Monday, April 23, 2012

சில நேரங்களில் சில சந்திப்புகள் - 1


”எப்ப வரட்டும்” என்றேன் தொலைபேசியில்

“காலையில் ஒரு 10 மணிக்கெல்லாம் வந்திடுங்க. அப்புறமா நான் கொஞ்சம் வெளில போக வேண்டியிருக்கு. அதுனால கரெக்டா வந்திருங்க” என்று சொல்லி தெரு, வீட்டின் அடையாளம் சொல்லி போனை வைத்தார்,

மறுநாள் காலை சற்று பதைபதைப்புடன் முன்னதாகவே சென்று, வழி சரியாகத் தெரியாததால் ஆட்டோவில் ஏறி அவர் குறிப்பிட்ட தெருவில் போய் இறங்கினேன். வேகமாகவும் சற்றே பதட்டமாகவும் இருந்ததில் அவர் சொன்ன அடையாளங்களைத் தவற விட்டுவிட்டு தெருவின் முனையில் போய் நின்றேன்.

கைப்பேசியால் அவரை அழைத்தேன்.

“சார் வந்துட்டேன். நீங்க சொன்ன ஸ்ட்ரீட்டோட முனைலதான் இருக்கேன். எப்படி வர்றது?”

“அடடா.. தாண்டிப் போயிட்டீங்க போல.. பின்னாடியே வாங்க. ரெண்டாவது ஃப்ளாட். மாடி. நான் சரியா அடையாளம் சொல்லியிருந்தேனே. நீங்க கவனிக்கலையா?” என்றார். அதில் சற்றே சலிப்பு தெரிந்தது.

வந்தவழியே வந்ததில் மாடியில் அவர் தெரிந்தார். ”மேல வாப்பா” என்றார்.

விரைந்தேறுவதற்குள் வாசல் கதவைத் திறந்து நின்று கொண்டிருந்தார்.

“சாரி” என்று நான் சொன்னதைப் பொருட்படுத்தாமல், “எதிலே வந்தீங்க..” என்றார்.

“ஆட்டோவில்”

“ச்ச்ச்ச்ச்” என்றார்.

”பக்கத்துலதான. பஸ்ல வந்திருக்கலாமே! ஏன் காசை வேஸ்ட் பண்றீங்க..” என்றார்.

அப்போதுதான் அவரை நான் முழுமையாகப் பார்த்தேன்.

மிக ஒல்லியான உடல். வயதின் மூப்பால் தளர்ந்து போயிருந்தது. ஆனாலும் நடையில் ஒரு வேகம் இருந்தது.

அறைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். தான் ஒரு மிடறு தண்ணீரை விழுங்கியவர் “இது வெந்நீர்” என்றவாறே, எனக்கு வேறு ஒரு வாட்டர் பாட்டிலைத் தந்தார்.

அந்த பத்துக்குப் பத்து அறை அவரைப் போலவே மிக எளிமையாக இருந்தது. ஒரு சாதாரண நாற்காலி. நீண்ட எழுது மேசை. மூலையில் லேப்-டாப். சுவரில் அன்னை, ரமணர் காலண்டர் படம். மற்றபடி அந்த அறை முழுக்க புத்தகங்கள்... புத்தகங்கள்...

என்னைப் பற்றி விசாரித்தார். ”சம்பளம் போதுமானதா இருக்குதா?” என்றார்.

சொன்னேன்.

”வேற என்ன பண்றீங்க” என்றார்...

சொன்னேன்.

”பரவாயில்லையே!” என்று ஆச்சரியம் காட்டியவர், ”ம்... சொல்லுங்க...” என்றார்

.நான் பேப்பரை வெளியே எடுத்தேன்.

(தொடரும்)

Saturday, January 15, 2011

புத்தகச் சந்தையும் புண்ணிய லோக ஆவிகளும் - பகுதி 3

இந்தப் புத்தகச் சந்தையில் நான் வாங்கிய சில புத்தகங்களின் லிஸ்ட் (எப்போது படித்து முடிப்பேன் என்பது தெரியாது)

கிழக்கு
நம்பக் கூடாத கடவுள் 
குமரிக் கண்டம்
அலகிலா விளையாட்டு 
மகாத்மா காந்தி கொலை வழக்கு 
ஹிந்துத்வம் 

உயிர்மை
தேகம்
சரசம் சல்லாபம் சாமியார்
என் இலக்கிய நண்பர்கள் 

காலச்சுவடு
மந்திரமும் சடங்குகளும் 
நித்யகன்னி
பிரமிள் 

வ.உ.சி. நூலகம்
அபிதா 

மீனாட்சி புத்தக நிலையம்
அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு

விகடன்
பல்வேறு உலகில் என் பயணம்

நக்கீரன்

நான் அறிந்த ஓஷோ 
பனிமனிதன் 

வானதி
மர்ம மாளிகையில் பலே பாலு

விஜயா
கருடன் காத்த புதையல்

சதுரம் பதிப்பகம்
குருவே சரணம்

ஆழி பப்ளிஷர்ஸ்
முள்


மத்ததெல்லாம் பிரிச்சு பார்த்த பின்னாடி முடிஞ்சா இதுல எழுதப் பாக்குறேன். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்.


*********************


Friday, January 14, 2011

புத்தகச் சந்தையும் புண்ணிய லோக ஆவிகளும் - பகுதி 2




34வது புத்தகச் சந்தை பற்றிய எனது எண்ணங்கள்

நான் சென்ற வரையில் பயங்கரமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஓரளவிற்கு நல்ல கூட்டம் என்று சொல்லலாம். ஓகோவென்று வியாபாரம் நடந்திருக்கிறதோ இல்லையோ இதுவரை ஓரளவிற்காவது நடந்திருக்கும் என எண்ணுகிறேன்.

கழிவறைகள் சரியில்லை; நடக்கும் போது கால்கள் அமுங்குகின்றன; ஏ.டி.எம் வசதி இல்லை. க்ரெடிட் கார்டு வசதிகள் சரியாக இல்லை – இவையெல்லாம் எல்லோரும் குறிப்பிடும் பொதுவான குறைகள். அடுத்த முறையாவது இவை களையப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் எனக்கென்னவோ க்ரெடிட் கார்டு வசதிகள் எல்லாம் நம் தமிழ்ப் பதிப்பாளர்கள் வருங்காலத்திலும் பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே! அவர்கள் வசிக்கும் ’காலமே’ வேறு. இதற்கு வேறு ஏதாவதுதான் மாற்று ஏற்பாடு கொண்டு வர வேண்டும்.

மிக மிக மோசமாக இருப்பது கழிவறை வசதிகள் தான். ஒவ்வொரு ஆண்டு சொல்லியும் இதில் முன்னேற்றமில்லை. இது மிக முக்கியமானது என்ற அக்கறை ஏன் யாருக்கும் இல்லை என்பது புரியவில்லை. இந்த விஷயத்தில் பபாஸிக்கு என் கடுமையான கண்டணங்கள். அடுத்த வருடமும் இப்படியே தான் செய்ய முடியும் என்றால் அதற்குப் பேசாமல் முதல்வரிடம் பேசி (??) தீவுத் திடலுக்கு புத்தகக் காட்சியை மாற்றி விடலாம். எந்தப் பிரச்னையும் இருக்காது. அரங்குகளும் பெரிதாக, நீளமானதாக இருக்கும். மக்கள் நடக்கவும் நிறைய இடவசதி இருக்கும். நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் வந்து செல்வது மிக எளிதாக இருக்கும். ஒரு கோடி கொடுத்தவரிடம் கோடி காட்டினால் செய்யாமல் இருப்பாரா என்ன?



நான் அவதானித்த சில விஷயங்கள்

வைதிக ஸ்ரீயில் மடிசார்ந்து அணிந்து ஒரு அம்மணி இருப்பார். தற்போது நான் சென்ற நாட்களில் அப்படி யாரையும் காணவில்லை.

ஜோதிடம், சமையல், தன்னம்பிக்கை, அமானுஷ்யம், சித்தர்கள் என்று நிறைய நூல்கள் வருகின்றன. ஆனால் நகைச்சுவை நூல்கள் எதுவுமே இல்லை. அப்படி இருப்பவையும் ஒரே ‘கடி’யாக இருக்கின்றன.

விகடன் இந்த தடவை ஒரே ஸ்டால் மட்டுமே எடுத்திருந்தது.

கிழக்கு ஒரே ஸ்டால் – ஆனால் பெரிய ஸ்டால்.

நக்கீரனை 2 அல்லது 3 இடங்களில் பார்த்த ஞாபகம்.

தமிழினியையும் கூட 2 இடங்களில் பார்த்தேன்.

மீனாட்சி புத்தக நிலையம், மீனாட்சி புக் ஹவுஸ் இரண்டும் ஒன்றா வெவ்வேறா என்று தெரியவில்லை.

இத்தனை முறை அலைந்தும் கூட வம்சி புக் ஹவுஸையும், கல்கி ஸ்டாலையும் மிஸ் செய்து விட்டேன்.



சில சுவாரஸ்யங்கள்...

நான் சென்ற ஒவ்வொரு கடையிலும் அவ்வப்போது என்னைக் கடந்து சென்ற ஒருவர் ஹனுமத்தாஸனின் ’நாடி சொல்லும் கதைகள்’ எங்கே கிடைக்கும் என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். பொறுக்கமாட்டாத நான் அவரை பத்திரமாக ’அம்மன் பதிப்பகம்’ செல்ல வழிகாட்டினேன்.

இலக்கியப் புத்தகமாகத் தேடித் தேடி ஒருவர் வாங்கிக் கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிந்தது அவர் பாடகர் சஞ்சய் சுப்ரமணியம் என்று.

யுவன் சந்திரசேகரின் புதுப்படைப்புகள் எதுவும் இந்தப் புத்தகச் சந்தைக்கு வரவில்லை. இது எனக்கு ஒரு மிகப் பெரிய குறை.

பொட்டு வைத்திருந்த, காவி உடை அணிந்த, ஒல்லியான இளைஞர் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். நித்தியானந்தாவோ என்று சற்று ஐயப்பட்டு உற்றுப் பார்த்தேன். அவர் இல்லை. அவரது ’அல்டாப்பு’ ஸ்டாலையும் இந்த முறை என்னால் காண முடியவில்லை. நிம்மதி.

உயிரிமையில் சாருவின் தேகமும், சரசம், சல்லாபம், சாமியாரும் ஹாட் கேக் ஆக விற்பனை ஆவதாக அறிந்தேன். நான் பார்த்த நாட்களில் சாரு ’அழகான’ சட்டை போட்டுக் கொண்டு அழகாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பட், அவரை ஆழமாகக் கவனித்த வரையில் எப்போதும் ஏதோ ஒருவித பதட்டத்தில் இருப்பவர் போலவே இருந்தார். (நான் கொஞ்சம் பாடி லேங்குவேஜ் கற்றுக் கொண்டிருக்கிறேன், ஒரு காலத்தில்) அவரது பதற்றத்திற்குக் காரணம் புரியவில்லை. தமிழினியில் நாஞ்சில் நாடன் அமர்ந்திருந்தார். பலரும் அவரது சாகித்ய அகாதமி விருது பெற்ற சூடிய பூ சூடற்க வாங்கி கையெழுத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர். பேசியபடியே சிலருக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் விருது நாயகர். 



கிழக்கில் உலோகம், ராஜராஜ சோழன், தி.இயக்க வரலாறு என்று மாறி மாறி ஹிட் லிஸ்டில் உள்ளதாக அறிந்தேன்.

’இட்லி வடை’ யார் என்று கண்டு பிடிக்க முயன்று நான் சந்தேகப்பட்ட ஒருவரிடம் ‘இட்லி வடை’ என்றேன், ”ஆமாம் காண்டீனில் கிடைக்கலாம். பட் சீக்கிரம் போய்ப் பாருங்கள்” என்றார் மிகவும் சீரியஸாக. நானும் உடனே சீரியஸாக அவ்விடம் விட்டு நகர்ந்து மேக தூதனுக்குள் நுழைந்தேன். தொப்பி போட்டிருந்தவர் அன்போடு வரவேற்றார். அந்த வரவேற்பில் மனம் குளிர்ந்துபோய் சில புத்தகங்கள் வாங்கினேன்.

பொதுவாக எல்லா பதிப்பகங்களிலுமே புதிய புத்தகங்களின் விலை எல்லா ஆண்டுகளையும் விட இந்த முறை நிறையவே கூடுதல்தான். தாளின் விலையேற்றம், சந்தைப்படுத்துதல் என்று பல செலவுகளைக் காரணமாகச் சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு எழுத்தாளர்களின் ராயல்டி உயர்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.

தமிழில் பெயர் வைத்தால் சினிமாப் படங்களுக்கு வரி விலக்கு, மண்ணாங்கட்டி என்றெல்லாம் சலுகை செய்யும் அரசு, இந்த தமிழ்ப் புத்தகங்களுக்கு ஏன் ஏதாவது சலுகைகள் வழங்கக் கூடாது. தாள்களை சலுகை விலையில் அல்லது மிகக் குறைந்த விலையில் வழங்கலாம் என்பது என் கருத்து.

பெண்கள் கூட்டம் அதிகம் காணப்படவில்லை. பெண்களிடம் வாசிப்பு ஆர்வம் குறைந்து விட்டதுதான் காரணமா, அல்லது கூட்டத்தில் திண்டாட வேண்டாம் என்று வரவில்லையா என்பது தெரியவில்லை.

புத்தகச் சந்தைக்குக் கூட்டம் குறைவாக வருவதற்கு முக்கிய காரணம் இந்தக் குளிரும் அதிகப் பணியும் தான் என்பது என் திடமான கருத்து. அதனால் தான் 7.00 மணிக்கு மேல் அதிகமாக வர வேண்டிய வாசகர்கள் கூட்டம் படிப்படியாகக் குறைந்து விடுகிறது. இயற்கை செய்யும் சதி.

இனி நான் வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட் நாளை.

******************


Thursday, January 13, 2011

புத்தகச் சந்தையும் புண்ணிய லோக ஆவிகளும்




                                         நுழைவாயில்

34வது புத்தகச் சந்தை தொடங்கிய நாள் முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். விசிலடித்து விரட்டும் வரை இருந்து தினமும் இரவு வீடு திரும்ப தாமதமானதால் இன்று தான் இந்தப் பதிவு. புத்தாண்டின் முதல் பதிவே புத்தகச் சந்தை பற்றியதாக இருப்பது மகிழ்ச்சி. (சுறுசுறுப்புத் திலகமாக்கும்)

கேமரா கைவசம் கொண்டு போகாததால் புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லை. செல்போனில் சில படங்கள் எடுத்தேன் அவ்வளவுதான். அதுவும் அரங்கிற்குள் இர்ண்டு கைகளிலும் புத்தக மூட்டையைச் சுமந்து கொண்டிருந்ததால் படம் ஏதும் எடுக்க இயலவில்லை. வந்த அழைப்பையும் எடுத்துப் பேச இயலவில்லை.


                                         வெளியே

இரண்டாம் நாள் பாரா சொன்னது போல வலது கைப்பக்கமாகவே சென்று பின் மீண்டும் திரும்பி இடதுகைப் பக்கமாகவே வந்ததில் கால் வீங்கி விட்டது. அதனால் அடுத்த நாள் செல்லும் போது அப்படிச் செல்லாமல் எதிரும் புதிருமாகச் செல்ல ஆரம்பித்தேன்.

