Saturday, September 25, 2010

இரண்டு கடிதங்கள்


 22-04-1982
                                                                                                 விழுப்புரம்


அன்புள்ள மாலதிக்கு,

கல்யாணி எழுதிக் கொள்வது. நான் இங்கு நலம், நீ அங்கு உன் கணவர் குழந்தைகளுடன் நலமாகவே இருப்பாய் என எண்ணுகிறேன். என்னடா, இவ்வளவு அருகில் இருந்து கொண்டு, கடிதம் ஏன் எழுதுகிறாள் என உனக்குத் தோன்றலாம். காரணம் இருக்கின்றது. என் நெருங்கிய தோழியான உன்னிடம் சொல்லாமல் நான் யாரிடம் சொல்லாப் போகிறேன் எல்லாவற்றையும்!. சில நாட்களாகவே ஏன் சில மாதங்களாகவே எனக்கு இந்தப் பிரச்னை இருக்கின்றது. உன்னிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றால் நீ மாதர் சங்கம் அது இது என்று மிகவும் பிஸி. போனில் இந்த விஷயங்களை எல்லாம் பேசவும் முடியாது. அது தான் இந்தக் கடிதத்தை நான் உனக்கு எழுதக் காரணம். நீ சைக்காலஜி படித்தவள், அதுவும் சமூக சேவை நிறுவனத்தில் பெரிய பதவியில் இருப்பவள், எனவே நீ தான் என பிரச்னைக்குச் சரியான தீர்வைத் தர முடியும் என எண்ணியே இக்கடிதத்தை எழுதுகிறேன். நான் போனில் கூறியது போல இந்தக் கடித்ததைப் படித்தவுடனுடனே நீ கிழித்து எறிந்து விடவும்.

உனக்கு ஞாபகம் இருக்கும், நாம் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். உனக்கோ தமிழ் இலக்கியம், மு.வ என்றால் உயிர். எனக்கு அகதா கிறிஸ்டி, ஷிட்னி ஷெல்டன் என்றால் இரவுச் சாப்பாடு கூட வேண்டாம். அப்படிப் பித்துப் பிடித்துத் திரிந்த நான் இப்பொழுது படித்துக் கொண்டிருப்பது என்ன தெரியுமா? சித்தர் பாடல்களும், திருவடிப் புகழ்ச்சியும்தான். என்ன ஆச்சர்யமாய் இருக்கின்றதா? நான் எப்படி இப்படி மாறினேன் என்று நினக்கின்றாயா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் சூழ்நிலை என்னை இப்படியாக்கி விட்டது.

என் கணவரைப் பற்றி உனக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்று தெரியவில்லை. அவர் நல்லவர் தான் அதில் எந்த சந்தேகமுமில்லை. நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். நான் நேசிப்பதை விட அவர் என்னை அதிகம் நேசிக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். மிகவும் சிறு வயதிலேயே எங்களுக்குத் திருமணம்  நடந்து விட்டதால் ரொம்ப அன்னியோன்னியம். இந்த இள வயதிலேயே ஒரு வங்கியில், மிகப் பெரிய உயர் பதவி வகிக்குமளவிற்கு உயர்ந்து இருப்பதே அவர் திறமைக்குக் காரணம். அவர் ஒழுக்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால் சமீப காலமாக, அதுவும் சந்தியா பெரிய பெண் ஆனதிலிருந்து அவர் நடத்தையில் பெரிய மாற்றம். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது என்றாலும் என்னை, என் மனதை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்னும் பொழுது எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கின்றது.

என் பிரச்னையை உனக்கு எப்படி விளக்கிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பூஜை, பஜனை என முன்னை விட மிக அதிகமாக ஈடுபடுகிறார். நான் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று ஒருநாள் கேட்டதற்கு, அவர் சித்தர் பாடல்களையும், திருவாசகத்தையும், திருவடிப் புகழ்ச்சியையும் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து, " தினமும் படி மிகவும் நல்லது” என்றார். நான் சித்தர் பாடல்களையோ, திருவருட்பாவையோ, திருவாசகத்தையோ குறை கூறவில்லை. அவற்றை நான் படித்தும் தான் வருகிறேன். எனக்கு அமைதியும் அவை மூலம் தான் ஏற்படுகின்றது. ஆனால் அது தற்காலிக அமைதிதான். பொங்கி வரும் கடலை எதனைக் கொண்டு அடக்க முடியும்?. ஒன்றை அமுக்க அமுக்க அது முன்னிலும் வீரியமாய் எழுகின்றதே! நான் என்ன செய்ய? எனக்கு பயமாக இருக்கிறது மாலா, இவை எல்லாவற்றையும் விரிவாகப்பேசினால் எங்கே நீ தவறாக நினைத்து விடுவாயோ என்றும் அஞ்சுகிறேன்.

