இணையம் அறிமுகமான காலகட்டத்திலிருந்தே கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வமுண்டு. சிறுவயதில் எழுதிப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு வெளியாகி இருக்கிறது என்றாலும் தற்போது சோம்பல் மற்றும் முனைப்பின்மை காரணமாக அவ்வப்போது எழுதிப் பார்த்து அப்படியே தொடராமல் விட்ட கதைகள் அநேகம். என்றாவது எழுதி முடிப்பேனா?... தெரியாது!
அதிலிருந்து ஒரு சில மட்டும்...
கதை - 1
கிருஷ்ணசாமிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. இதுவரை வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் இழுத்துக் கொண்டிருந்த சுவாசம் மெல்ல மெல்ல மேலேறி இப்போது தொண்டைக்குழியை அடைந்து விட்டிருந்தது. ’ஹா.. ஹா...’ என்று விநோதமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் என எல்லோரும் கண்களில் கண்ணீருடன் அவர் கட்டிலைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.
கிருஷ்ணசாமிக்கு காட்சி விரிந்தது. குடுமியும் பூணூலுமாய் ஒரு சிறு பையன் தோன்றினான். ’வா... வா...’ என்று இவரை அழைத்தான். அவன் கூடவே தலையைத் தலையை ஆட்டியபடி ஒரு மாடு நின்று கொண்டிருந்தது. கிருஷ்ணசாமி திடீரென்று அந்த மாட்டை விரட்ட, வெகுண்ட மாடு அந்தச் சிறுவனைத் துரத்த... சிறுவன் பயந்து போய், கத்திக் கொண்டே வயலில் வேகமாக ஓடி... கால் தடுக்கி மிகப் பெரிய அந்தத் திறந்தவெளிக் கிணற்றில் விழ.... மாடு திரும்பி நின்று கிருஷ்ணசாமியை முறைத்தது. மாட்டின் தலைக்கு பதில் அதில் கிருஷ்ணசாமியின் தலை தெரிந்தது. கிருஷ்ணசாமி ’ஓ’வென்று அலறினார்.
**********
கதை - 2
பீச்சில் நான் காலாற நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த மனிதர் எதிரே வந்தார். அழுக்குத் தாடி. கலைந்த தலை முடி கிழிந்த ஆடை. முகம் முழுவதும் அம்மைத் தழும்புக் காயம் என அவரைப் பார்க்கவே சற்று பயங்கரமாக இருந்தது.
“தம்பி! ரொம்ப பசிக்குதுப்பா, டீக் குடிக்கவாவது எதுனா கொடேன்” என்றார்.
எனக்கு ஏனோ ஆத்திரமாக வந்தது. அதே சமயம் பரிதாபமாகவும் இருந்தது. பைக்குள் கைவிட்டேன். ஒரு முழு ஐந்து ரூபாய் நாணயம் வெளிவந்தது. அதை அவர் கையில் போடப் போனேன். அவரோ, “தம்பி, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு,” என்றார் சிரிப்புடன்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன இது, ஏன் இவர் என்னவோ சொல்லி உளறுகிறார்.. ஒருவேளை பைத்தியமா, இல்லை குடிகாரரோ.. கஞ்சா, அபின் இது மாதிரி ஏதும் குடிப்பவரோ, போதையில் உளறுகிறாரோ?” புரியாமல் விழித்தேன்.
“நாராயணா! நாராயணா!“ என்றார் அவர் புன் சிரிப்புடன்.
நான் திகைத்தேன். “என்ன இது?, எப்படி இவருக்கு என் பெயர் தெரியும்? உண்மையில் இவர் என் பெயரைத் தான் சொல்கிறாரா, இல்லை கடவுளைக் கூப்பிடுகிறாரா? ஒன்றும் புரியவில்லையே!” அவரையே உற்று நோக்கினேன் சற்று அச்சத்துடன்.
அவர் ஒன்றும் சொல்லாமல் நீட்டிய கையை மேலும் என்னை நோக்கி நீட்டியவாறே என் கண்களை உற்று நோக்க ஆரம்பித்தார். எனக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.
************
கதை - 3
நள்ளிரவு. ஊர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், உடல் முழுதும் ஈரம் சொட்டச் சொட்ட அந்த ஆலயத்தினுள் நுழைந்தாள் அவள். அங்குள்ள சிலைகளைச் ஒரு சுற்றுச் சுற்றி வந்தவள், கை கூப்பி வணங்கி விட்டு, மெள்ள தனது ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைய ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில்...
அவள் இடுப்புவரை தொங்கிய அந்தக் கூந்தல் அவளை முழுமையாய் மறைந்திருக்க, மெல்ல அந்தச் சிலைகளைச் சுற்றி வர ஆரம்பித்தாள். அவள் உதடுகளில் மிகத் தீவிரமான முணுமுணுப்பு.
பதினைந்து முறை சுற்றியவள், முதல் சிலை அருகே வந்தாள். நின்றாள். கை கூப்பினாள். தான் கொண்டு வந்திருந்த கறுப்பு நிறப் பையிலிருந்து ஏதோ ஒன்றை வெளியே எடுத்தாள். அது ஒரு மாலை. இலைகளாலும், மூலிகை மலர்களாலும் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதனை எடுத்து தனது கழுத்தில் அணிந்து கொண்டவள், அந்தச் சிலையைப் பார்த்துச் சிரித்தாள், “திருப்தியா! திருப்தியா” என்றாள் சத்தமாக. தலையைத் தலையை ஆட்டியவாறே உரக்கச் சிரித்தவள், ஒரு கறுப்பு நூல் கயிற்றை எடுத்தாள், மந்திரங்களை உச்சரித்தவாறே, அந்தச் சிலைமீது அதனைச் சுற்றத் தொடங்கினாள்.
சற்று நேரத்தில் அந்தச் சிலையின் கை, கால்கள், இடை என அனைத்தும் அந்த நூலின் கட்டுக்குள் வந்து விட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் அந்தச் சிலையைச் சுற்றி வந்து வணங்கியவள், அந்த சிலையின் அடிப்பாகத்தை அசைக்கத் தொடங்கினாள். அஷ்டபந்தனம் வைத்து, பூசப்பட்டிருந்த அது, அவ்வளவு எளிதில் அசைந்து கொடுக்கவில்லை. உடன் கத்தி போன்ற ஒன்றை வைத்து, அதனைக் கீறத் தொடங்கினாள்.
சிறிது நேரத்தில் அதன் கலவைகள் உடைந்தன. உதிர்ந்து விழுந்தன. இப்பொழுது மெல்ல அந்தச் சிலையை நகர்த்தினாள். அவள் முகத்தில் வெற்றிக் களிப்பு. சிலையை இலேசாக மேலே தூக்கினாள்.. கீழே.. அந்த இயந்திரத் தகடு வைக்கப்பட்டிருந்தது. மெல்ல கை விட்டு அதனை எடுத்துக் கொண்டவள், அதனைச் சுருட்டி, தனது அரைஞாண் கயிற்றில் முடிந்து கொண்டாள். பின் சிலையை அதே இடத்தில் வைத்தவாறே, அடுத்த சாமி சிலையை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.
*********
(தொடரும்)
4 comments:
நல்லாத்தானே சார் இருக்கு. ஏன் எழுதாம விட்டுட்டீங்க. நேரம் ஒதுக்கி எழுதுங்க. உங்களுக்கு வர்ணனை நல்லாவே வரும்னு நினைக்குறேன்.
சிவசாமி
கதையே எழுத ஆரம்பிக்கலயாம். அதுக்குள்ள ’தொடரும்’மாம். நல்ல காமெடி.
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!
நன்றி, கருத்திட்ட அனைவருக்கும். நண்பர்களுக்கு எனது புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துகள்.
Post a Comment