இரண்டு நாள் முன்பு மதியம் நான் சென்ற போது பெரியவர் முக்தா சீனிவாசன் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி, அடுத்துள்ள ரத்தின நாயக்கர் சன்ஸில் நுழைந்தேன். அங்கே அபூர்வமான சில புத்தகங்கள் தென்பட்டன. புறாவை மறைய வைத்தல், தண்ணீரைக் காணாமல் போகச் செய்தல், நெருப்பை விழுங்குதல், சேவல் சண்டை என்று இன்னும் என்னென்னவெல்லாமோ உட் தலைப்புகளில் ஒரு ’ஜாலம்’ பற்றிய புத்தகத்தைப் பார்த்தேன். விலை ரூ. 30/- என்று போட்டிருந்தார்கள். வாங்கலாமா என்று யோசித்தேன். சுவாரஸ்யத்திற்குப் படிக்கலாமே தவிர வேறு பலன் எதுவும் இல்லை என்பதால் நகர்ந்து விட்டேன். அதுமாதிரி மாஜிக், மலையாள மாந்த்ரீகம், தந்திரம் என்று அங்கே நிறைய புத்தகங்கள் இருந்தன.

அடுத்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். நான் சென்ற அனைத்து நாட்களிலுமே உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு, விகடன், நக்கீரன், கிரி ட்ரேடிங், அல்லயன்ஸ் போன்றவற்றில் நல்ல கூட்டம் இருந்தது. வானதி, பழனியப்பா, ராமகிருஷ்ண மடம், மணிவாசகர், விஜயா, மீனாட்சி புக்ஸ் போன்றவற்றிலும் சுமாரான கூட்டத்தைப் பார்த்தேன். மணிவாசகரில் சங்க இலக்கிய, இலக்கணங்கள் எல்லாவற்றையும் பெரிய, முழுமையான தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனந்தநிலையத்தில் புத்தகங்களோடு நிறைய விசிடி, டிவிடிக்களையும் விற்றுக் கொண்டிருந்தனர். ப்ரேம் செய்யப்பட்டிருந்த 3டி போட்டோக்களை சில பேர் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் எடுத்துப் பார்த்த போட்டோவில் விநாயகர் உருவம் கண்ணுக்குத் தெரிந்தது. எதிரே பாரா மெல்லமாக நடந்துப் போய்க் கொண்டிருந்தார். ஒரு ’ஹலோ’ சொல்லலாம் என்று பார்த்தால் எங்கோ, எப்படியோ ’அந்தர் த்யானம்’ ஆகி விட்டார்.

பின் ’பொதிகை’ அரங்கு சென்று வேளுக்குடியின் சி.டி/டி.வி.டி வந்து விட்டதா என்று கேட்டு, இல்லை என்றதும் பெயர் பதிந்து விட்டுப் போனேன்.

நக்கீரனில் ஓஷோவின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிவிட்டு வெளியே வந்து பக்கத்து சந்தில் திரும்பிய போது, திடீரென பத்ரி தோன்றினார். கன்னத்தில் போட்டுக் கொள்ளலாம் என நினைத்து, பதற்றத்தில் இரண்டு பைகளையும் கீழே போட்டு விட்டு ஒரு ஹலோ மட்டும் சொன்னேன்.

பேச்சு ஸ்பெக்ட்ரம்மில் ஆரம்பித்து, அப்படியே சித்த மருத்துவத்திற்குச் சென்று, கொஞ்சம் அவதானம் பக்கம் நகர்ந்து, ப்ரெய்ன் சிஸ்டம், பங்ஷனுக்கு தாவி, அப்படியே மைண்ட் ரீடிங், தாட் ரீடிங் என்று போய் இறுதியாக ஜோதிடத்தில் நிலை கொண்டது. தனது தந்தைக்கு ஜோதிடம் தெரியும் என்றும், அவர் ஜோதிடம் கற்றுக் கொண்டவர் என்றும் கூறினார் பத்ரி. ஒருவர் இறக்கும் தேதியை மிகச் சரியாகக் கணித்துச் சொன்ன ஜோதிடர்கள் பற்றிக்கூடத் தான் அறிவேன் என்றெல்லாம் சொன்னவர், ஆனால் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொன்னது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்து விட்டு எஸ்கேப். அவரும் அன்றைய விழாவுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததால் ஜாலியாக (?) நகர்ந்து விட்டார்.


                                         கலையரங்கத்தில் 

ஆழி பதிப்பகத்தில் பேயோனின் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, சில பக்கங்களைப் படித்துப் பார்த்து ஒன்றுமே புரியவில்லையே, வாங்கலாமா, வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது பேயோனே கண்ணில் பட்டார். அழகான ட்ரௌஸரும், வெண்மை நிற பனியனும் அணிந்திருந்தார். (அவர் தானே பேயோன்?) நான் மீண்டும் ’ஹலோ’ சொல்ல நினைப்பதற்குள் யாரோ அன்பர்கள் குழு அவரைக் கடத்திக் கொண்டு போய் விட்டது. புத்தகப் பை கனம் மிகுதியாகச் சேர்ந்து விட்டதால் என்னால் அவரைப் பின் தொடர முடியவில்லை.

அப்புறம் மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றி வந்ததில் புதுகைத் தென்றல் அருகே நல்லியைப் பார்த்தேன். அவருக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு, அங்கே நின்று கொண்டிருந்த திருப்பூர் கிருஷ்ணனுடனும், இலக்கியவீதி இனியவனுடனும் சிறிது நேரம் ‘நாட்டு நடப்பை’ப் பற்று உரையாடிக் கொண்டிருந்தேன்.  கிருஷ்ணன் நம்பியின் சகோதரர் கிருஷ்ணன் வெங்கடாசலமும் அங்கே இருந்தார். (கூடு இணைய தளத்தில் இலக்கியத்திலும்  திரையிலும் சாதனை படைத்த எழுத்தாளர்களைப் பற்றி எழுதியவர்). எழுத்தாளர் ஷங்கர நாராயணன் வந்தார். கடற்கரயும் பாலாவும் வேக வேகமாக எங்கோ கடந்து போனார்கள்.

புதிய நூல்களைப் பொறுத்தவரை கிழக்கில் வெளியாகி இருக்கும் பா.ராவின் ’கொசு’ என்னைக் கவர்ந்தது. ’கொசு’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று அறிய ஆவல். ஆனால் அலகிலா விளையாட்டு வாங்கியதால் ’கொசு’ வாங்கவில்லை. ஆனாலும் 25% டிஸ்கவுண்ட் கூப்பன் கொடுத்திருப்பதால், சாவகாசமாக தி.நகர் ஷோரூமில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

சரி, இனி தலைப்பிற்கு வருகிறேன்.

கிழக்குக்கு ஸ்டாலுக்குப் பக்கத்தில்தான் ’மேகதூதன் பதிப்பகம்’ ஸ்டால் உள்ளது. அதன் உரிமையாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன். இவர் ஆவியுலக ஆராய்ச்சியாளர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமானுஷ்ய ஆராய்ச்சிகளில்ல் ஈடுபட்டு பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். முதன் முதலாக இந்தப் புத்தகச் சந்தையில் ஸ்டால் போட்டிருக்கிறார். ஆவிகள் உலகம், அமானுஷ்ய ஆவிகள், ஆவிகளுடன் பேசுவது எப்படி, ஆக்கிரமிக்கும் ஆவிகள், ஆவிகள் செய்த அற்புத சிகிச்சைகள், தேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் என்றெல்லாம் விதவிதமான ஆவித் தலைப்புகளில் புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் பேய்த்தனமாக, பிசாசுத்தனமாக விற்கிறதா என்பது தெரியவில்லை.

பத்ரி விக்ரவாண்டியாரை நேற்று சந்தித்து உரையாடப் போவதாகச் சொல்லியிருந்தார். என்ன உரையாடினார், பேய்களும், ஆவிகளும் ஏதேனும் புத்தகங்கள் வாங்க வந்தனவா அல்லது இனிமேல்தான் வருமா என்பது இனிமேல் தான் தெரிய வரும் என நினைக்கிறேன்.

அரங்கிற்கு வெளியே டிஸ்ப்ளே செய்யப்படிருந்த விளம்பரங்கள் என்னைக் கவர்ந்தன.

                  ஓஷோ அழைக்கிறார்

                  சுஜாதாவும் தான்



இவர் புஸ்தங்களும் நல்லா போச்சாம்.. 
எவருதுன்னு புரியுதா?

தொடர்ந்து விட்டு விட்டு (என்னே ஒரு முரண்) கண்காட்சிக்குச் சென்றதில் சில புத்தகங்களை வாங்கினேன். சில வாங்க நினைத்து வாங்காமல் விட்டு விட்டேன். நான் வாங்கிய புத்தகங்கள் பற்றிய லிஸ்ட் மற்றும் புத்தகச் சந்தை பற்றிய எனது கருத்துகள் நாளை.



***********************

Wednesday, November 17, 2010

எழுதாத கதைகள்

இணையம் அறிமுகமான காலகட்டத்திலிருந்தே கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வமுண்டு. சிறுவயதில் எழுதிப் பார்த்திருக்கிறேன். பத்திரிகையிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு வெளியாகி இருக்கிறது என்றாலும் தற்போது சோம்பல் மற்றும் முனைப்பின்மை காரணமாக அவ்வப்போது எழுதிப் பார்த்து அப்படியே தொடராமல் விட்ட கதைகள் அநேகம். என்றாவது எழுதி முடிப்பேனா?... தெரியாது!

அதிலிருந்து ஒரு சில மட்டும்...


கதை - 1

கிருஷ்ணசாமிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. இதுவரை வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் இழுத்துக் கொண்டிருந்த சுவாசம் மெல்ல மெல்ல மேலேறி இப்போது தொண்டைக்குழியை அடைந்து விட்டிருந்தது. ’ஹா.. ஹா...’ என்று விநோதமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் என எல்லோரும் கண்களில் கண்ணீருடன் அவர் கட்டிலைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.

கிருஷ்ணசாமிக்கு காட்சி விரிந்தது. குடுமியும் பூணூலுமாய் ஒரு சிறு பையன் தோன்றினான். ’வா... வா...’ என்று இவரை அழைத்தான். அவன் கூடவே தலையைத் தலையை ஆட்டியபடி ஒரு மாடு நின்று கொண்டிருந்தது. கிருஷ்ணசாமி திடீரென்று அந்த மாட்டை விரட்ட, வெகுண்ட மாடு அந்தச் சிறுவனைத் துரத்த... சிறுவன் பயந்து போய், கத்திக் கொண்டே வயலில் வேகமாக ஓடி... கால் தடுக்கி மிகப் பெரிய அந்தத் திறந்தவெளிக் கிணற்றில் விழ.... மாடு திரும்பி நின்று கிருஷ்ணசாமியை முறைத்தது. மாட்டின் தலைக்கு பதில் அதில் கிருஷ்ணசாமியின் தலை தெரிந்தது. கிருஷ்ணசாமி ’ஓ’வென்று அலறினார்.

**********

கதை - 2


பீச்சில் நான் காலாற நடந்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த மனிதர் எதிரே வந்தார். அழுக்குத் தாடி. கலைந்த தலை முடி கிழிந்த ஆடை. முகம் முழுவதும் அம்மைத் தழும்புக் காயம் என அவரைப் பார்க்கவே சற்று பயங்கரமாக இருந்தது.

“தம்பி! ரொம்ப பசிக்குதுப்பா, டீக் குடிக்கவாவது எதுனா கொடேன்” என்றார்.

எனக்கு ஏனோ ஆத்திரமாக வந்தது. அதே சமயம் பரிதாபமாகவும் இருந்தது. பைக்குள் கைவிட்டேன். ஒரு முழு ஐந்து ரூபாய் நாணயம் வெளிவந்தது. அதை அவர் கையில் போடப் போனேன். அவரோ, “தம்பி, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு, ரெண்டு கையையும் நீட்டிக்கிட்டு இருக்கிறேன் பாரு,” என்றார் சிரிப்புடன்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன இது, ஏன் இவர் என்னவோ சொல்லி உளறுகிறார்.. ஒருவேளை பைத்தியமா, இல்லை குடிகாரரோ.. கஞ்சா, அபின் இது மாதிரி ஏதும் குடிப்பவரோ, போதையில் உளறுகிறாரோ?” புரியாமல் விழித்தேன்.

“நாராயணா! நாராயணா!“ என்றார் அவர் புன் சிரிப்புடன்.

நான் திகைத்தேன். “என்ன இது?, எப்படி இவருக்கு என் பெயர் தெரியும்? உண்மையில் இவர் என் பெயரைத் தான் சொல்கிறாரா, இல்லை கடவுளைக் கூப்பிடுகிறாரா? ஒன்றும் புரியவில்லையே!” அவரையே உற்று நோக்கினேன் சற்று அச்சத்துடன்.

அவர் ஒன்றும் சொல்லாமல் நீட்டிய கையை மேலும் என்னை நோக்கி நீட்டியவாறே என் கண்களை உற்று நோக்க ஆரம்பித்தார். எனக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

************

கதை - 3

நள்ளிரவு. ஊர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், உடல் முழுதும் ஈரம் சொட்டச் சொட்ட அந்த ஆலயத்தினுள் நுழைந்தாள் அவள். அங்குள்ள சிலைகளைச் ஒரு சுற்றுச் சுற்றி வந்தவள், கை கூப்பி வணங்கி விட்டு, மெள்ள தனது ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைய ஆரம்பித்தாள். 

சற்று நேரத்தில்...

அவள் இடுப்புவரை தொங்கிய அந்தக் கூந்தல் அவளை முழுமையாய் மறைந்திருக்க, மெல்ல அந்தச் சிலைகளைச் சுற்றி வர ஆரம்பித்தாள். அவள் உதடுகளில் மிகத் தீவிரமான முணுமுணுப்பு.

பதினைந்து முறை சுற்றியவள், முதல் சிலை அருகே வந்தாள். நின்றாள். கை கூப்பினாள். தான் கொண்டு வந்திருந்த கறுப்பு நிறப் பையிலிருந்து ஏதோ ஒன்றை வெளியே எடுத்தாள். அது ஒரு மாலை.  இலைகளாலும், மூலிகை மலர்களாலும் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதனை எடுத்து தனது கழுத்தில் அணிந்து கொண்டவள், அந்தச் சிலையைப் பார்த்துச் சிரித்தாள், “திருப்தியா! திருப்தியா” என்றாள் சத்தமாக. தலையைத் தலையை ஆட்டியவாறே உரக்கச் சிரித்தவள், ஒரு கறுப்பு நூல் கயிற்றை எடுத்தாள், மந்திரங்களை உச்சரித்தவாறே, அந்தச் சிலைமீது அதனைச் சுற்றத் தொடங்கினாள்.

சற்று நேரத்தில் அந்தச் சிலையின் கை, கால்கள், இடை என அனைத்தும் அந்த நூலின் கட்டுக்குள் வந்து விட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் அந்தச் சிலையைச் சுற்றி வந்து வணங்கியவள், அந்த சிலையின் அடிப்பாகத்தை அசைக்கத் தொடங்கினாள். அஷ்டபந்தனம் வைத்து, பூசப்பட்டிருந்த அது, அவ்வளவு எளிதில் அசைந்து கொடுக்கவில்லை. உடன் கத்தி போன்ற ஒன்றை வைத்து, அதனைக் கீறத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் அதன் கலவைகள் உடைந்தன. உதிர்ந்து விழுந்தன. இப்பொழுது மெல்ல அந்தச் சிலையை நகர்த்தினாள். அவள் முகத்தில் வெற்றிக் களிப்பு. சிலையை இலேசாக மேலே தூக்கினாள்.. கீழே.. அந்த இயந்திரத் தகடு வைக்கப்பட்டிருந்தது. மெல்ல கை விட்டு அதனை எடுத்துக் கொண்டவள், அதனைச் சுருட்டி, தனது அரைஞாண் கயிற்றில் முடிந்து கொண்டாள். பின் சிலையை அதே இடத்தில் வைத்தவாறே, அடுத்த சாமி சிலையை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.

*********

(தொடரும்)

Friday, October 29, 2010

முரண்


உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!

