Friday, January 14, 2011

புத்தகச் சந்தையும் புண்ணிய லோக ஆவிகளும் - பகுதி 2
34வது புத்தகச் சந்தை பற்றிய எனது எண்ணங்கள்

நான் சென்ற வரையில் பயங்கரமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஓரளவிற்கு நல்ல கூட்டம் என்று சொல்லலாம். ஓகோவென்று வியாபாரம் நடந்திருக்கிறதோ இல்லையோ இதுவரை ஓரளவிற்காவது நடந்திருக்கும் என எண்ணுகிறேன்.

கழிவறைகள் சரியில்லை; நடக்கும் போது கால்கள் அமுங்குகின்றன; ஏ.டி.எம் வசதி இல்லை. க்ரெடிட் கார்டு வசதிகள் சரியாக இல்லை இவையெல்லாம் எல்லோரும் குறிப்பிடும் பொதுவான குறைகள். அடுத்த முறையாவது இவை களையப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் எனக்கென்னவோ க்ரெடிட் கார்டு வசதிகள் எல்லாம் நம் தமிழ்ப் பதிப்பாளர்கள் வருங்காலத்திலும் பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே! அவர்கள் வசிக்கும் காலமே வேறு. இதற்கு வேறு ஏதாவதுதான் மாற்று ஏற்பாடு கொண்டு வர வேண்டும்.

மிக மிக மோசமாக இருப்பது கழிவறை வசதிகள் தான். ஒவ்வொரு ஆண்டு சொல்லியும் இதில் முன்னேற்றமில்லை. இது மிக முக்கியமானது என்ற அக்கறை ஏன் யாருக்கும் இல்லை என்பது புரியவில்லை. இந்த விஷயத்தில் பபாஸிக்கு என் கடுமையான கண்டணங்கள். அடுத்த வருடமும் இப்படியே தான் செய்ய முடியும் என்றால் அதற்குப் பேசாமல் முதல்வரிடம் பேசி (??) தீவுத் திடலுக்கு புத்தகக் காட்சியை மாற்றி விடலாம். எந்தப் பிரச்னையும் இருக்காது. அரங்குகளும் பெரிதாக, நீளமானதாக இருக்கும். மக்கள் நடக்கவும் நிறைய இடவசதி இருக்கும். நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் வந்து செல்வது மிக எளிதாக இருக்கும். ஒரு கோடி கொடுத்தவரிடம் கோடி காட்டினால் செய்யாமல் இருப்பாரா என்ன?நான் அவதானித்த சில விஷயங்கள்

வைதிக ஸ்ரீயில் மடிசார்ந்து அணிந்து ஒரு அம்மணி இருப்பார். தற்போது நான் சென்ற நாட்களில் அப்படி யாரையும் காணவில்லை.

ஜோதிடம், சமையல், தன்னம்பிக்கை, அமானுஷ்யம், சித்தர்கள் என்று நிறைய நூல்கள் வருகின்றன. ஆனால் நகைச்சுவை நூல்கள் எதுவுமே இல்லை. அப்படி இருப்பவையும் ஒரே ‘கடியாக இருக்கின்றன.

விகடன் இந்த தடவை ஒரே ஸ்டால் மட்டுமே எடுத்திருந்தது.

கிழக்கு ஒரே ஸ்டால் ஆனால் பெரிய ஸ்டால்.

நக்கீரனை 2 அல்லது 3 இடங்களில் பார்த்த ஞாபகம்.

தமிழினியையும் கூட 2 இடங்களில் பார்த்தேன்.

மீனாட்சி புத்தக நிலையம், மீனாட்சி புக் ஹவுஸ் இரண்டும் ஒன்றா வெவ்வேறா என்று தெரியவில்லை.

இத்தனை முறை அலைந்தும் கூட வம்சி புக் ஹவுஸையும், கல்கி ஸ்டாலையும் மிஸ் செய்து விட்டேன்.சில சுவாரஸ்யங்கள்...

நான் சென்ற ஒவ்வொரு கடையிலும் அவ்வப்போது என்னைக் கடந்து சென்ற ஒருவர் ஹனுமத்தாஸனின் நாடி சொல்லும் கதைகள் எங்கே கிடைக்கும் என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். பொறுக்கமாட்டாத நான் அவரை பத்திரமாக அம்மன் பதிப்பகம் செல்ல வழிகாட்டினேன்.

