“ப்போப்பு.. ப்போப்பு..” கத்திக் கொண்டே ஒரு தள்ளு வண்டிக்காரன் கடந்து போகிறான்.
“சாமி, எதுனா போட்டுக் கொடு சாமி! நீதான் பஸ்ட் சவாரி” என்கிறான் ஒரு ஆட்டோக்காரன்.
“அம்மா, இங்க பாரும்மா! இவன் கோலம் போடவிடாம என்னைத் தடுக்கறான்மா” புகார் சொல்கிறாள் ஒரு சின்னப் பெண்.
“ஏய்! சீக்கிரம் போ, பைப்பில தண்ணி வருதான்னு பாரு!” யாரோ ஒரு பெண், யாரையோ விரட்டிக் கொண்டிருந்தாள்.
‘நாயர், ஸ்ட்ராங்க்கா ஒரு டீ'. வாயில் சிகரெட் புகையுடன் ஒரு வாலிபன்.
“ஏய், ஊருக்குப்போனதும் மறக்காம ஆபிசுக்கு போன் பண்ணு என்ன?” என்கிறான் ஒரு ஆண், மனைவியை ரிக்ஷாவில் ஏற்றிவிட்டுவிட்டு.
“ஏய். எருமை எழுந்திரு. இன்னும் என்ன தூக்கம்!” ஒரு தாய் மகளை அதட்டுகிறாள்.
ஒரு குடுமி வைத்த பையன், மொட்டை மாடியில் சூரியனைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தவாறு குனிந்து, நிமிர்ந்து, உட்கார்ந்து, எழுந்து ஏதோ செய்கிறான்.
எங்கோ ஒரு குழந்தை வாய் ஓயாமல் அழுது கொண்டிருக்கிறது.
உற்சாகத்துடன் கல்லூரிக்குப் புறப்படுகிறார்கள் மாணவர்கள்.
நாடார், கடையைத் திறந்து, சாமிபடத்துக்கு மாலை போட்டு, ஊதுபத்தி காட்டிக் கொண்டிருக்கிறார்.
எங்கோ ஒரு அய்யர் சத்தமாக மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
“ஏதுடா இது வம்பா இருக்கே” அவிழ்ந்த குடுமி வேகமாக ஆட ஒரு மனிதர் மற்றொருவரிடம் விவாதித்துக் கொண்டே தெருவில் நடந்து செல்கிறார்.
“ச்சே, இந்த சாக்கடை வேற சனியன் அடிக்கடி அடைச்சுக்குது, அதுவும் ஆபிஸ் போற நேரத்தில” அலுத்துக் கொண்டே, நீளமான கம்பியால் சைபனைக் குத்திக் கொண்டிருக்கிறார் ஒரு கண்ணாடி மனிதர்.
‘கோல மாவு' ‘கோல மாவு' கத்திக் கொண்டே சைக்கிளில் செல்கிறான் ஒரு மனிதன்.
ஷஷ்டியை நோக்க சரவண பவனார்...... பாடல் எங்கோ ஒலிக்கிறது.
“அம்மா, பால்” கூவுகிறான் ஒரு சின்னப்பையன்.
யாரோ ஒரு மனிதர், எங்கோ காறிக் காறித் துப்பிக் கொண்டிருக்கிறார்.
தேவையில்லாமல் ‘ஹார்ன்' அடித்தவாறே பைக்கில் ஒருவன் வேண்டுமென்றே அங்கும் இங்கும் கடந்து செல்கிறான். ஒரு ரெட்டைச் சடை போட்ட பெண் மாடியிலிருந்து எட்டிப் பார்க்க, இவன் கை உயர்த்திப் புன்னகைக்கிறான். அவளும் சுற்று முற்றும் பார்த்து விட்டுக் கையசைக்கிறாள்.
‘நாதா தனுமனிசம்' நிறைய பெண்கள் கோரசாக சுருதி பிசகாமல் பாடிக் கொண்டிருக்கின்றனர்.
‘ம்மா!' மாடு இரண்டு முறை கத்திவிட்டு நடு ரோட்டில் சாணம் போட்டுவிட்டுச் செல்கிறது.
நான் கயிற்றை உத்தரத்தில் மாட்டி முடிச்சை இறுக்கிப் பார்க்கிறேன்.
- 1981, பிப்ரவரி 26, வியாழக்கிழமை, திருவல்லிக்கேணியில் ஒரு காலைப் பொழுது...
3 comments:
ஒவ்வொன்றும் யதார்த்தமான விசயங்கள்...
தினமும் காலை பொழுதுகளில் உன்னிப்பாக கவனத்தால் மட்டுமே நினைவில் இருப்பவை இவை....
மிகவும் அருமையாக கோர்க்கப்பட்டிருக்கின்றன...
சோகங்களை சுமக்கும் அந்த கடைசி வரியை பற்றி சொல்வதற்கு ஒன்றும் தோன்றவில்லை...
தங்கள் கருத்திற்கு நன்றி
Post a Comment