நீ கூறுவாய்! "மனம் விட்டுப் பேசு! எல்லாப் பிரச்னையும் சரியாகி விடும்", என்று! மனம் விட்டும் பேசியாகிவிட்டது. வந்த பதில் என்ன தெரியுமா? "சாரி! கல்யாணி! உனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை மறவாதே!" என்பது தான்.  ஆனால் எனக்கு முப்பத்தெட்டு வயது தான் ஆகிறது! அது என்ன கிழ வயதா?. இல்லை நாற்பது வயதானால் எல்லாரும் சந்நியாசம் வாங்கிக் கொண்டுவிட வேண்டுமா என்ன? சில சந்நியாசிகளே வாழ்க்கையை எப்படி அனுபவித்திருக்கிறார்கள், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்குத் தெரியுமே! அதை விடு! அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என் பிரச்னைக்கு என்ன தான் தீர்வு என்று நீயே சொல்.

எப்படி அந்தக் காலத்தில், இளவயதிலேயே கணவனை இழந்து, இளமை, ஆசை எல்லாவற்றையும் துறந்து, கைம்பெண்ணாய் வாழ்ந்தார்கள் என நினைக்கும்பொழுது ஆச்சர்யமாய் இருக்கின்றது. அத்தை ஏன் எல்லோரையும் கடைசி வரை திட்டிக் கொண்டிருந்தாள், பாட்டி ஏன் என்ன கேள்வி கேட்டாலும் எரிந்து எரிந்து விழுந்தாள் என இப்பொழுதுதான் புரிகிறது. கல்யாணம் ஆன மூன்றே மாதத்தில் கணவனை இழந்து விட்டவள் அத்தை. மிகுந்த வைராக்கியசாலி. பாட்டியின் கணவரோ கல்யணம் ஆன ஒரு மாதத்தில் காவிரிக்குக் குளிக்கப் போனவர், திரும்ப வரவேயில்லை, உயிரோடு. ஏன் அவர்கள் எல்லாம் அப்படி இருந்தார்கள்,   சிடுசிடுத்தார்கள் என்பது அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது, மிக நன்றாகப் புரிகிறது.  அந்தக் காலத்தில் குலம், ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் இருந்தது. ஆனால் தற்பொழுது?... நானே சில சமயம் சில சினிமாக்களை, ஒளியும் ஒலியும் போன்ற பாடல் காட்சிகளைப் பார்க்கும் பொழுது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறேன். சில சமயம் எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. ஒரு வேளை நான் தான் இப்படி இருக்கிகிறேனோ, மற்றவர்கள் எல்லாம் நார்மலாகத் தான் இருப்பார்களோ?,  எனக்குப் புரியவில்லை.

உனக்கு ஒன்று தெரியுமா? நான் இப்பொழுதெல்லாம் வீட்டிற்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறேன். வெளியில் செல்வதென்றால் கோயிலுக்குச் செல்வதோடு சரி! எனக்கே என்னைக் கண்டு சில சமயங்களில் பயமாக, ஏன் வெறுப்பாகக் கூட இருக்கிறது. மாலா! இதற்கு நல்லதொரு தீர்வை நீ தருவாய் என்ற எண்ணத்தில் தான் இம் மடல். என் பிரச்னை என் கணவருக்கு நன்கு தெரியும். என்னைக் குழந்தைப் போலத் தான் பார்த்துக் கொள்கிறார். ஆயினும் சில விஷயங்களில் அவர் அப்படித் தான். சில செயல்கள் அவர் ஆன்மீக வாழ்விற்கு இடைஞ்சல் எனக் கூறுகின்றார். நான் தான் மாற வேண்டுமாம். எனவே இது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை அல்ல. முடிவெடுக்க வேண்டிய பிரச்னை. நீ நல்லதொரு முடிவைத் தருவாய் என்ற எதிர்பார்ப்புடன்...

உன் அன்புத் தோழி
கல்யாணி


(பி.கு. தயவு செய்து கடிதத்தைப் படித்தவுடன் கிழித்து எறிந்துவிடு. உடன் உன் மடலை எதிர் பார்க்கிறேன்)

*************

               03/05/1982
விழுப்புரம்


அன்புள்ள கல்யாணிக்கு,

உன் மாலதி எழுதிக் கொண்டது. நலம் விழைவதும் அ·தே! உன் கடிதம் கிடைத்தது. எனக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை! நீ பிரச்னை என்று நினைப்பது உண்மையில் ஒரு பிரச்னையே அல்ல. வீணாக நீ தான் வழக்கம் போல் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறாய். ஆனால் அதைத் தீர்க்க நீ எந்த வழியில், நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இப்போது முக்கியம். காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை உடைத்தெறியப் போகின்றாயா? அல்லது வேறு ஏதேனும் புதுமையைச் செய்யப் போகின்றாயா? முடிவெடுக்க வேண்டியது நீ தான். உடனே உன்னை நான் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாக்குவதாக எண்ணாதே! மனம் போனபடி வாழ்வது மனித வாழ்க்கையல்ல. அது மிருக வாழ்க்கை. நீ படித்தவள். பண்புள்ளவள். மன உறுதி மிக்கவள். எந்த விதத்திலும் கீழ்த் தரமான எண்ணங்களுக்கு இடம் கொடாதே! அதற்காக உன்னை எப்பொழுது பார்த்தாலும் கடவுளையே வணங்கிக் கொண்டு இரு என்றும் கூறவில்லை. சித்தர் பாடல்கள் மட்டுமல்ல, நல்ல புத்தகங்களை நிறையப் படி. குறிப்பாக மு.வ.வின், நா.பாவின் புத்தகங்கள் உன்னை நிச்சயம் பண்படுத்தும்.

