Thursday, January 13, 2011

புத்தகச் சந்தையும் புண்ணிய லோக ஆவிகளும்




                                         நுழைவாயில்

34வது புத்தகச் சந்தை தொடங்கிய நாள் முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். விசிலடித்து விரட்டும் வரை இருந்து தினமும் இரவு வீடு திரும்ப தாமதமானதால் இன்று தான் இந்தப் பதிவு. புத்தாண்டின் முதல் பதிவே புத்தகச் சந்தை பற்றியதாக இருப்பது மகிழ்ச்சி. (சுறுசுறுப்புத் திலகமாக்கும்)

கேமரா கைவசம் கொண்டு போகாததால் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. செல்போனில் சில படங்கள் எடுத்தேன் அவ்வளவுதான். அதுவும் அரங்கிற்குள் இர்ண்டு கைகளிலும் புத்தக மூட்டையைச் சுமந்து கொண்டிருந்ததால் படம் ஏதும் எடுக்க இயலவில்லை. வந்த அழைப்பையும் எடுத்துப் பேச இயலவில்லை.


                                         வெளியே

இரண்டாம் நாள் பாரா சொன்னது போல வலது கைப்பக்கமாகவே சென்று பின் மீண்டும் திரும்பி இடதுகைப் பக்கமாகவே வந்ததில் கால் வீங்கி விட்டது. அதனால் அடுத்த நாள் செல்லும் போது அப்படிச் செல்லாமல் எதிரும் புதிருமாகச் செல்ல ஆரம்பித்தேன்.

இரண்டு நாள் முன்பு மதியம் நான் சென்ற போது பெரியவர் முக்தா சீனிவாசன் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி, அடுத்துள்ள ரத்தின நாயக்கர் சன்ஸில் நுழைந்தேன். அங்கே அபூர்வமான சில புத்தகங்கள் தென்பட்டன. புறாவை மறைய வைத்தல், தண்ணீரைக் காணாமல் போகச் செய்தல், நெருப்பை விழுங்குதல், சேவல் சண்டை என்று இன்னும் என்னென்னவெல்லாமோ உட் தலைப்புகளில் ஒரு ஜாலம் பற்றிய புத்தகத்தைப் பார்த்தேன். விலை ரூ. 30/- என்று போட்டிருந்தார்கள். வாங்கலாமா என்று யோசித்தேன். சுவாரஸ்யத்திற்குப் படிக்கலாமே தவிர வேறு பலன் எதுவும் இல்லை என்பதால் நகர்ந்து விட்டேன். அதுமாதிரி மாஜிக், மலையாள மாந்த்ரீகம், தந்திரம் என்று அங்கே நிறைய புத்தகங்கள் இருந்தன.

அடுத்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். நான் சென்ற அனைத்து நாட்களிலுமே உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு, விகடன், நக்கீரன், கிரி ட்ரேடிங், அல்லயன்ஸ் போன்றவற்றில் நல்ல கூட்டம் இருந்தது. வானதி, பழனியப்பா, ராமகிருஷ்ண மடம், மணிவாசகர், விஜயா, மீனாட்சி புக்ஸ் போன்றவற்றிலும் சுமாரான கூட்டத்தைப் பார்த்தேன். மணிவாசகரில் சங்க இலக்கிய, இலக்கணங்கள் எல்லாவற்றையும் பெரிய, முழுமையான தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனந்தநிலையத்தில் புத்தகங்களோடு நிறைய விசிடி, டிவிடிக்களையும் விற்றுக் கொண்டிருந்தனர். ப்ரேம் செய்யப்பட்டிருந்த 3டி போட்டோக்களை சில பேர் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் எடுத்துப் பார்த்த போட்டோவில் விநாயகர் உருவம் கண்ணுக்குத் தெரிந்தது. எதிரே பாரா மெல்லமாக நடந்துப் போய்க் கொண்டிருந்தார். ஒரு ஹலோ சொல்லலாம் என்று பார்த்தால் எங்கோ, எப்படியோ அந்தர் த்யானம் ஆகி விட்டார்.

பின் பொதிகை அரங்கு சென்று வேளுக்குடியின் சி.டி/டி.வி.டி வந்து விட்டதா என்று கேட்டு, இல்லை என்றதும் பெயர் பதிந்து விட்டுப் போனேன்.

நக்கீரனில் ஓஷோவின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிவிட்டு வெளியே வந்து பக்கத்து சந்தில் திரும்பிய போது, திடீரென பத்ரி தோன்றினார். கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம் என நினைத்து, பதற்றத்தில் இரண்டு பைகளையும் கீழே போட்டு விட்டு ஒரு ஹலோ மட்டும் சொன்னேன்.

பேச்சு ஸ்பெக்ட்ரம்மில் ஆரம்பித்து, அப்படியே சித்த மருத்துவத்திற்குச் சென்று, கொஞ்சம் அவதானம் பக்கம் நகர்ந்து, ப்ரெய்ன் சிஸ்டம், பங்ஷனுக்கு தாவி, அப்படியே மைண்ட் ரீடிங், தாட் ரீடிங் என்று போய் இறுதியாக ஜோதிடத்தில் நிலை கொண்டது. தனது தந்தைக்கு ஜோதிடம் தெரியும் என்றும், அவர் ஜோதிடம் கற்றுக் கொண்டவர் என்றும் கூறினார் பத்ரி. ஒருவர் இறக்கும் தேதியை மிகச் சரியாகக் கணித்துச் சொன்ன ஜோதிடர்கள் பற்றிக்கூடத் தான் அறிவேன் என்றெல்லாம் சொன்னவர், ஆனால் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொன்னது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்து விட்டு எஸ்கேப். அவரும் அன்றைய விழாவுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததால் ஜாலியாக (?) நகர்ந்து விட்டார்.


                                         கலையரங்கத்தில் 

ஆழி பதிப்பகத்தில் பேயோனின் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, சில பக்கங்களைப் படித்துப் பார்த்து ஒன்றுமே புரியவில்லையே, வாங்கலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது பேயோனே கண்ணில் பட்டார். அழகான ட்ரௌஸரும், வெண்மை நிற பனியனும் அணிந்திருந்தார். (அவர் தானே பேயோன்?) நான் மீண்டும் ஹலோ சொல்ல நினைப்பதற்குள் யாரோ அன்பர்கள் குழு அவரைக் கடத்திக் கொண்டு போய் விட்டது. புத்தகப் பை கனம் மிகுதியாகச் சேர்ந்து விட்டதால் என்னால் அவரைப் பின் தொடர முடியவில்லை.

அப்புறம் மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி வந்ததில் புதுகைத் தென்றல் அருகே நல்லியைப் பார்த்தேன். அவருக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு, அங்கே நின்று கொண்டிருந்த திருப்பூர் கிருஷ்ணனுடனும், இலக்கியவீதி இனியவனுடனும் சிறிது நேரம் ‘நாட்டு நடப்பை’ப் பற்று உரையாடிக் கொண்டிருந்தேன்.  கிருஷ்ணன் நம்பியின் சகோதரர் கிருஷ்ணன் வெங்கடாசலமும் அங்கே இருந்தார். (கூடு இணைய தளத்தில் இலக்கியத்திலும்  திரையிலும் சாதனை படைத்த எழுத்தாளர்களைப் பற்றி எழுதியவர்). எழுத்தாளர் ஷங்கர நாராயணன் வந்தார். கடற்கரயும் பாலாவும் வேக வேகமாக எங்கோ கடந்து போனார்கள்.

புதிய நூல்களைப் பொறுத்தவரை கிழக்கில் வெளியாகி இருக்கும் பா.ராவின் கொசு என்னைக் கவர்ந்தது. கொசு என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று அறிய ஆவல். ஆனால் அலகிலா விளையாட்டு வாங்கியதால் கொசு வாங்கவில்லை. ஆனாலும் 25% டிஸ்கவுண்ட் கூப்பன் கொடுத்திருப்பதால், சாவகாசமாக தி.நகர் ஷோரூமில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

சரி, இனி தலைப்பிற்கு வருகிறேன்.

கிழக்குக்கு ஸ்டாலுக்குப் பக்கத்தில்தான் மேகதூதன் பதிப்பகம் ஸ்டால் உள்ளது. அதன் உரிமையாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன். இவர் ஆவியுலக ஆராய்ச்சியாளர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமானுஷ்ய ஆராய்ச்சிகளில்ல் ஈடுபட்டு பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். முதன் முதலாக இந்தப் புத்தகச் சந்தையில் ஸ்டால் போட்டிருக்கிறார். ஆவிகள் உலகம், அமானுஷ்ய ஆவிகள், ஆவிகளுடன் பேசுவது எப்படி, ஆக்கிரமிக்கும் ஆவிகள், ஆவிகள் செய்த அற்புத சிகிச்சைகள், தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் என்றெல்லாம் விதவிதமான ஆவித் தலைப்புகளில் புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் பேய்த்தனமாக, பிசாசுத்தனமாக விற்கிறதா என்பது தெரியவில்லை.

பத்ரி விக்ரவாண்டியாரை நேற்று சந்தித்து உரையாடப் போவதாகச் சொல்லியிருந்தார். என்ன உரையாடினார், பேய்களும், ஆவிகளும் ஏதேனும் புத்தகங்கள் வாங்க வந்தனவா அல்லது இனிமேல்தான் வருமா என்பது இனிமேல் தான் தெரிய வரும் என நினைக்கிறேன்.

அரங்கிற்கு வெளியே டிஸ்ப்ளே செய்யப்படிருந்த விளம்பரங்கள் என்னைக் கவர்ந்தன.

                  ஓஷோ அழைக்கிறார்

                  சுஜாதாவும் தான்



இவர் புஸ்தங்களும் நல்லா போச்சாம்.. 
எவருதுன்னு புரியுதா?

தொடர்ந்து விட்டு விட்டு (என்னே ஒரு முரண்) கண்காட்சிக்குச் சென்றதில் சில புத்தகங்களை வாங்கினேன். சில வாங்க நினைத்து வாங்காமல் விட்டு விட்டேன். நான் வாங்கிய புத்தகங்கள் பற்றிய லிஸ்ட் மற்றும் புத்தகச் சந்தை பற்றிய எனது கருத்துகள் நாளை.



***********************

No comments: