Sunday, May 31, 2009

கம்பனின் கவிச்சுவை

’கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று பலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. கம்பனின் கவித்திறத்திற்கும் உவமை நயத்திற்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொற்களை எடுத்தாளும் திறத்திற்கும் நாம் பல்வேறு பாடல்களை உதாரணம் காட்டலாம்.

இதோ, பால காண்டம். எழுச்சிப் படலம்.

சிவதனுசை முறித்து இராமன் வெற்றி கொண்டான் என்ற செய்தி தசரதருக்கு வந்து சேருகிறது. உடனே தனது படை பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்பட ஆயத்தமாகிறார் அவர். அவர் தம் சேனைகள் ஊழிக்காலத்தில் ஓங்கிப் பொங்கும் கடல் போல ஒன்று சேர்ந்து புறப்பட ஆரம்பித்தன. தன் படைக்குழுவினரின் இறுதியாகத் தான் செல்லலாம் என தசரதர் வெகு நேரமாகக் காத்திருக்கிறார். காத்திருப்பவர், வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

படையின் முதல் வரிசை மிதிலையைச் சென்றடைந்து விட்டது. ஆனால் இறுதி வரிசை இன்னமும் அயோத்தியைத் தாண்டவில்லை. அந்த அளவிற்கு வரிசை நீண்டிருந்தது என்று வர்ணிக்கிறார் கம்பர். அதுவும் எங்கெங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாம். மேலே இருந்து உழுந்து (உளுந்து) போட்டால் கூடக் கீழே விழாதாம்.

அதனை அவர் மிக அழகாக,

" உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான் எழுந்திலன் எழுந்து இடைப் படரும் சேனையின் கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

என்று விளக்குகிறார் பாடலில்.

எள் போட்டால் எள் விழ இடமில்லை என்பது தான் வழக்கில் இருக்கும் சொல். ஆனால் கம்பர் அதனைப் பயன்படுத்தாமல் அதற்கு மாறாக உழுந்து போட்டால் விழ இடமில்லை என்று கூறியிருக்கிறார். ஏன் தெரியுமா?

அவர்கள் அனைவரும் செல்வது இராமனின் மணவிழாவைக் காணவும், அதன் வெற்றியைக் கொண்டாடவும் தான். அது ஒரு மங்கல நிகழ்ச்சி. ஆனால் எள் என்பது அமங்கல நிகழ்ச்சிகளில், குறிப்பாக நீத்தார் கடனுக்கான சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியது. அதனை ஒரு மங்கலகரமான நிகழ்வுக்காகச் செல்லும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக மிக நுணுக்கமாக கம்பர் "எள் விழவும் இடம் இல்லை" என்று சொல்லாமல் "உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்" என்று மிக அழகாகப் பயன்படுத்தி உள்ளார்.

அதே சமயம் இராமனின் அம்புகளால் துளைக்கப்பட்டு இராவணன் வீழ்ந்து கிடக்க, அவனை அணுகிப் புலம்பும் மண்டோதரியின் கூற்றாக,

"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி"

என்று கூறுமிடத்தில் "எள்ளிருக்கும் இடமின்றி" என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி, அதன் அமங்கல நிகழ்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் இராவணனைத் துளைத்த இராம பாணமானது, சீதையின் நினைவு மேலும் எங்காவது உள்ளே இருக்குமோ என்று உடல் முழுவதும் துளைத்ததாகக் குறிப்பிடுள்ள நயம் நாம் வியந்து போற்றத்தக்கது.

கம்பனின் இந்தச் சொல்லாற்றல் நாம் என்றும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதல்லவா?

கம்பனைப் போற்றுதூம் கம்பனைப் போற்றுதூம்
கவி ஆற்றலில் ஈடின்மையால்...

1 comment:

Anonymous said...

கம்பனிலிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் நண்பரே! கட்டுரை மிக நன்று. வாழ்த்துக்கள்.

அன்புடன்
அசோகன்