சரி உன் பிரச்னைக்கான தீர்வு தான் என்ன? உனக்கு ஞாபகம் இருக்கும், நம் ரூம் மேட் உமாவைப் பற்றியும், ஜாஸ்மினைப் பற்றியும். அப்புறம் காயத்ரி, சுதா... புரிகிறதா, நான் சொல்ல வருவது...?

அந்தக் காலத்தில் அரசர்கள் பல மனைவிகளோடு அந்தப்புர வாழ்க்கை நடத்தினர். அந்த மனைவிகள், கணவர் இல்லாத நேரங்களில் எப்படி வாழ்க்கை நடத்தி இருப்பர் என எண்ணிப் பார். சேடிப் பெண்களைப் பற்றி நீ அறிவாய் தானே! அது போல சங்க இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், அதில் தோழியின் பங்கு முக்கியமானது. அவளுக்குத் தெரியாதது என்று எதுவுமே இல்லை. தலைவியின் உடல் உறுப்புக்களில் இருந்து, உடல் மச்சங்கள் வரை. அதெல்லாம் எப்படிச் சாத்தியம், அப்படியென்ன அவர்களுக்குள் நெருக்கம், ஏன் தலைவிக்கு மட்டும் இத்தனை தோழிகள்,  தோழிக்குக் காதலே வராதா, அப்படி வந்தால் அவள் என்ன செய்திருப்பாள், அவளுக்கு யார் உதவியிருப்பார்கள்? கொஞ்சம் எண்ணிப் பார். உனக்கே எல்லாம் புரியும்.

கடைசியாக ஒன்று. இந்த சமூகம் பலதைப் பற்றியும் பலவாறாகப் பேசிக் கொண்டுதான் இருக்கும். நாம் அதைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அதே சமயம், நாம் நமது கண்ணியத்தையும் கைவிட்டு விட முடியாது. உனக்கு நல்லதொரு கணவர் குழந்தைகள் உள்ளனர் என்பதை மறவாதே! உனக்குத் தெரியுமா, சில வீடுகளில் தாயும் மகளுமே நல்ல தோழிகளாக  விளங்குகின்றனர் என்பது! எதையும் புரிந்து நடந்து கொள். அவ்வளவுதான்.

தினம்தோறும் மாலை வேளையில் அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று குழந்தைகளுடன் விளையாடு. ஏதாவது கைத் தொழில் கற்றுக் கொள். அல்லது ஆக்கப்பூர்வமான செயல்கள், சோஷியல் சர்வீஸ் என்று எதையாவது செய். நல்ல இசையைக் கேள். கர்நாடக சங்கீதக் கேசட்டுகள் நிறையக் கிடைக்கின்றன. பாலமுரளி, எம்.எல்.வி, எம்.எஸ். பாடல்களைக் கேள். உன் கணவர் அனுமதி கொடுத்தால் நீ வேலைக்குக் கூடச் செல்லலாம். உன் உண்மையான பிரச்னை என்ன தெரியுமா? தனிமைதான். அதுதான் உன்னை இப்படியெல்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது. அதைப் போக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடும். முதலில் அதைப் போக்குவதற்கான செயல்களில் இறங்கு. வெட்டிப் பேச்சு பேசாத நல்ல நட்புக்களை வளர்த்துக் கொள். மூளைக்கு சதா வேலை கொடுத்துக் கொண்டே இருந்தால் கண்டபடி குழப்பமான எண்ணங்கள் எல்லாம் எதுவும் வராது. புரிகிறதா?

எரியும் நெருப்பை தண்ணீர் கொண்டும் அணைக்கலாம். மணல் கொண்டும் அணைக்கலாம். அது நெருப்பின் தன்மையைப் பொறுத்தது.  எனவே வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நல்லபடியாக நடந்துகொள். மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள். சில சமயங்களில் நமக்கு நாம் தான் உதவி என்பதை மறவாமல் அதற்கேற்றவாறு புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்.

அன்புடன்

உன்
மாலதி

(பி.கு. நீ சொன்ன படியே கடிதத்தைக் கிழித்து எறிந்து விட்டேன். என் இந்தக் கடிதத்தைக் கிழிப்பதும் கிழிக்காததும் உன் இஷ்டம். வாழ்க தெளிவுடன்)

No comments: