல்லா தூங்கணும். நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு தான் நான் இப்படிப்
பண்றேன். இப்படி நடந்துக்கறேன். ஆமாம்மா, உன்னை கடுமையா பேசினதுக்காக என்னை
மன்னிச்சிடு. உன் சாப்பாடு சரியில்லை சொன்னதுக்காக, உன்னை உதாசீனம் பண்ணதுக்காக
என்னை மன்னிச்சிரும்மா... நான் அதெல்லாம் வேணும்னு செய்யலம்மா... உன் மேல உள்ள
பாசத்துல தான் செஞ்சேன். ஆமாம்மா.... இதுநா வரைக்கும் என்னை கஷ்டப்பட்டு படிக்க
வச்சே, வளர்த்தே.. எனக்காக ஓடாத் தேஞ்ச.. உன்னையே உருக்கிக்கிட்டே. ஆனா, கல்யாணம்
ஆனப்புறமும் நீயே கொஞ்சம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எல்லா வேலையும் செய்யறது
என் மனசுக்குப் பொறுக்கலம்மா. சங்கீதா கிட்ட எத்தனையோ தடவ சொன்னேன். அம்மாவை வேலை
செய்ய விடாம, நீ செய்னு. அவளும் நீங்க அதுக்கு ஒப்புக்கல்லேன்னு சொன்னா. அது
மட்டுமில்ல. இதுதான் சாக்குன்னு அவ பாட்டுக்கு எந்த வேலையும் செய்யாம டி.வி.
பார்த்துட்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சிட்டா. நீயோ 60க்கு மேல வயசாகியும்
ஓய்வு ஒழிச்சல் இல்லாம உழைச்சிக்கிட்டு இருந்தே...
’நீ அந்த விஷயத்துல பிடிவாதக்காரி. அன்பா அக்கறையா
ஓய்வெடுத்துகோன்னு சொன்னா கேட்கமாட்டேங்கிறது எனக்கு நல்லாத் தெரியும். சோம்பேறியா
இருக்கற சங்கீதாவையும் சுறுசுறுப்பானவளா ஆக்கணும். உனக்கும் நல்ல ஓய்வு கொடுத்து
ரெஸ்ட் எடுக்க வைக்கணும். அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சப்போதான் இந்த ஐடியா
வந்தது. உன் கிட்ட கடுமையா பேசற மாதிரி நடிச்சி உன்னை ரெஸ்ட்ல இப்போ உட்கார
வச்சிருக்கேன். சங்கீதாவையும் புகழற மாதிரி பேசி அவளையும் சுறுசுறுப்பானவளா
மாத்தியிருக்கேன். ஆமாம்மா, நான் போட்டது, போடறது எல்லாம் வேஷம் தான். ஆனா, அதைத்
தவிர எனக்கு வேற வழி தெரியலைம்மா. என்னை மன்னிச்சிடும்மா.. அம்மா, நீ நல்லா
இருக்கணும். எப்பவும் எங்க கூட துணையா இருக்கணும்மா... அதுக்காகத் தான்மா நான்
அப்படி உங்கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன். நான் என்னிக்கும் உன்னோட
அன்பான பிள்ளைதான்மா. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்மா. ஒருத்தர்ட்ட ஒருத்தர்
மனம் விட்டு பேசினா எல்லாம் சரியாகிடும். அதுவரைக்கும் இந்த வேஷம் தொடர்ந்துட்டு
தான்மா இருக்கும். அதுக்காக என்ன மன்னிச்சிடு.. சொல்லி விட்டு அந்த இடம் விட்டு அகன்றான்
சாரங்கன், கண்களில் கண்ணீருடன்.
கல்யாணியின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஆறாகப்
பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீர்.
(கடந்த ஆண்டு லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளிச் சிறப்பிதழில் வெளியான சிறுகதை - எழுதியவர் - பா.சு.ரமணன்)
No comments:
Post a Comment