Monday, October 25, 2010

எண்ணப் போலிகள்


ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்

வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்

விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு

சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..

டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது

Monday, October 18, 2010

கவிதை மேகம்


ஒரு கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும்
புது மணப்பெண்ணின்
மோகாவஸ்தைகளாய்
நீண்டு கொண்டே
போனது என்
வார்த்தைகள்

ஒரு நல்ல கவிதை
எழுத வேண்டுமென்று
நினைத்தேன்

தலைப்பிரசவப் பெண்ணின்
இடுப்பு வலி போல
கொஞ்சம் கொஞ்சமாய்
ரம்பித்து
முடிவில்
வெளிபோந்தது
என் கவிதை
குருதி தோய்ந்த
தொப்புள் கொடியோடு
உயிரின்றி..
உணர்வின்றி...

Thursday, October 14, 2010

கவிதை


அங்கும் இங்குமாய்
சிதறிக் கிடக்கும்
ரொட்டித் துண்டுகளைப் போல
அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்!

பேப்பர் வெயிட்டையும் மீறி
காற்றில் படபடக்கும்
காகிதத்தைப் போல
என் மனது!

உத்தரவின்றி
உள்ளே வந்துவிட்டு
வெளியேறத் தவிக்கும்
தட்டாம் பூச்சியாய்
வார்த்தைகளின்றி
அலைந்து கொண்டிருக்கிறது
உள்ளுக்குள்ளேயே
ஒரு குரல்!

கனத்த மௌனத்தில்
நினைவின் நிசப்தத்தையும் மீறி
எங்கோ தூரத்தே ஒலிக்கிறது
ஒரு கூட்ஸ் ரயிலின் சப்தம்!

அறை முழுவதும்
சிதறிக் கிடக்கின்றன
உன் வார்த்தைகள்
கேட்பாரற்று!

Wednesday, October 6, 2010

வேஷம்



’இந்த .போட்டைவைப் பாருடா, பொண்ணு அம்சமா இருக்கால்ல’ என்றாள் கல்யாணி.

‘அட, நீ வேறம்மா உனக்கு வேற வேலையே இல்லயா? எப்பப் பாத்தாலும் பொண்ணைப் பாரு, போட்டோவைப் பாருன்னு இம்சை பண்ணிக்கிட்டு, லீவு நாள்ல கூட மனுஷனை கொஞ்சம் நேரம் நிம்மதியா பேப்பர் பார்க்க விடறியா நீ’  இரைந்தான் சாரங்கன்.

’ஆமாடா, நான் இம்சை பண்ணிக்கிட்டுதான் இருப்பேன். எனக்கு ஒரு நல்ல மருமக, உனக்கு ஒரு நல்ல பொண்டாட்டி அமையுற வரைக்கும் இப்படி உன்ன தொந்தரவு பண்ணிக்கிட்டு தான் இருப்பேன். இல்லன்னா ஒண்ணு பண்ணு. உங்க ஆபிஸ்ல உள்ள பொண்ணுங்கள்லயே நல்ல ஒரு பொண்ணா ஒண்ண பார்த்துச் சொல்லு, ஆக வேண்டிய மத்த விஷயங்களை நான் பார்த்துக்கறேன், என்ன சொல்ற... எனக்கும் அலைச்சல் மிச்சம். உனக்கும் தொந்தரவு இருக்காது’ கண் சிமிட்டினாள் கல்யாணி.

’அடாடா, உன் இம்சை தாங்கலியே’ சொல்லி விட்டு பேப்பரைத் தூக்கிக் கொண்டு பால்கனிக்கு ஓடினான் சாரங்கன்.

சாரங்கனுக்கு 28 வயது. பேங்கில் ஆபீசர் வேலை. நல்ல பெண்ணாய்ப் பார்த்து அவனுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் என்பதுதான் கல்யாணியின் கவலை. அதற்காக அவள் தனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்தாள். வரன் பார்க்கும் சங்கங்களில் எல்லாம் பதிவு பண்ணி வைத்திருந்தாள்.

சாரங்கன் எம்.பி.ஏ. முடித்த கையோடு பேங்கில் ஆபிசர் வேலை கிடைத்து விட்டது. இவ்வளவு நாளாக ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு தற்போது ப்ரோமஷனும் கொடுத்து சென்னை ரீஜனல் ஆபிஸிலேயே போஸ்டிங்கும் கொடுத்து விட்டார்கள். ஆபிஸிற்கு நேரத்திற்குப் போய் விட்டு நேரத்திற்கு வீட்டுக்கு வந்து விடுவான் சாரங்கன். அநாவசியமாக அங்கும் இங்கும் சுற்றும் பழக்கம் அவனுக்குக் கிடையாது. அதிக நண்பர்களும் இல்லை. தாய் மீது மிகுந்த பாசம். சிறுவயதிலேயே தந்தை இறந்து விட கல்யாணிதான் அவனுக்கு எந்த ஒரு குறையுமில்லாமல், ஏக்கம் எதுவும் வந்துவிடாமல் அன்போடு வளர்த்தாள். அவள் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தது ஒருவிதத்தில் சௌகர்யமாகப் போய் விட்டது. தன் பள்ளியிலேயே அவனைச் சேர்த்துப் படிக்க வைத்ததுடன், தன் கையோடு பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு போய், கையோடு வீட்டிற்கும் கூட்டிக் கொண்டு வந்து விடுவாள். அதனால் சாரங்கனுக்கு அம்மா என்றால் அலாதி பிரியம். அளவற்ற பாசம். அவள் மனம் நோக எதுவும், பேச மாட்டான், செய்ய மாட்டான்.

அன்றைக்கு ஆபிஸ் லீவு நாள் என்பதால் சாவகாசமாக எழுந்து கொண்டு பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தான் சாரங்கன். கல்யாணியும் ரிடயர் ஆகி இரண்டு வருடம் ஆகி விட்டது. அதிக வேலைகள் என்று எதுவும் இல்லை. அதனால் மெதுவாக எழுந்து, குளித்து, டிபன் செய்து விட்டு அவனை சாப்பிட அழைத்தாள்.

சாரங்கனும் பால்கனியிலிருந்து இறங்கி வந்தான்.

’ஐ, பொங்கலா, எனக்கு ரொம்பப் பிடிக்குமே! தொட்டுக்க என்னம்மா பண்ணியிருக்க? கொத்சு இருந்தா நல்லா இருக்குமே!’ என்றான்

‘ம், என் பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா என்ன, அதைத் தான் பண்ணியிருக்கேன். அரைகுறையாக் கொரிக்காம நல்லா சாப்பிடு ஆமா’

       ’சரி, சரி, எனக்கு சாப்பாடு போடறேன்னு பேர் பண்ணாம நீயும் உட்கார்ந்து சாப்பிடு ஆமா’ என்ற சாரங்கன், அம்மவையும் இழுத்து அருகில் உட்கார வைத்தான்.

கல்யாணி, சாரங்கனை கனிவோடு பார்த்தாள். அவள் மனம் பழைய நினைவுகளை அசை போட்டது. திடீரென்று அவள் கணவர் நாராயணன் மறைந்து விட, உலகமே அஸ்தமித்தது மாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. அப்புறம் ஒரே மகனான சாரங்கன்தான் அவள் உலகமாகிப் போனான். அவனுக்காகவே வாழ்ந்தாள். அவனை ஒரு பெரிய ஆபிசராக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவள் லட்சியக் கனவு. இதோ, இப்போது அதுவும் நிறைவேறி விட்டது. அடுத்து படித்த, பண்பான, நல்ல ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்து  விட்டால் போதும். தன் கடமை முடிந்தது என்று எண்ணிக் கொண்டாள். அவளுக்கு அவன் தான் உலகம். அவன் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்தாள் போதும், தனக்கு ஏதும் தேவையில்லை என்பதுதான் கடவுளிடம் அவளது தினசரி வேண்டுதலாக இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் மாடிக்கு போனவனை இழுத்து உட்கார வைத்தாள் கல்யாணி. ‘ இதோ பார் சாரங்கன், எனக்கும் வயசாகிக் கிட்டே போகுது. காலா காலத்துல உன்னை ஒரு பொண்ணு கையில பிடிச்சுக் கொடுக்கணும்னு நான் நினைக்குறது தப்பா? நீ அதுக்கு பிடி கொடுக்கவே மாட்டேங்கறியே, ஏன்?’ என்றாள் குரல் தழுதழுக்க.