இலக்கியப் புத்தகமாகத் தேடித் தேடி ஒருவர் வாங்கிக் கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது அவர் பாடகர் சஞ்சய் சுப்ரமணியம் என்று.

யுவன் சந்திரசேகரின் புதுப்படைப்புகள் எதுவும் இந்தப் புத்தகச் சந்தைக்கு வரவில்லை. இது எனக்கு ஒரு மிகப் பெரிய குறை.

பொட்டு வைத்திருந்த, காவி உடை அணிந்த, ஒல்லியான இளைஞர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். நித்தியானந்தாவோ என்று சற்று ஐயப்பட்டு உற்றுப் பார்த்தேன். அவர் இல்லை. அவரது அல்டாப்பு ஸ்டாலையும் இந்த முறை என்னால் காண முடியவில்லை. நிம்மதி.

உயிரிமையில் சாருவின் தேகமும், சரசம், சல்லாபம், சாமியாரும் ஹாட் கேக் ஆக விற்பனை ஆவதாக அறிந்தேன். நான் பார்த்த நாட்களில் சாரு அழகான சட்டை போட்டுக் கொண்டு அழகாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பட், அவரை ஆழமாகக் கவனித்த வரையில் எப்போதும் ஏதோ ஒருவித பதட்டத்தில் இருப்பவர் போலவே இருந்தார். (நான் கொஞ்சம் பாடி லேங்குவேஜ் கற்றுக் கொண்டிருக்கிறேன், ஒரு காலத்தில்) அவரது பதற்றத்திற்குக் காரணம் புரியவில்லை. தமிழினியில் நாஞ்சில் நாடன் அமர்ந்திருந்தார். பலரும் அவரது சாகித்ய அகாதமி விருது பெற்ற சூடிய பூ சூடற்க வாங்கி கையெழுத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர். பேசியபடியே சிலருக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் விருது நாயகர். கிழக்கில் உலோகம், ராஜராஜ சோழன், தி.இயக்க வரலாறு என்று மாறி மாறி ஹிட் லிஸ்டில் உள்ளதாக அறிந்தேன்.

இட்லி வடை யார் என்று கண்டு பிடிக்க முயன்று நான் சந்தேகப்பட்ட ஒருவரிடம் ‘இட்லி வடைஎன்றேன், ஆமாம் காண்டீனில் கிடைக்கலாம். பட் சீக்கிரம் போய்ப் பாருங்கள் என்றார் மிகவும் சீரியஸாக. நானும் உடனே சீரியஸாக அவ்விடம் விட்டு நகர்ந்து மேக தூதனுக்குள் நுழைந்தேன். தொப்பி போட்டிருந்தவர் அன்போடு வரவேற்றார். அந்த வரவேற்பில் மனம் குளிர்ந்துபோய் சில புத்தகங்கள் வாங்கினேன்.

பொதுவாக எல்லா பதிப்பகங்களிலுமே புதிய புத்தகங்களின் விலை எல்லா ஆண்டுகளையும் விட இந்த முறை நிறையவே கூடுதல்தான். தாளின் விலையேற்றம், சந்தைப்படுத்துதல் என்று பல செலவுகளைக் காரணமாகச் சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு எழுத்தாளர்களின் ராயல்டி உயர்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.

தமிழில் பெயர் வைத்தால் சினிமாப் படங்களுக்கு வரி விலக்கு, மண்ணாங்கட்டி என்றெல்லாம் சலுகை செய்யும் அரசு, இந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு ஏன் ஏதாவது சலுகைகள் வழங்கக் கூடாது. தாள்களை சலுகை விலையில் அல்லது மிகக் குறைந்த விலையில் வழங்கலாம் என்பது என் கருத்து.

பெண்கள் கூட்டம் அதிகம் காணப்படவில்லை. பெண்களிடம் வாசிப்பு ஆர்வம் குறைந்து விட்டதுதான் காரணமா, அல்லது கூட்டத்தில் திண்டாட வேண்டாம் என்று வரவில்லையா என்பது தெரியவில்லை.

புத்தகச் சந்தைக்குக் கூட்டம் குறைவாக வருவதற்கு முக்கிய காரணம் இந்தக் குளிரும் அதிகப் பணியும் தான் என்பது என் திடமான கருத்து. அதனால் தான் 7.00 மணிக்கு மேல் அதிகமாக வர வேண்டிய வாசகர்கள் கூட்டம் படிப்படியாகக் குறைந்து விடுகிறது. இயற்கை செய்யும் சதி.

இனி நான் வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட் நாளை.

******************


No comments: