Saturday, November 28, 2009

வலி

சிறுகதை

(லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளியானது)

அவசரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த விஸ்வநாதன் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டார். வாசலில் மாலையும் கழுத்துமாய் ராதா, கூடவே சிரித்த முகத்தோடு கோட்-சூட் அணிந்து ஒருவன். பட்டுப் புடவையும், நகையும் மினுமினுக்க ‘அப்பா’ என்றாள் ராதா சற்றே தயக்கத்துடன்.

‘ஜானகி, ஜானகி’ விஸ்வநாதன் உள் நோக்கி உரத்த குரலெடுத்துக் கத்தவும், என்னவோ, ஏதோவென்று பயந்து நடுங்கிக் கொண்டே ஓடி வந்தாள் ஜானகி - விஸ்வநாதனின் மனைவி.

‘இங்க பார், இந்த அநியாயத்தைப் பார்! கடவுளே, இதைப் பார்க்கிறதுக்கா எனக்கு இந்தக் கண்ணையும், பாழாப்போன உயிரையும் கொடுத்திருக்க, அய்யோ, பகவானே, பகவானே! இப்படி மோசம் பண்ணிட்டாளே, பாதகி, நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாளே! சுயநலம் பிடிச்ச மூதேவி, துரோகி, சனியன், பீடை...’ பெருங்குரலெடுத்துக் கத்தினார் விஸ்வநாதன்.

‘அம்மா, ராதா, இது என்னம்மா கோலம், அய்யோ இப்படி மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, வயித்துல நெருப்பள்ளிக் கொட்டிட்டியே! அடிப்பாவி, இனி நான் என்ன பண்ணுவேன். அக்கம்பக்கத்துல எப்படி முழிப்பேன். சின்னவளை எப்படிக் கரையேத்துவேன்.... அய்யோ, அய்யோ, எனக்கு தாங்க முடியலையே!’ – அப்படியே வாசலில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் ஜானகி.

****************

விஸ்வநாதன் – ஜானகி தம்பதியினரின் மூத்த மகள் ராதா. அழகும் அறிவும் நிறைந்தவள். பி.எஸ்ஸி. கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்தவுடன் அவளுக்கு கால் சென்டரில் வேலை கிடைத்தது. கை நிறையச் சம்பளம். சனி, ஞாயிறு லீவ், வீக் எண்ட் பார்ட்டி, அடிக்கடி டூர் என்று வாழ்க்கை ஜாலியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ரகுவைச் சந்திக்கும் வரை.

ரகு அதே கம்பெனியில் சீனியர் புரொக்ராமிங் மானேஜர். 28 வயது தான். ஆனால் அதற்குள் அந்த தலைமைப் பதவியை அடைந்து விட்டான். இன்னும் மேலே உயர வாய்ப்பு இருக்கிறது. நல்ல பேச்சுத் திறமை. எதிராளிகளைப் பார்வையிலேயே எடைபோடும் திறன் என்று எல்லாமே அவனது ப்ளஸ் பாயிண்ட்கள். புராஜெக்ட் விஷயமாக அடிக்கடி ரகுவோடு டிஸ்கஷன், மீட்டிங் என்று தொடர்புகள் அதிகரிக்க, ஒருநாள் ராதா வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டாள், ‘ ’ரகு உங்களைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், உங்களுக்குச் சம்மதமா?’

ரகுவுக்கும் ஆசைதான். அவனும் ராதா மாதிரி புத்திசாலியான, அழகான பெண்ணைத் தான் தேடிக் கொண்டிருந்தான். ஆனால், தன் அம்மா சம்மதிப்பாளா என்று ஒரு சந்தேகம் அவனுக்கு இருந்தது. அதனால் பதில் ஏதும் சொல்லாமல் வெறும் புன்னகையோடு நிறுத்திக் கொண்டான்.

‘என்ன பதிலே காணும், ஒருவேளை என்னைப் புடிக்கலையோ? என்று ஆழம் பார்த்தாள் ராதா.

‘ஓ, காட். நான் அப்படி சொல்லவே இல்லையே!’ பதட்டமாக மறுத்தான் ரகு.

‘பின்ன...’ என்றாள் பொய்க் கோபத்துடன் ராதா.

‘உங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிப்போய் எங்க அம்மாவை அறிமுகப்படுத்தறேன். மாமியாருக்கும், மருமகளுக்கும் பிடிச்சுப் போச்சுன்னா எனக்கு ஒண்ணும் அப்ஜெக்‌ஷன் இல்ல’ என்றான்.

‘ ஓ, சரிதான். நீங்க சரியான அம்மா கோண்டுவா. நான் என்னவோ உங்களை பெரிய வீர, தீரமான ஆண்பிள்ளைன்னு இல்ல நினைச்சேன்!’

‘ அடடா, என்ன ஒரு பொஸஸிவ்னெஸ். நான் அம்மா கோண்டும் இல்ல, ஆயா கோண்டும் இல்ல. முதல்ல எங்க வீட்டுக்கு வாங்க. அங்க உள்ள மனுஷங்கள உங்களுக்குப் பிடிச்சிருந்தா உடனே டும் டும் தான். ஆமா, உங்க வீட்டுல ஒண்ணும் பிரச்சனை இருக்காதே!’ என்றான் ரகு.

‘இருக்காதுன்னு தான் நினைக்குறேன்’ என்றாள் ராதா.

‘ ஒருவேளை அவங்க ஒத்துக்கலைன்னா?’

‘அதை அப்போதைக்குப் பாத்துக்கலாம்’ சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் ராதா.

***************

ஒரு நாள் ரகுவின் வீட்டிற்குச் சென்றாள் ராதா. ரகுவின் தாய் மாலதி சற்று கர்வியாகத் தான் காணப்பட்டாள். ஆனால் பழகிய சில நிமிடங்களில் அந்நியோன்யமாகி விட்டாள். அரசு அலுவலகத்தில் சூப்ரிண்டெண்ட் ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவள். அதனால் இயல்பாகவே அவளிடம் அந்த கம்பீரமும் கர்வமும் இருந்தது. ரகுவிற்கு அப்பா இல்லை. அவர் ரயில்வேயில் டாக்டராக இருந்தவர். திடீரென்று மாரடைப்பில் காலமாகி விட்டார். அப்போது ரகுவுக்கு 17 வயது. +2 முடித்திருந்தான். அதன் பிறகு அவன் சித்தப்பா டேவிட் தான் அவனைப் படிக்க வைத்து ஆளாக்கினார். ரகுவின் அப்பா தாமஸிற்கு கேரளாவில் மிகப் பெரிய வீடு இருந்தது. எல்லாவற்றையும் விற்று விட்டு சென்னைக்கு வந்து செட்டிலாகி விட்டார்கள்.

 ‘என்னம்மா, என் பையனை உனக்குப் பிடிச்சிருக்கா, சும்மா சங்கோஜப்படாம சொல்லு’ என்றாள் மாலதி.

 ‘ம்’ என்றாள் ராதா சந்தோஷத்துடன். ஆனால் உள்ளுக்குள் ஒரு குழப்பம். ‘ரகுவின் அப்பா பெயர் தாமஸ் என்றால்.... இவர்கள் கலப்பு மணத் தம்பதியினரோ... அப்படியென்றால் வீட்டில் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவே மாட்டார்களே!...’ மனம் குழம்பியது அவளுக்கு.

 ‘அட, என்னம்மா யோசனை, எங்களதும் காதல் கல்யாணம்தான். நான் ஹிந்து. அவர் கிறிஸ்துவர். இரண்டு பேர் குடும்பத்துலயும் ஒரே எதிர்ப்புதான். ஆனால் நாங்க மதத்தைக் காதலிக்கல. மனசைத்தான் காதலிச்சோம். அவங்க அவங்க கொள்கைப்படிதான் கடைசி வரைக்கும் வாழ்ந்தோம். அது மட்டுமில்ல. அவர் கடைசி வரைக்கும் ஒரு கிறித்துவனாத் தான் வாழ்ந்தார். நான் இன்னிக்கு வரைக்கும் ஒரு இந்துவாகத் தான் இருக்கேன். இதெல்லாம் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் மா. கடவுள் ஒருத்தர் தான். ஆனா அவர் ரூபங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் வேற வேற. ஆனா, இதெல்லாம் சரியா புரிஞ்சுக்காம இன்னைக்கு ஒருத்தருக்கொருத்தர் வெட்டு குத்துன்னுட்டு அலையுறது ரொம்ப வருத்தமா இருக்கு. சரிம்மா, உங்க வீட்டுல ஒண்ணும் பிரச்சன வராது இல்ல’ என்றாள் மாலதி.