அம்மா குரல் தழுதழுத்ததும் சாரங்கனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ‘அய்யோ அம்மா, நான் என்ன கல்யாணமே வேண்டாம்னா சொன்னேன். கொஞ்ச நாள் போகட்டும்னுதான சொன்னேன். அதுவும் இதுக்கு முன்னாடி ஊர், ஊரா சுத்திக்கிட்டிருந்தேன். இப்போதான் ஹெட்-ஆபிஸ்க்கே வந்தாச்சே. அதுனால இனிமே ஒண்ணும் பிரச்சனை இல்ல, உனக்கு பிடிச்ச நல்ல பொண்ணா பாரு, நீ சொல்ற பொண்ணு கழுத்துல நான் தாலியக் கட்டுறேன்’ என்றான்.

’சரிதான், பொண்ணு எனக்குப் பிடிச்சிருந்தா மட்டும் போதுமா, உனக்குப் பிடிக்க வேண்டாமா?’ என்றாள் கல்யாணி.

‘அம்மா உனக்குப் பிடிச்ச பொண்ண எனக்கு மட்டும் எப்படிப் பிடிக்காமப் போகும் சொல்லு’ என்று சாரங்கன் சொல்லவும் கல்யாணி நெகிழ்ந்து விட்டாள். அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

’ஆனா, அம்மா ஒரு கண்டிஷன்’ என்றான் சாரங்கன்.

‘என்ன கண்டிஷன்?’

‘ சும்மா பொண்ணு வீட்டுக்குப் போறது, பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிடறது, பொண்ண பாடச் சொல்றது... அப்புறம் போய்ட்டு தகவல் சொல்றோம்னு சொல்லிட்டு, பின்னாடி  பொண்ணப் பிடிக்கலைன்னு சொல்றது - இந்த பிஸினஸெல்லாம் வேண்டாம். நீ நல்ல பொண்ணாப் பாரு, அக்கம் பக்கத்துல நல்லா விசாரிச்சுக்கோ. நேரா பொண்ணு பார்க்கப் போறோம். அன்னிக்கே நிச்சயதார்த்தம், அப்புறம் கல்யாணம். அவ்ளோ தான். தேவையில்லாம நிறைய பொண்ணுங்களப் போய் பார்த்துட்டு, அப்புறம் அது சரியில்லை, இது சரியில்லைன்னு குறை சொல்லிட்டு... அவங்களுக்கும் மனக் கஷ்டம். எனக்கும் மனசுக்கும் சங்கடமா இருக்கும். அதுனால இந்த பஜ்ஜி, சொஜ்ஜி மேட்டர் எல்லாம் இல்லாம டைரக்டா பொண்ணப் பார்க்கறோம். கல்யாணத்தை முடிக்கறோம். சரியா?.

‘அது கொஞ்சம் கஷ்டம்டா சாரங்கா.. நீயும் கொஞ்சம் பொண்ணோட பேசி என்ன ஏதுன்னு கேட்டுக் கிட்டாதானே பின்னாடி சௌகரியமா இருக்கும்...’  இழுத்தாள் கல்யாணி.

‘தேவையில்லம்மா... எனக்கு வரப்போறவ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டு, எனக்கேத்த மாதிரி நடந்துப்பான்னு நிச்சயமா நான் நம்பறேன். அப்படி இல்லன்னாலும் அதை சரி பண்ண என்னால முடியும்னும் நினைக்கறேன். ஸோ அதைப்பத்தியெல்லாம் நீ கவலைப்படாம ஆக வேண்டிய வேலைகளைப் பார்’ என்றான் சாரங்கன்.

மகன் இந்த அளவிற்காவது இறங்கி வந்தானே என்று கல்யாணிக்கு ஒரே சந்தோஷம். தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தில் இறங்கினாள்.

***********

ஒரு சுபயோக சுபதினத்தில் சாரங்கனுக்கும் சங்கீதாவுக்கும் திருமணம் முடிந்தது. சங்கீதா எம்.ஏ வரை படித்திருந்தாள். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டிருந்தாள். சாரங்கன், கல்யாணி என இருவரிடமும் மிகவும் பணிவாகத் தான் நடந்து கொண்டாள். ஆனால் வீட்டுக் காரியங்கள் எதையும் சரிவரச் செய்யத் தெரியாமல் இருந்தாள். மிகவும் செல்லமாக வளர்ந்த பெண் என்பதால் அப்படி இருக்கிறாள், எல்லாம் போகப் போகச் சரியாகிவிடும் என்று நினைத்தாள் கல்யாணி. சாரங்கனும் அப்படியே தான் நினைத்தான்.

மாதங்கள் கடந்தன. காலையில் எழுந்து வீடு, வாசல் தெளிப்பது முதல் சமைப்பது உட்பட எல்லாவற்றையும் கல்யாணியே செய்து வந்தாள். சங்கீதா ஏதாவது செய்ய வருவாள், ஆனால் கல்யாணி விட மாட்டாள். ’நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. பாவம் உனக்கேன் இதெல்லாம், நான் தான் இருக்கேனே வெட்டியா!’ என்று சொல்லி அனுப்பி விடுவாள்.

சாரங்கனுக்குக் காபி கொடுப்பது, டிபன, சாப்பாடு, பரிமாறுவது என எல்லாவற்றையும் கல்யாணியே பார்த்துப் பார்த்து செய்வாள். சங்கீதா ஏதாவது கேட்டால், ’நான் இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்கப் போறேன், ஏதோ இருக்கற வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் என் கையால விதவிதமாச் செஞ்சு போடணும்னு ஆசைப்படறேன். அது தப்பா, தயவு செய்து அதுக்கு தடை சொல்லாதீங்க’  என்பாள்.

சாரங்கன் சமயங்களில் சங்கீதாவிடம் கேட்பான், நீ ஏன் இந்த வீட்டு  வேலையெல்லாம் செய்யக் கூடாது, பொழுது போகாமல் வீட்டில் இருக்கும் போது செய்யலாமே! என்பான்.

’என்னைச் செய்ய விட்டால் தானே உங்க அம்மா, எல்லாத்தையும் அவங்களே செஞ்சாத்தான் அவங்களுக்கு திருப்தி. என்னை என்ன செய்யச் சொல்றீங்க’ என்று அலுத்துக் கொள்வாள் சங்கீதா.

இப்படியே நாட்கள் கடந்தன. ஒருநாள் காலை... பேப்பர் படித்துக் கொண்டிருந்த சாரங்கனிடம் காபியைக் கொணர்ந்து நீட்டினாள் கல்யாணி. வாங்கி ஒரு சிப் குடித்தவன்,  ’தூ, என்ன காப்பி இது நல்லாவே இல்ல, ஒரேயடியா கசக்குது. பொடி வாசனை வேற அடிக்குது. வர வர உனக்குக் காபி போடவே தெரியலைம்மா. வயசாயிருச்சி இல்ல. எல்லாம் மறந்து போச்சு போல.’ என்றான்.

’இல்லையேடா, எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டுத் தானே கொண்டு வந்தேன். உனக்கு மட்டும் ஏன் கசக்குது?’

’அப்போ, நான் பொய் சொல்றேன்கிறியா?’  ஒரேயடியாகக் கத்தினான் சாரங்கன்.

’போதும், போதும் ஒரு சின்ன காபிக்கு எதுக்கு இத்தனை கோபம். வாக்குவாதம். வேற நல்லதா போட்டுக்கிட்டு வந்தாப் போச்சு’ சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள் கல்யாணி.

மறுநாள் காலை. டிபன் சாப்பிட உட்கார்ந்தான் சாரங்கன். கல்யாணி அவனுக்கு மிகவும் பிடித்த பொங்கல் – கொத்சுவைப் பரிமாறினாள். ’தூ... தூ... தூ.... அய்யோ, ஒரே உப்பு... அம்மா, எத்தனை தடவை சொல்றது காபி, சமையல்னு நீ பண்றது எதுவுமே நல்லால்லேன்னு. சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா. சங்கீதா, சங்கீதா’ இரைந்தான்.

துளசிக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்த சங்கீதா சத்தம் கேட்டு ஓடி வந்தாள். கல்யாணி கண் கலங்கி நின்று கொண்டிருப்பதும், சாரங்கன் சாப்பிடாமல் கை கழுவிக் கொண்டிருப்பதையும் பார்த்து அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘என்னங்க, எதுக்குக் கூப்பிட்டீங்க... ஏன் சாப்பிடாம எழுந்துடீங்க...’ என்றாள்

’ம்... என்னத்த சொல்றது காபி சரியில்ல, டிபன் சரியில்ல... வர வர சாப்பாடும் சரியில்ல... ஏண்டா சாப்பிடறோம்னு இருக்கு... ரொம்ப கஷ்டமா இருக்கு. இனிமே ஒண்ணு பண்ணு சங்கீதா. பேசாம காலையில காபிலேர்ந்து டிபன, சாப்பாடு, நைட் டின்னர்னு எல்லாத்தையும் நீயே பண்ணு. அம்மாவுக்கு வயசாயிருச்சி இல்லையா, அதான் நிதானம் தெரியல... இனிமே எல்லா காரியத்தையும் நீயே பார். நான் கிளம்புறேன்’ சொல்லி விட்டு வேகமாக அலுவலகத்துக்குச் சென்று விட்டான் சாரங்கன்.

கல்யாணிக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு நாள் தன் சமையலை ருசித்துச் சாப்பிட்டவன், காபி ஏ-ஒன் என்று புகழாரம் சூட்டியவன், அம்மா மாதிரி பொங்கல்-கொத்சு பண்ண யாராலும் முடியாது என்று உறவு வீடுகளில் சவால் விட்டவன், இப்போது தன் சமையலையே வேண்டாம் என்கிறான். கைப்பக்குவம் சரியில்லை... நிதானம் இல்லை என்கிறான், ஏன்?  – நினைக்கும் போதே அழுகையாக வந்தது கல்யாணிக்கு.
கல்யாணம் ஆனால் பையன்கள் மாறிப் போய் விடுவார்கள், பொண்டாட்டி தாசர்கள் ஆகிவிடுவார்கள் என்று அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் சாரங்கனும் அப்படி ஆகி விடுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. மனதுக்குள் அப்படியே நொறுங்கிப் போனாள்.

தினம்தோறும் காலையில் எழுந்து கொண்டதும் வேலை செய்ய கை, கால்கள் பரபரக்கும். ஆனால் காலை ஐந்து மணிக்கே எழுந்து எல்லாவற்றையும் செய்ய ஆரம்பித்திருப்பாள் சங்கீதா. முன்பெல்லாம் ஓயாது ஏதாவது வேலை கல்யாணிக்கு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது எல்லா வேலையும் சங்கீதாவே செய்வதால், இவளுக்கு வேலையே இல்லை. வாழ்க்கையே போரடிக்க ஆரம்பித்து விட்டது. மேலும் சங்கீதாவின் சுமாரான சமையலைக் கூட சாரங்கன் வாயாறப் புகழ்வதும், ’இதைச் செய்த கைக்கு வளையல் வாங்கிப் போடணும், மோதிரம் வாங்கிப் போடணும்’ என்று தன் காதுபடவே பெருமையாகப் பேசுவதும், அவன் தன்னை உதாசீனப்படுத்துகிறானோ, பாரமாக நினைக்கிறானோ என்ற எண்ணத்தை அவளுக்குத் தந்தது. இது இப்படியே தொடர்ந்தால் அவர்கள் இன்ப வாழ்விற்குக் குறுக்காகத் தான் இல்லாமல் எங்காவது சென்று விட வேண்டும் என்றும் அவள் முடிவு செய்தாள்.

அன்று இரவு... நடுநிசி கடந்திருக்கும். கல்யாணிக்குத் தூக்கம் வரவில்லை. ’எப்படி இருந்த சாரங்கன் இப்படி மாறிப் போய் விட்டான்’ என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கிக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. அப்போது அவள் அறை நோக்கி யாரோ வருவது போல் தோன்றவே, அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்.

அறை வாசலில் வந்து நின்றது..... சாரங்கன்....

’அம்மா.... அம்மா.... தூங்கிட்டியாம்மா. தூங்கும்மா... நல்லா தூங்கு. நீ. நல்லா தூங்கணும். நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு தான் நான் இப்படிப் பண்றேன். இப்படி நடந்துக்கறேன். ஆமாம்மா, உன்னை கடுமையா பேசினதுக்காக என்னை மன்னிச்சிடு. உன் சாப்பாடு சரியில்லை சொன்னதுக்காக, உன்னை உதாசீனம் பண்ணதுக்காக என்னை மன்னிச்சிரும்மா... நான் அதெல்லாம் வேணும்னு செய்யலம்மா... உன் மேல உள்ள பாசத்துல தான் செஞ்சேன். ஆமாம்மா.... இதுநா வரைக்கும் என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சே, வளர்த்தே.. எனக்காக ஓடாத் தேஞ்ச.. உன்னையே உருக்கிக்கிட்டே. ஆனா, கல்யாணம் ஆனப்புறமும் நீயே கொஞ்சம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எல்லா வேலையும் செய்யறது என் மனசுக்குப் பொறுக்கலம்மா. சங்கீதா கிட்ட எத்தனையோ தடவ சொன்னேன். அம்மாவை வேலை செய்ய விடாம, நீ செய்னு. அவளும் நீங்க அதுக்கு ஒப்புக்கல்லேன்னு சொன்னா. அது மட்டுமில்ல. இதுதான் சாக்குன்னு அவ பாட்டுக்கு எந்த வேலையும் செய்யாம டி.வி. பார்த்துட்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சிட்டா. நீயோ 60க்கு மேல வயசாகியும் ஓய்வு ஒழிச்சல் இல்லாம உழைச்சிக்கிட்டு இருந்தே...

’நீ அந்த விஷயத்துல பிடிவாதக்காரி. அன்பா அக்கறையா ஓய்வெடுத்துகோன்னு சொன்னா கேட்கமாட்டேங்கிறது எனக்கு நல்லாத் தெரியும். சோம்பேறியா இருக்கற சங்கீதாவையும் சுறுசுறுப்பானவளா ஆக்கணும். உனக்கும் நல்ல ஓய்வு கொடுத்து ரெஸ்ட் எடுக்க வைக்கணும். அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சப்போதான் இந்த ஐடியா வந்தது. உன் கிட்ட கடுமையா பேசற மாதிரி நடிச்சி உன்னை ரெஸ்ட்ல இப்போ உட்கார வச்சிருக்கேன். சங்கீதாவையும் புகழற மாதிரி பேசி அவளையும் சுறுசுறுப்பானவளா மாத்தியிருக்கேன். ஆமாம்மா, நான் போட்டது, போடறது எல்லாம் வேஷம் தான். ஆனா, அதைத் தவிர எனக்கு வேற வழி தெரியலைம்மா. என்னை மன்னிச்சிடும்மா.. அம்மா, நீ நல்லா இருக்கணும். எப்பவும் எங்க கூட துணையா இருக்கணும்மா... அதுக்காகத் தான்மா நான் அப்படி உங்கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்கிட்டேன். நான் என்னிக்கும் உன்னோட அன்பான பிள்ளைதான்மா. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்மா. ஒருத்தர்ட்ட ஒருத்தர் மனம் விட்டு பேசினா எல்லாம் சரியாகிடும். அதுவரைக்கும் இந்த வேஷம் தொடர்ந்துட்டு தான்மா இருக்கும். அதுக்காக என்ன மன்னிச்சிடு.. சொல்லி விட்டு அந்த இடம் விட்டு அகன்றான் சாரங்கன், கண்களில் கண்ணீருடன்.

கல்யாணியின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீர்.

(கடந்த ஆண்டு லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளிச் சிறப்பிதழில் வெளியான சிறுகதை - எழுதியவர் -        பா.சு.ரமணன்)

Monday, September 27, 2010

அம்மா.. அன்புள்ள அம்மா....



”சாரி... இனி பிரயோஜனமில்லே. நீங்க வீட்டுக்குக் கூட்டிப் போறது தான் பெட்டர்!’’ என்றார் டாக்டர்.

ராமச்சந்திரனுக்கு கண்கள் கலங்கியது. ‘சரிங்க டாக்டர். வேன் மட்டும் கொஞ்சம் அரேஞ்ச் பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்’ என்றான் குரல் கம்ம.

‘ஓ.கே. ஓ.கே.’ டாக்டர் நகர்ந்தார்.

சுப்ரமண்ய கனபாடிகளுக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி. இரண்டு நாளாக ஐ.சி.யூ.வில் வைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. டாக்டர் கையை விரித்து விட்டார்.

கனபாடிகளுக்கு மொத்தம் ஐந்து பெண்கள். மூன்று பிள்ளைகள். மாயவரம் பக்கத்தில் குக்கிராமம். கோயிலில் வேலை பார்த்து, வருமானம் போதாமல் சென்னைக்கு வந்து, வைதீகம் செய்து இன்று 84 வயது.

மனைவி சுமங்கலியாக எப்பவோ போய்ச் சேர்ந்து விட்டாள். பையன்கள் வளர்ந்து ஆளாகி எல்லோரும் இன்று நல்ல அந்தஸ்தில் இருக்கிறார்கள். பெண்களில் இருவர் வெளிநாட்டில். மூன்று பேர் இங்கே சென்னையிலும், கோவையிலும்.

அடி வயிற்றில் இருந்து சத்தமாக வெளி வந்து கொண்டிருந்த மூச்சுக் காற்று, இப்பொழுது நெஞ்சுக்கு வந்து விட்டிருந்தது. உறவினர்கள் எல்லோரும் அழுகையுடன் சுற்றி அமர்ந்திருந்தனர்.

‘‘ம்! நல்ல கல்யாணச் சாவு’ யாரும் அழ வேண்டாம். ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனை பண்ணுங்கோ’’ - மூத்த மாப்பிள்ளை சொன்னார்.

‘‘இன்னும் ஒரு மணி நேரம் தான் தாங்கும்’’ - ஒருத்தர் ஆரூடம் கூறினார்.

‘‘இப்படி இழுத்துண்டு இருக்கே, ஏதேனும் ஆசை இருக்கோ என்னமோ, ஒருவேளை அதை வெளிய சொல்ல முடியாமத் தவிக்கிறாரோ...’’ சந்தேகம் எழுப்பினார் ஒரு மாமி.

‘‘இருக்கும்... இருக்கும். யாராவது செத்த என்னென்னு கேளுங்களேன்’’ மூத்த மகள் பானுமதி குரல் கொடுத்தாள்.

‘‘அப்பா... என்னப்பா இது... இப்படிக் கஷ்டப்படுறியே!’’ ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறியா... நாங்க பேசறதெல்லாம் கேட்கறதா... கண்ணை உருட்டி உருட்டிப் பார்க்கறியே.. என்னப்பா வேணும் சொல்லுப்பா...’’ ராமச்சந்திரன் கண்ணீருடன் கேட்டான்.

அவன் கதறல் காதில் விழுந்தது போல் சுப்ரமண்ய கனபாடிகள் லேசாகக் கண்களைச் சுழற்றினார். தலையைத் திருப்பாமலே அங்கும் இங்கும் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தவரின் பார்வை சமையல் கட்டில் நிலைகுத்தியது.

கோமதி மாமி அழுது கொண்டிருந்தாள். தான் அழுவது யாருக்கும் தெரிந்து விடக் கூடாது, என்பது போல கதவு ஓரமாக நின்று கொண்டு அவள் அழுது கொண்டிருந்தாள்.

அந்த வீட்டின் சமையல் வேலை முதல் அனைத்து வேலைகளையும் கவனிப்பது கோமதி மாமி தான். அதுவும் சுப்ரமண்ய கனபாடிகளின் மனைவி பார்வதி போய்ச் சேர்ந்த பிறகு, குழந்தைகளை வளர்ப்பது முதல் எல்லா வேலைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்தவள் கோமதி தான். மாமிக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா, குழந்தைகள் இருக்கிறார்களா என்று ஒருத்தருக்கும் எதுவும் தெரியாது. சமையல் வேலை கேட்டு வந்தாள். தெரிந்தவர், உறவினர் எல்லோரும் வற்புறுத்தவே கனபாடிகளும் சரி என்று சம்மதித்தார்.

அன்று முதல் அந்த வீட்டில் ஒரு மனுஷியாக மாறி விட்டாள் கோமதி மாமி.

கனபாடிகளின் பிள்ளைகள் அனைவரும் அவளை பாசத்தோடு ‘‘அத்தை. அத்தை’’ என்றுதான் அழைப்பார்கள். அதற்கேற்றவாறு தான் அவளும் நடந்து கொண்டாள். தன் குழந்தைகளைப் போலவே எண்ணி அவர்களை வளர்த்தாள். ஆளாக்கினாள்.

மாமி அழுது கொண்டிருக்க... இரண்டாவது பையன் சீனிவாசன், ‘அத்தை இப்படி வாங்கோ... அப்பா உங்களாண்ட என்னவோ சொல்லணும்னு நினைக்கறார் போல இருக்கு வாங்கோ’ மாமியின் கையைப் பிடித்து கட்டிலருகே அழைத்து வந்தான்.

‘‘அப்பா எங்களையெல்லாம் அடையாளம் தெரியறதா. நாங்க சொல்றதெல்லாம் கேட்கறதா. ஏதாவது சொல்லணுமாப்பா. ப்ளீஸ் சொல்லுப்பா...’’ கண்ணீருடன் கதறினான் ராமச்சந்திரன்.

புரிந்தது போல் கனபாடிகள் தலை லேசாக அசைந்தது. மறுபடியும் ஒரு முறை கீழ் மேலாய் பார்வையைச் சுழலவிட்டார். பார்வை மீண்டும் கோமதி மாமி மேல் வந்து நிலைத்தது.

‘‘அப்பா... என்னப்பா... அத்தை கிட்ட ஏதாவது சொல்லணுமா... ப்ளீஸ் சொல்லுப்பா... கொஞ்சம் ட்ரை பண்ணுப்பா... ப்ளீஸ்...’’ சீனிவாசன் விசும்பினான்.

சுப்ரமண்ய கனபாடிகளின் தலை இலேசாக அசைந்தது. கை, கால்கள் இலேசாக விறைத்தன. மெல்ல சிரமப்பட்டு வாயைத் திறந்தார். ‘‘அத்... அத்...’’ என்றார். அதை முழுமையாகச் சொல்ல விடாமல் மூச்சுத் திணறியது. உடம்பு தூக்கிப் போட்டது. கண்களில் கண்ணீர் வழிந்தது.

‘‘சொல்லுப்பா... சொல்லுப்பா... ப்ளீஸ்’’ என்றான் மூர்த்தி.

‘‘அத்... அத்... அத்தை இல்லே... அம்மா’’ சொன்ன சுப்ரமண்ய கனபாடிகளின் பார்வை நிலைத்தது. மூச்சு ஒடுங்கியது.

அதுவரை ஒதுங்கி நின்றிருந்த கோமதி மாமி கனபாடிகளின் மார்பில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.


***********

(நன்றி : பத்திரிகையில் வெளியாகிப் பரிசு பெற்ற இச்சிறுகதையை வெளியிட அனுமதி தந்த எழுத்தாளர் ஆனந்தி மணியன் அவர்களுக்கு...)