ஒருவழியாக 33வது புத்தகக் காட்சி நிறைவுக்கு வந்தது. நேற்று இரண்டு நாட்களுமே நல்ல கூட்டம் இருந்தது. பொதுவாகவே எல்லா நாட்களிலும் ஓரளவிற்குக் கூட்டமிருந்தது என்று சொல்லலாம். திருச்சி புக் ஹவுஸில் பெண்கள் கூட்டத்தை நிறைய பார்க்க முடிந்தது. அடுத்தது அதே போன்ற பெண்கள் கூட்டத்தை கிரி டிரேடிங்கிலும் அல்லயன்ஸ் மற்றும் விகடனிலும் பார்த்தேன். கிழக்கு, விகடன், உயிர்மை மட்டுமல்லாமல் இம்முறை வம்சி புக் ஹவுஸ், கீழைக்காற்று, சந்தியா பதிப்பகம், தமிழினி, காலச்சுவடு, காவ்யா, ஆழி என எல்லாருமே நிறைய புதிய புத்தகங்களை அறிமுகம் செய்திருந்தனர்.
எனக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்தப் பத்து நாட்களில் அடிக்கடி சென்று வந்தேன். அதுசரியில்லை, இது சரியில்லை என்று குறை கூறுவதை விட்டு விட்டு, இவ்வளவையும் நேர்த்தியாகச் செய்த பதிப்பாளர்கள் குழுவைப் பாராட்டுவோம். கிட்டத்தட்ட நானூறிற்கும் மேற்பட்ட ஸ்டால்கள், நடந்து நடந்து கால்கள் வலித்தன.
எனி இண்டியன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மாருதி பதிப்பகம், பாரி நிலையம் (முல்லை) போன்ற பதிப்பக அரங்குகளைக் காணவில்லை அல்லது என் கண்ணில் படவில்லை.
கிழக்கு பதிப்பகம் பல அரங்குகளிலும் நூல்களை விற்பனைக்கு வைத்திருந்தது. விருட்சத்தில் நான் கிழக்கின் சில புத்தகங்களை வாங்கினேன். அதே போல் விகடனின் புத்தகங்களும் புதுகைத் தென்றல் உட்பட சில அரங்குகளில் கிடைத்தன.
ஓஷோ அரங்கில் நல்ல கூட்டம். அதே போல் நான் போன போது ஜே.கே மற்றும் பரமஹம்ச நித்யானந்தர் ஸ்டாலிலும் கூட்டம் இருந்தது. ராமகிருஷ்ணா மிஷன் ஏனோ இந்த முறை சோபிக்கவில்லை. பழனியப்பா பிரதர்ஸ் நிறைய புதிய நூல்களைக் கொண்டு வந்திருந்ததுடன் கவர்ச்சியான விளம்பரமும் (200க்குமேல் வாங்கினால் இலவசம் என்று) செய்திருந்தார்கள். காலச்சுவடு மூன்று வாங்கினால் 1 இலவசம்; 2 வாங்கினால் 1 இலவசம் என்று அறிவித்திருந்தார்கள். எந்தெந்ததப் புத்தகங்கள் என்று கேட்டேன். சிலவற்றைக் காண்பித்தார்கள். சிரித்துக் கொண்டே பேசாமல் வந்து விட்டேன். ஆனால் நிறையப் பேர் அதில் மூழ்கித் தேடி வாங்க முயன்றதைப் பார்த்தேன். (ஆனால், வாங்கினார்களா என்பது தெரியாது)
இப்படி நான்கு நாட்கள் விடாமல் சென்று பல புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியலை வெளியிடாவிட்டால் தலை சுக்கல் சுக்கலாக அல்லது ஆயிரம் பக்கங்களாகக் கிழிந்து போகும் என்ற பதிவுலக வேதாளத்தின் சாபத்திற்குப் பயந்து பட்டியலைக் கீழே தந்திருக்கிறேன்.
1. வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர் - உயிர்மை
2. நீர்ப்பறவைகளின் தியானம் - யுவன் சந்திரசேகர் - உயிர்மை
3. நகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ்.ரா - உயிர்மை
4. அமெரிக்கக்காரி - அ.முத்துலிங்கம் - காலச்சுவடு
5. அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன் - காலச்சுவடு
6. நினைவுப்பாதை - நகுலன் - காலச்சுவடு
7. கவி பாடலாம் - கி.வா.ஜ - செண்பகா பதிப்பகம்
8. மௌனம் - கே.எஸ்.நாகராஜன் ராஜா - செண்பகா பதிப்பகம்
9. கதிரேசன் செட்டியாரின் காதல் - மா.கிருஷ்ணன் - மதுரை பிரஸ்
10. ஒரு கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் - ஹரிகிருஷ்ணன் - திரிசக்தி பிரசுரம்
11. ஓடிப்போனானா? - ஹரிகிருஷ்ணன் - திரிசக்தி பிரசுரம்
12. என் நண்பர் ஆத்மாநாம் - ஸ்டெல்லா புரூஸ்- விருட்சம்
13. கர்நாடக சங்கீதம் எளிய அறிமுகம் - மகாதேவன் ரமேஷ் - கிழக்கு
14. கடல் கொண்ட நிலம் - யுவன் சந்திரசேகர் - கிழக்கு
15. லண்டன் டயரி - இரா. முருகன் - கிழக்கு
16. சைக்கிள் முனி - இரா. முருகன் - கிழக்கு
17. திருநங்கைகள் உலகம் - பால் சுயம்பு - கிழக்கு
18. தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும் - கே.கே. பிள்ளை - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
19. முல்லை - கி.வா.ஜ - அமுதநிலையம்
20. ஸ்ரீ ராமகிருஷ்ணர் - விகடன் பிரசுரம்
21. செம்மங்குடி முதல் ஸ்ரீனிவாஸ் வரை - வீயெஸ்.வி- விகடன் பிரசுரம்
22. இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் - அறிவு பதிப்பகம்
23. இப்போ அங்கே என்ன நேரம் - அ. முத்துலிங்கம் - தமிழினி
24. தினமணி - தீபாவளி மலர்
25. தினமணி - இசை விழா மலர்
26. எனது வாழ்க்கை விளக்கம் - வேதாத்ரி மகரிஷி -
27. உலக நட்சத்திரங்கள் - ராஜேஷ் - கலைஞன் பதிப்பகம்
28. இயல்பு நிலை - யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி - விருட்சம்
29. ரமணாச்ரம வாழ்வும் நினைவும் - சூரி நாகம்மா - ரமாண்ச்ரமம்
30. J.Krishnamurthy - pupul jayakar - penguvin
இவ்வளவுதான் இப்போதைக்கு லிஸ்ட் போட முடிஞ்சது. இனிமேதான் படிக்க ஆரம்பிக்கோணும். போன வருஷம் வாங்கின பொஸ்தகத்தையே இன்னும் படிச்சு முடிக்கல. அதுல இதை நான் எப்ப படிச்சு, எப்ப விமர்சன குறிப்பு அல்லது கருத்தைச் சொல்லி..... திட்டு வாங்கி.... ஒண்ணும் விளங்கலே.... பார்ப்போம்.
(பின்குறிப்பு அல்லது எச்சரிக்கை - மேற்கண்ட பட்டியலைப் படித்து விட்டு சும்மானாங்காட்டியும் நான் விலைப்பட்டியலை பார்த்துத்தான் எல்லாத்தையும் எழுதியிருக்கிறேன் என்று சந்தேகப்படுபவர்கள் புத்தகாசுரனின் சாபத்துக்கு உள்ளாவார்களாக)