 ‘வரும்னுதாம்மா நினைக்குறேன். அப்படி வந்ததுன்னா என்ன பண்றதுன்னு தான் புரியல... என்றாள் ராதா.

 ‘எலாம் நல்லதே நடக்கும் ராதா, கவலைப்படாதே!’ என்று ஆறுதல் கூறினாள் மாலதி.

‘சரி ராதா இன்னொரு முக்கியமான வி.ஐ.பிய உனக்கு அறிமுகப்படுத்தவே இல்லையே, வா உள்ளே! என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.

 மாலதி வீடு திரும்பும் போது அவளுக்குள் சந்தோஷம், கவலை, கோபம் என்று எல்லா உணர்வும் கலந்திருந்தது.

 *********************************

திடீரென்று ஒருநாள் விஸ்வநாதன், ஜானகி, தங்கை ரஞ்சனி என்று எல்லோரும் இருக்கும் போது விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டாள் ராதா. வீடே போர்க்களம் ஆகி விட்டது. விஸ்வநாதன் தன் பெண் கால்செண்டரில் வேலை பார்ப்பதை உறவினர்கள், நண்பர்கள் என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லி, மாப்பிள்ளை பார்க்கவும் சொல்லியிருந்தார். ராதா திடீரென்று இப்படி காதல் விவகாரத்தைச் சொல்லவும் அவருக்கு ஒரேயடியாக அதிர்ச்சியாகி விட்டது. ஒரேயடியாகக் கத்த ஆரம்பித்தார். வழக்கமான குலம், கோத்திரம், ஜாதி என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ராதா கேட்பதாக இல்லை. அவள் மிக உறுதியாக இருந்தாள். பண்ணிக் கொண்டால் ரகுவைத் தான் பண்ணிக் கொள்வது... இல்லாவிட்டால்... எல்லாவற்றையும் உதறி விட்டு பேசாமல் சமூக சேவை செய்யப் போய் விடுவது என்பது அவள் எண்ணமாக இருந்தது.

ராதாவிற்கு மன உறுதி மிக அதிகம். காரணம், அவள் சிறுவயது முதலே விஸ்வநாதனின் அம்மா பார்வதியிடம் கிராமத்தில் வளர்ந்தவள். பார்வதியிடம் இருந்த அந்த வைராக்கியம் ராதாவிடமும் இருந்தது.

என்ன சொல்லியும் ராதா கேட்பதாக இல்லை என்பதால், ‘ நீ இப்படி கண்டவனையும் இழுத்துண்டு வந்தேன்னா, என் பொணத்தைத் தான் பாக்க முடியும்’ திட்டவட்டமாகச் சொல்லி விட்டு ஆபிஸிற்குப் போய் விட்டார் விஸ்வநாதன்.

அதுமுதல் வீட்டில் ராதாவுடன் யாரும் பேசுவதில்லை. ராதாவும் அவர்களிடம் அதிகம் பேச முற்படவில்லை. சிறுவயது முதலே ராதா பாட்டியிடம் வளர்ந்ததாலோ என்னவோ அப்பா, அம்மா, தங்கை என்று அவளுக்கு அதிக ஒட்டுதல் ஏற்படவில்லை. பாட்டிதான் உயிர். பாட்டிதான் எல்லாம் அவளுக்கு. ஆனால் பாட்டி... பாட்டி... பாட்டியை நினைத்தபோது கண் கலங்கியது ராதாவிற்கு.

 ராதா வழக்கம் போல் வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள். ஆபிஸ் கேண்டினிலேயே மூன்று வேளை உணவையும் முடித்துக் கொண்டு தான் வீட்டிற்கு வருவாள். அதனால் வீட்டில் அவளுக்கு தேவைகள் என்று அதிகம் இருக்கவில்லை. ரஞ்சனி மட்டும் அவ்வப்போது ஏதாவது பேசுவாள். ஜானகி சாடை, மாடையாக ஏதாவது சொல்லுவாள். அவ்வளவுதான். ஒரு மாதம் ஆகிவிட்டது. ரகுவின் பேச்சையே யாரும் எடுக்கவில்லை.

*********************************

ராதா அவனை மறந்து விட்டாள். வயசுக் கோளாறு. நாளானால் சரியாகிவிடும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜானகிக்கும் விஸ்வநாதனிற்கும் பேரிடியாய் மாலையும் கழுத்துமாய் வந்து நின்றாள் ராதா.

*********************************

திகைத்துப் போய் வாசலில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள் ராதா,

’அப்பா, அம்மா... நீங்க ஆரத்தி எடுக்க வேண்டாம், வான்னு கூப்பிட வேண்டாம். அது உங்களுக்கு அசிங்கமாவும், அவமானமாவும் இருக்கலாம். ஆனா, என் புருஷனை இப்படி நிக்க வச்சுப் பேசறது எனக்கு அசிங்கம், அதுனால அட்லீஸ்ட் அந்த வராந்தாவுலயாவது வந்து உட்கார்ந்துக்கறேன். எனக்கு உங்க கூட நிறையப் பேசணும்.’ சொல்லிவிட்டு கணவனுடன் வாசல் வராந்தா பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

 ”அப்பா, வயசான காலத்துல நான் உங்க பேச்சை எல்லாம் மீறி இப்படி செஞ்சது தப்புதான். ஒத்துக்கறேன். ஆனா, யோசிச்சுப் பாருங்கப்பா. வாழ்க்கைல நீங்க செஞ்சதெல்லாம் நியாயம் தானா... என்னை சுயநலம் பிடிச்சவன்னு சொன்னீங்க. சரிதான்... ஆனா, நீங்க மட்டும் சுயநலமே இல்லாதவங்களாப்பா.... சொல்லுங்கப்பா... சொல்லுங்க.... உங்க அம்மா எங்க... என்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த என் பாட்டி எங்க... சொல்லுங்கப்பா... சொல்லுங்க...”

 ‘அம்மா ராதா... அது வந்து....’

 ‘ ஏம்பா மென்னு முழுங்குறீங்க... தயங்காம உண்மையச் சொல்லுங்க... எங்க அவங்க...’

விஸ்வநாதன் சற்று நேரம் பதில் சொல்ல முடியாமல் நின்றார்.

 ’இப்படி பேசாம நின்னிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? சொல்லுங்கப்பா.. உங்க அம்மா எங்கேன்னு சொல்லுங்க ‘

சற்று தயங்கிய விஸ்வநாதன், ‘என்னத்த சொல்றது... அவ எங்கயோ காணாமப் போயிட்டா. புத்தி ஸ்வாதீனம் இல்லாமப் போனதால எங்க போனா, எப்படிப் போனான்னு தெரியல. நானும் எல்லா இடமும் தேடிப் பார்த்தேன் அவ போன இடம் எதுன்னு தெரியல. கண்டுபிடிக்க முடியல. அதுனால பேசாம இருந்திட்டேன். இது உனக்குத் தெரிஞ்ச விஷயம் தானே! அதுக்கு என்ன இப்போ?’ என்றார்.

 ”இல்லப்பா... நீங்க பொய் சொல்றீங்க. நானும் அப்படித்தான் இது நாள் வரைக்கும், நம்பிட்டிருந்தேன், உண்மை தெரியற வரை.”

 ‘ உண்மையா.. என்ன உண்மை? நீ என்ன சொல்றன்னே எனக்கு ஒண்ணும் புரியல.

 உங்க பாட்டி காணாமப் போனதுக்கும் நீ இவரை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?!’ என்றாள் ஜானகி.

 ‘சம்பந்தம் இருக்கும்மா... சம்பந்தம் இருக்கு... பாட்டி காணாமப் போகல. காணாமப் போக வச்சிருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்’

 ‘எ... எ... என்ன சொல்ற நீ’ என்றார் வாய் குழறியவாறு விஸ்வநாதன்.

ஜானகியோ திகைத்துப் போய் ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘ஆமாம்பா, திடீர்னு என்னோட அத்தை, அதான் உங்க அக்கா, கனிஷ்கா ஏர்லைன் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. அது தெரிஞ்சதும் பாட்டிக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. அங்கயும் இங்கயும் ஓடறதும் எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் என் பொண்ணு, என் பொண்ணுன்னு கட்டிப் பிடிச்சுக்கறதும் அவங்க வழக்கமாப் போச்சு. எந்த டாக்டர்கிட்ட காண்பிச்சும் சரியாகல. நான் ஸ்கூல் லீவ்ல சேலம் ஹாஸ்டல்லேர்ந்து இங்க வர்றப்போவும் பாத்திருக்கேன். என்னையும் அப்படித்தான் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. பொண்ணு பொண்ணுன்னு கொஞ்சினாங்க. அவங்களுக்காக ரொம்ப பரிதாபப்பட்டிருக்கேன். அவங்களுக்கு சீக்கிரம் சரியாகனும் கடவுள்ட்ட வேண்டிக்கிட்டிருக்கேன்.

 ஆனா, திடீர்னு ஒருநாள் நீங்க போன் பண்ணீங்க. பாட்டி எங்கேயோ காணாமப் போயிட்டான்னீங்க. பேப்பர்ல, டி.வில விளம்பரம் பண்ணியிருக்காதகவும், போலீஸ்ல சொல்லியிருக்கறதாகவும் சொன்னீங்க. நானும் நம்பினேன். அப்புறம் பாட்டி எங்கேயோ போயிட்டா... கிடைக்கவே இல்லைன்னுட்டீங்க. அப்பவும் நான் நம்பினேன். ஆனா, அப்பா, இப்பத்தான் தெரியுது நீங்க எப்பேர்ப்பட்ட ஏமாற்றுக்காரர்னு. இப்படி நீங்க பொய் சொல்லுவீங்கன்னு நான் கனவுல கூட எதிர்பார்க்கல.’

 ‘அப்பா, நீங்க என்னை துரோகம் பண்ணிட்டேன்னு சொல்றீங்க... ஆனா நீங்கதான்பா துரோகம் பண்ணியிருக்கீங்க. அம்மா, நீ சொல்ற என்ன சுயநலவாதின்னு. ஆனா, நீதாம்மா உண்மையிலேயே சுயநலவாதி.” சொல்லிவிட்டுக் கதறினாள் ராதா.

 ஜானகியும் விஸ்வநாதனும் பிரமை பிடித்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.

 ’அப்பா... என்ன ஒரு கல் நெஞ்சம் இருந்திருந்தா பெத்த அம்மாவை யாருக்கும் தெரியாம கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய், பத்மநாப சுவாமி கோயில் வாசல்ல விட்டுட்டு வந்திருப்பீங்க.

அம்மா... என்ன ஒரு சுயநலம் இருந்தா பெத்த தாய்க்குச் சமமான மாமியாரை, அதுவும் மனநிலை சரியில்லாதவளை அந்த மாதிரி கோயில் வாசல்ல அநாதையா விட்டுட்டு வர்றதுக்கு சம்மதிச்சிருப்பே. சொல்லும்மா... சொல்லு... யார் சுயநலவாதி? சொல்லுங்கப்பா யார் துரோகி?’ - பட படவெனப் பொரிந்தாள் ராதா.

‘ அம்மா ராதா.. அது வந்து... அது வந்து...’ திக்கினார் விஸ்வநாதன்.

 ‘ உங்க அப்பா தான்...’ என்று இழுத்தாள் ஜானகி.

‘போதும்.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக்கறது. மொத்தத்துல ரெண்டு பேரும் சேர்ந்துதான் பண்ணியிருக்கீங்க... நீங்க பண்ணினது பெரிய பாவம். நல்ல வேளையா ரகு வீட்டுக்குப் போனேனோ எனக்கு உண்மை தெரிஞ்சது... ரகு அம்மா மட்டும் இல்லன்னா என் பாட்டி நிலைம என்ன ஆயிருக்கும்..’ என்று கண் கலங்கினாள் ராதா.

 ‘ அம்மா... அம்மா... இப்போ எங்க இருக்காங்க... நீ பார்த்தியா அவங்கள?’ கண்ணீர் மல்கக் கேட்டார் விஸ்வநாதன்.

 ‘பார்த்தேன். பார்த்தேன். பாட்டிய ரகு வீட்டுல தான் பார்த்தேன். ஆமா, ரகுவோட அம்மா, அப்பா கேரளாவைச் சேர்ந்தவங்க. ரகு அம்மா எதேச்சையா பத்மநாப சுவாமி கோயில் போயிருக்கறப்போ நம்ப பாட்டியப் பார்த்திருக்காங்க. ஒருவேளை சாப்பாடுக்காக அங்க இங்கயும் அலையறதையும், எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் கட்டிப்பிடிக்க போறதையும், அதுனால அவங்க பாட்டியை அடிச்சுத் துரத்தறதையும் பார்க்க அவங்களுக்கு சகிக்கல. உடனே அவங்களுக்கு அவங்க அம்மாவோட ஞாபகம் வந்திருச்சி. அவங்களுக்கும் சித்த பிரமை வந்துதான் காலம் ஆனாங்களாம். அதுனால நம்ம பாட்டிய தன்னோட வீட்டுக்குக் கூட்டி வந்து, ரகுவோட அப்பா டாக்டர்ங்கறதுனால வீட்டுல வச்சே சிகிச்சை பண்ணியிருக்காங்க. அவங்களும் ஓரளவுக்கு குணமாகியிட்டு வர்றப்போ ரகுவோட அப்பா காலமாயிட்டார். அப்புறம் எல்லோரும் மெட்ராஸுக்கே வந்துட்டாங்க. பாட்டியையும் கூடவே கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. ரகுவோட வீட்ல தான் பாட்டி இருக்காங்க’ என்றாள் ராதா விசும்பலுடன்.

 ‘ அய்யோ... அய்யோ... உண்மைதான்மா... நாங்க சுயநலத்தினாலயும், போலி அந்தஸ்து கௌரவத்துனாலயும் பெரிய தப்பு பண்ணிட்டோம். என்னை மன்னிச்சிடும்மா, மன்னிச்சிடு. சார்.. ரகு சார்... மன்னிக்கணும் மாப்பிள சார்... எங்கள மன்னிச்சிடுங்கோ. இத்தனை வருஷம் எங்க அம்மாவைக் கண்ணும் கருத்துமா பாத்துண்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ். நாங்க உடனே அவளப் பாக்கணும்... அவ கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கணும். ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாவம் போகுமா. பெத்த தாயைப் பிச்சை எடுக்க வச்சுட்டேனே.. அய்யோ.. அய்யோ. அரற்றினார் விஸ்வநாதன்.

‘மன்னிச்சிடுங்கோ.. மன்னிச்சிடுங்கோ. தெரியமப் பண்ணிட்டோம்’ அரற்றினாள் ஜானகி. எல்லோரும் காரில் ஏறிக் கொள்ள கார் ரகுவின் வீடு நோக்கி விரைந்தது.

**********

 ரகுவின் அம்மா மாலதி எல்லோரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். ஜானகியும் விஸ்வநாதனும் துடித்துக் கொண்டிருந்தனர் விசாலத்தைப் பார்க்க. உள்ளறையில் பஜ கோவிந்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. சுவரில் சாய்ந்து கண் மூடி பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜானகி.

பேச்சுக்குரல் கேட்கவும் கண் விழித்தாள். ‘வாப்பா ரகு... வாம்மா மாலா... யார் இவாள்லாம்’ என்றாள்.

‘ அம்மா... அம்மா என்னைத் தெரியலையாம்மா... நான் தான் உன் புள்ள விஸ்வநாதன். இது உன் மருமக ஜானகி. இதோ மூத்தவ ராதா. இளையவ சீதா. ராதாவத் தான் நம்ம ரகுவுக்குக் கொடுத்திருக்கு. இப்ப தான் கல்யாணம் ஆச்சூ. உங் கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்திருக்கோம். அம்மா, பழசைல்லாம் மறந்திடும்மா.. எங்களை மன்னிச்சிடும்மா.. வாம்மா நம்ம வீட்டுக்குப் போவோம்’ என்றார் விஸ்வநாதன் குரல் தழு தழுக்க ஜானகியின் காலில் விழுந்தவாறே!.

 ‘ எல்லாரும் அமோகமா ஷேமமா இருங்கோ... ஆமா, நீங்க யாரு...?’ என்றாள் ஜானகி, விஸ்வநாதனைப் பார்த்து.

 ‘ அய்யோ அம்மா, எங்கள சுத்தமா மறந்து போயிட்டியா... நான் தான் உன் பிள்ள விஸ்வநாதன். உன்னை வீட்ல வச்சிக்கத் துப்பில்லாம, அந்தஸ்து, கௌரவம்னு பார்த்து கண்காணாம கோயில்ல போய் விட்டுட்டு வந்தவன். இதோ, இவ ஜானகி. உன் மருமகள். உன்னைக் காப்பாத்தத் துப்பில்லாம நான் செய்த தப்புக்கு உறுதுணையா இருந்தவ... இப்பவாச்சு எங்களை அடையாளம் தெரியுதா?’ என்றார் விஸ்வநாதன் சோகமாய்.

 ‘ நன்னா இருக்கு போங்கோ. என் பிள்ளை, மருமகள், மகள்னு எல்லோரும் கனிஷ்கா பிளைட் விபத்துல எப்பவோ செத்துப் போயிட்டா... இதோ.. இந்த மாலாவும் ரகுவும்தான் எங்கேயோ பார்த்து என்னைக் கூட்டிண்டு வந்து பொண்ணாவும் புள்ளையாவும் இருந்து கவனிச்சிண்டிருக்கா... நீங்களாவது... என் பிள்ளையாவது... சுத்த பேத்தல். போய் ஆக வேண்டிய கல்யாண வேலையக் கவனிங்கோ. நான் ஸ்லோகம் சொல்லணும்’ சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டாள் ஜானகி.

 ராதா கண்ணீருடன் விசும்பிக் கொண்டிருக்க விஸ்வநாதனும் ஜானகியும் பிரமை பிடித்துப் போய் நின்று கொண்டிருந்தனர்.

*************************************

2 comments:

மணி said...

கதை நல்லா இருக்கு நல்ல ப்ளோ
//அவர் ரயில்வேயில் டாக்டராக இருந்தவர். திடீரென்று மாரடைப்பில் காலமாகி விட்டார். அப்போது ரகுவுக்கு 17 வயது. +2 முடித்திருந்தான். //
//நான் காலேஜ் லீவ்ல சேலம் ஹாஸ்டல்லேர்ந்து இங்க வர்றப்போவும் பாத்திருக்கேன். என்னையும் அப்படித்தான் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. பொண்ணு பொண்ணுன்னு கொஞ்சினாங்க. அவங்களுக்காக ரொம்ப பரிதாபப்பட்டிருக்கேன். //

லாஜிக் இடிக்குதே ரகு வின் 17 வயசுல அப்பா இறந்துவிட்டார். இவளின் கல்லூரிபருவத்தில் பாட்டி பைத்தியம் அதுக்கு அப்புறம் தானே தொலைந்து போனார்? பிறகெப்படி ரகுவோட அப்பா வைத்தியம் செய்திருக்க முடியும். மேலும் ரகு/ராதா வய்து இடிக்குது.
குற்றம் சொன்னமைக்கு மன்னிக்கவும்.

கதை நல்லா இருந்தது.

அரவிந்த் said...

உண்மைதான். பள்ளிப் பருவம் என்று மாற்றி விட்டால் சரியாகி விடும் இல்லையா? எழுத நினைத்ததும் அதுதான். எப்படியோ ஹாஸ்டல் என்றாலே காலேஜ் என்ற வார்த்தையும் சேர்ந்தே வந்து விடுகிறது.

பிழையைச் சுட்டியமைக்கு நன்றி!